நிறைவான குடும்பங்களை உருவாக்குவதே எமது இலக்கு!

கிராமங்கள் நிறைவான கிராமங்களானால் தான் அதில் வாழும் மக்கள் முன்னேற்றமடைவார்கள் என முன்னாள் விவசாயப் பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளருமாகிய அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார் .

இது தொடர்பாக மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், பாராளுமன்ற உறுப்பினர் பொறுப்புக் கூறுபவராக இருக்க வேண்டும். அந்த வகையில் நான் கடந்த 4,1/2 வருடங்களில் 6,597 வேலைத் திட்டங்களை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்துள்ளேன். அதனூடாக 4 இலட்சம் பயனாளிகளை உருவாக்க முடிந்தது . குறிப்பாக பிரதி விவசாய அமைச்சராக 5 மாத காலம் இருந்தேன். அந்த 5 மாதத்தில் கிட்டத்தட்ட 6 ஆயிரம் இலட்சம் ரூபாவை விவசாயிகளின் முன்னேற்றம் மற்றும் ஊக்கத்திற்காக கொண்டு வந்து சேர்க்க முடிந்தது .

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி தேர்தலின் பின் புதிய அரசாங்கம் உருவாக்கப்பட்ட பின்னர், எனக்கு யாழ். மாவட்டத்தின் அபிவிருத்தியைக் கட்டி எழுப்புவதற்கான முக்கியமான ஓர் பதவியைத் தந்தார்கள். யாழ். மாவட்டத்தில் உள்ள 435 கிராம சேவகர் பிரிவுகளிலும் மக்களுக்கான வேலைத் திட்டம் நடைபெற வேண்டும் என்பதே எமது எண்ணம். அந்த அடிப்படையில் சகல கிராமங்களிலும் அபிவிருத்தியை ஏற்படுத்தும் நோக்கில் நிறைவான கிராமம் என்ற திட்டம் ஏற்படுத்தப்பட்டது.

முக்கால்வாசி மக்கள் வாழ்வது கிராமங்களில் தான். அதன் அடிப்படையில் கிராமங்கள் நிறைவான கிராமங்கள் ஆனால் தான் அதில் வாழும் மக்கள் முன்னேற்றமடைவார்கள். அப்போது தான் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்ல வாய்ப்புக் கிடைக்கும் . இதன் மூலம் குடும்பங்கள் நிறைவானதாக மாறும்.

நிறைவான கிராமம் வேலைத் திட்டம் ஆரம்பித்து ஒவ்வொரு கிராமங்களுக்கும் தலா 20 இலட்சம் அடிப்படையில் 435 கிராம அலுவலர் பிரிவுகளுக்குமாக 8,700 இலட்சம் ரூபாவை கொண் டுவந்து சேர்க்க முடிந்தது. இவ்வாறு ஒவ்வொரு வருடமும் இப்படியான நிதிகளைக் கொண்டு வந்து கிராமங்களை நிறைவான கிராமங்கள் ஆக்குவதே எமது நோக்கம் என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.

Related posts