சீனாவை எதிர்க்க பிரதமர் மோடி பயப்படுகிறார்..

சீனாவிற்கு ஆதரவாக செயல்பட்டு, இந்திய ராணுவ வீரர்களை பிரதமர் அவமதிக்கிறார் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி புதுடெல்லியில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நமது பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், முக்கியமான பகுதிகள் குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

உண்மை என்னவென்றால் நமது நிலப்பரப்புகளை சீனாவுக்கு பிரதமர் தாரைவார்த்து கொடுத்துவிட்டார் என்பதே. பிரதமர் மோடி கண்டிப்பாக நாட்டு மக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும்.

கிழக்கு லடாக்கில் உள்ள சூழல் குறித்து நமது பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நேற்று அறிக்கை அளித்தார். தற்போது பிங்கர் 3 பகுதியில் நமது வீரர்கள் நிறுத்தப்பட உள்ளதை நாம் அறிந்துள்ளோம். பிங்கர் 4 பகுதி நமக்கு சொந்தமானது. ஆனால், அங்கு இருந்து பிங்கர் 3 பகுதிக்கு நாம் வந்துவிட்டோம். ஏப்ரல் மாதம் முதல் எல்லையில் பிரச்சினை நிலவி வருகிறது; தற்போது வரை சீனாவுடன் பேச்சுவார்த்தை மட்டுமே நடந்து வருகிறது.

நமக்கு சொந்தமான இடத்தை சீனாவுக்கு பிரதமர் மோடி விட்டுக்கொடுத்தது ஏன்? நமது தேசத்துக்கு சொந்தமான இடங்களை பாதுகாக்க வேண்டியது பிரதமரின் பொறுப்பு. அதை எப்படி செய்ய வேண்டும் என்பது அவரது பிரச்சினை. என்னுடையது அல்ல.

நமது ராணுவத்தின் தியாகத்திற்கு துரோகம் செய்கிறார். இந்தியாவில் இதை செய்ய யாரும் அனுமதிக்கக்கூடாது. சீனாவை எதிர்க்க பிரதமர் மோடி பயப்படுகிறார், சீனாவுக்கு பணிந்து செல்கிறார். சீனாவிற்கு ஆதரவாக செயல்பட்டு, இந்திய ராணுவ வீரர்களை பிரதமர் அவமதிக்கிறார்” இவ்வாறு அவர் பேசினார்.

Related posts