அங்குலம் நிலத்தை கூட சீனாவிடம் விட்டுக் கொடுக்க மாட்டோம்

ஒரு அங்குலம் நிலத்தை கூட சீனாவிடம் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

லடாக் எல்லையில் சீனாவின் அத்துமீறலை இந்திய வீரர்கள் தடுத்ததால், இருநாட்டு படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் கடந்த மே மாதம் முதல் அங்கு தீவிர பதற்றம் நிலவி வருகிறது. சர்ச்சைக்குரிய பகுதிகளில் இரு தரப்பும் தலா 50 ஆயிரம் வீரர்களையும், தளவாடங்களையும் குவித்து உள்ளன.

எனினும் இந்த படைகளை திரும்பப்பெற்று அங்கு அமைதியை ஏற்படுத்துவதற்கு இருதரப்பும் சுமார் 9 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. இதில் கடந்த மாதம் 24-ந்தேதி நடந்த 9-வது சுற்று பேச்சுவார்த்தையில், எல்லையில் இருந்து கவச வாகனங்கள் உள்ளிட்ட தளவாடங்கள் மற்றும் வீரர்களை திரும்பப்பெறுவது என இரு தரப்பும் ஒப்புக்கொண்டிருந்தன.

அதன்படி பங்கோங்சோ ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளில் இருந்து சீனா மற்றும் இந்திய முன்கள வீரர்களின் ஒழுங்கமைவு மற்றும் ஒத்திசைவு சார்ந்த படை விலக்கல் 10-ந்தேதி (நேற்று) தொடங்கியதாக சீனா தெரிவித்து உள்ளது. கடந்த 9-வது சுற்று பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட முடிவின்படி இந்த நடவடிக்கை தொடங்கியிருப்பதாகவும் சீன ராணுவ அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில் லடாக் எல்லை நிலவரம் தொடர்பாக மாநிலங்களவையில் இன்று (வியாழக்கிழமை) அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் விளக்கம் அளிப்பதாதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மாநிலங்களவையில் லடாக் எல்லை நிலவரம் தொடர்பாக ராணுவ மந்திரி ராஜ்நாத் கூறியதாவது:-

சீன எல்லையில் இந்திய வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்கள். ஒரு அங்குலம் நிலத்தை கூட சீனாவிடம் விட்டுக் கொடுக்க மாட்டோம். எல்லை பிரச்சினை தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை. எல்லையில் பதற்றத்தைத் தணிக்க பாங்காங் ஏரி அருகே படைகளை விலக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இருதரப்பு உறவுகளைப் பேணுவதில் இந்தியா எப்போதும் வலியுறுத்தியுள்ளது.

இந்தியாவின் இறையாண்மையைப் பாதுகாக்க எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள தயாராக உள்ளனர் என்பதை நமது பாதுகாப்புப் படைகள் நிரூபித்துள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Related posts