STF அதிகாரிகளின் துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் படுகாயம்

சிறப்பு அதிரடிப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் சிக்கி படுகாயமடைந்த இருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடமராட்சி கிழக்கு முள்ளி பகுதியில் இன்று காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பொலிஸாரின் கட்டுப்பாட்டை மீறி வாகனத்தில் பயணித்ததன் காரணமாக இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவத்தில் துன்னாலையைச் சேர்ந்த இருவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒருவரின் காலில் துப்பாக்கி ரவை உள்ளதால் அவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பகுதியில் மணல் கடத்தல்காரர்கள் தொடர்பில் கிடைக்கப் பெற்ற தகவல் தொடர்பில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் (STF) மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை (16) காலை வடமராட்சி முள்ளிப்பகுதியில் மணல் கடத்தலினை முறியடிப்பதற்காக யாக்கரை பகுதியில் உள்ள விசேட அதிரடிப்படை முகாமை சேர்ந்த அதிரடிப்படையினர் பதுங்கி இருந்துள்ளனர்.

இதன்போது கெப் ரக வாகனமொன்றில் வந்த குறித்த சந்தேகநபர்களை STF இனர் நிறுத்துமாறு செய்த சமிக்ஞையை மீறி செல்ல முற்பட்டுள்ளதோடு, அவர்களை நிறுத்துவதற்காக ஆணி அறையப்பட்ட பலகை உள்ளிட்ட தடைகளை STF யினர் இட்டுள்ளனர்.

ஆயினும் அதனையும் மீறி சந்தேகநபர்கள் பயணித்துள்ளதோடு, இதன்போது STF வீரர் ஒருவர் வாகனத்தால் மோதப்பட்டு காயமடைந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து தப்பிச் செல்ல முற்பட்ட குறித்த வாகனத்தின் மீது STF தரப்பினர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதில் குடும்பஸ்தர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

——-

யாழ் நகரில் நள்ளிரவு வேளை வீடு புகுந்து இனந்தெரியாத கும்பல் நடத்திய தாக்குதலை மாநகர முதல்வர் மணிவண்ணன் நேரடியாக சென்று பார்வையிட்டார்.

—–

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு வயல் வெளியில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி 3 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.

18 மாவட்டங்களுக்கு நேற்று சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டதோடு, மழை மற்றும் மின்னல் தாக்கம் ஏற்படும் என எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

முல்லைத்தீவு, தண்ணிமுறிப்பு வயல் வெளியில் விவசாய நடவடிக்கைகளில் விவசாயிகள் ஈடுபட்டிருந்த நிலையில் நேற்று மாலை கனமழையும் மின்னல் தாக்கமும் ஏற்ப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பகுதிகளில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த 3 விவசாயிகளே மின்னல் தாக்கம் காரணமாக இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் குமுழமுனை மேற்கு பகுதியை சேர்ந்த 35 வயதுடைய கணபதிப்பிள்ளை மயூரன், குமுழமுனை மத்தி பகுதியை சேர்ந்த 34 வயதுடைய சுவர்னன், வற்றாப்பளை பகுதியை சேர்ந்த 46 வயதுடைய சுஜீவன் ஆகிய குடும்பஸ்தர்களே இவ்வாறு உயிரிழந்தவர்கள் எனவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

Related posts