இந்தியாவில் ஒரே நாளில் 4,14,188 பேருக்கு கொரோனா

இந்தியாவில் ஒரே நாளில் 4,14,188 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு 2வது நாளாக தொடர்ந்து தொற்று எண்ணிக்கை உச்சமடைந்துள்ளது.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் 2வது அலை பிற உலக நாடுகளை விட இந்தியாவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தொடர்ந்து ஏப்ரல் மாத முதல் வாரத்தில் இருந்து சீராக எண்ணிக்கை உயர்ந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து 2வது நாளாக இன்று உச்சமடைந்து உள்ளது. ஒரேநாளில் புதிதாக 4,14,188 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய (4,12,262) எண்ணிக்கையை விட சற்று அதிகம் ஆகும்.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 4 லட்சத்து 14 ஆயிரத்து 188 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 14 லட்சத்து 91 ஆயிரத்து 598 ஆக உயர்வடைந்து உள்ளது.

கொரோனா பாதிப்புகளால் நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 3,915 பேர் உயிரிழந்து உள்ளனர். இது நேற்றைய எண்ணிக்கையை (3,980) விட சற்று குறைவாகும். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,34,083 ஆக உயர்ந்து உள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 3 லட்சத்து 31 ஆயிரத்து 507 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 76 லட்சத்து 12 ஆயிரத்து 351 ஆக உயர்வடைந்து உள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது 36,45,164 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 16 கோடியே 49 லட்சத்து 73 ஆயிரத்து 58 ஆக உள்ளது என்று தெரிவித்து உள்ளது.

கொரோனா பரிசோதனையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நேற்றுவரை 29 கோடியே 86 லட்சத்து ஓராயிரத்து 699 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று ஒரு நாளில் மட்டும் 18,26,490 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.

Related posts