மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா மருத்துவமனையில்

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் பல்வேறு மாநில மந்திரிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் என மக்கள் பிரதிநிதிகளையும் கொரோனா பாதிப்புகள் விட்டு வைக்கவில்லை. இதனிடையே கடந்த 2ந்தேதி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு (வயது 55) கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனை தொடர்ந்து அமித்ஷா தன்னை தனிமைப்படுத்தி கொண்டார்.

பின்னர் அரியானாவின் குருகிராம் நகரில் உள்ள மேதந்தா மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இதன்பின்னர் அமித்ஷா, தனது டுவிட்டரில் கொரோனா பாதிப்பில் இருந்து தான் குணமடைந்து விட்டதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலையில் அவருக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து தற்போது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

——

ராணுவ மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ள பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருப்பதாக மருத்துவமனை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது. அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும், வென்டிலேட்டர் ஆதரவில்தான் தொடர்ந்து இருப்பதாகவும் கூறியுள்ள டாக்டர்கள், எனினும் பிரணாப் முகர்ஜியின் முக்கிய உறுப்புகளின் இயக்கம் மற்றும் சிகிச்சை செயல்பாடுகள் அனைத்தும் தொடர்ந்து சீராக இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தனர்.

—–

இந்தியாவில் அதிக அளவாக ஒரே நாளில் மேலும் 55,079 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 27,02,743 ஆக உள்ளது. அதேபோல், கொரோனா தொற்றுக்கு மேலும் 876 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 51,797 ஆக உள்ளது. கொரோனா தொற்று பாதிப்புடன் 6,73,166 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். மேலும் 19,77,780 பேர் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.

Related posts