இலங்கையில் மேலும் 103 பேருக்கு கொரோனா தொற்று

இலங்கையில் மேலும் 103 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
மினுவங்கொடை தொழிற்சாலை ஊழியர்கள் இருவரும் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த 101 பேருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அதன்படி, திவுலபிட்டிய கொத்தணியில் இதுவரை பதிவாகியுள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1186 ஆக அதிகரித்துள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணியாற்றும் சிற்றூழியர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து தேசிய வைத்தியசாலையின் 3 விடுதிகள் (ward) மற்றும் ஒரு சத்திரசிகிச்சை கூடம் ஆகியன தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட விதம் குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடத்தின் மூன்றாம் ஆண்டு மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த மாணவிக்கு கொரோனா தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து பல்கலைக்கழகத்திற்கு தெரியாது என்றும் இது தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், பல்கலைக்கழக துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சுதந்த லியனகே தெரிவித்தார்.
இன்றையதினம் (10) குறித்த மாணவியை IDH வைத்தியசாலையில் சேர்க்க பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்த அவர், பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் செவிலியராக கடமையாற்றுவதாக தெரிவிக்கப்படும் குறித்த மாணவியின் தாயின் PCR பரிசோதனை முடிவுகள் இதுவரை கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
குறித்த மாணவி தங்கியிருந்த வீட்டில் (Boarding) மேலும் இரு மாணவிகள் அவருடன் தங்கியிருந்ததாக தெரிவித்த அவர், அவர்களில் ஒருவர் கம்பஹா, வியாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அவர் தெரிவித்தார்.
அவர்களின் PCR சோதனைகளின் முடிவுகளை எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்த பேராசிரியர் லியனகே, இது தொடர்பாக சுகாதார அமைச்சிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
குறித்த வீட்டில் தங்கியிருந்த மாணவிகள் மற்றும் அதே பீடத்தைச் சேர்ந்த ஏனைய மாணவர்களும், முகாமைத்துவ பீடத்தின் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஒக்டோபர் 06 முதல் பல மாணவர்கள் பல்கலைக்கழக விடுதிகளிலிருந்து திரும்பியுள்ள நிலையில், தற்போது பல்கலைக்கழக விடுதி வளாகத்தில் சுமார் 200 மாணவர்களே தங்க வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த ஒக்டோபர் 06 முதல் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள், ஒன்லைனில் இடம்பெற்று வருவதாகவும், இதன் மூலம் தேவையற்ற வகையில் பல்கலைக்கழகத்திற்குள் மாணவர்களின் நடமாட்டம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தற்போது அடையாளம் காணப்பட்ட மாணவியின் தாய் மற்றும் அவருடன் வீடொன்றில் தங்கியிருந்த ஏனைய இரண்டு மாணவர்களின் PCR சோதனை முடிவுகளுக்கு அமைய மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பேராசிரியர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
களனி பல்கலைகழக மாணவி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சமூக விஞ்ஞான பீடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவரே இவ்வாறு வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மினுவங்கொட பகுதியை சேர்ந்த குறித்த மாணவியின் தந்தை மினுவங்கொட கைத்தொழிற்சாலையின் ஊழியர் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மாணவியுடன் தங்கியிருந்த மேலும் இரு மாணவிகள் பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பல்கலைகழகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை கொரோனா தொற்றாளர் ஒருவர் இனங்காணப்பட்ட ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைகழகத்தின் கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் நாளை (12) தீர்மானிக்கப்பட உள்ளதாக பல்கலைகழக துணை வேந்தர் தெரிவித்துள்ளார்.
அதுவரையில் எந்தவொரு மாணவரும் பல்கலைகழக வளாகத்திற்கு வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார்.

Related posts