சீனாவைக் கடுமையாக விமர்சித்த அமெரிக்கா

இந்திய ராணுவ வீரர்கள் மீதான சீன ராணுவத்தின் தாக்குதலை அமெரிக்கா கடுமையாக விமர்சித்துள்ளது.
கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் திங்கள்கிழமை இரவு இந்திய, சீன ராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவத்தினர் மரணம் அடைந்தனர். அதேபோல, சீன ராணுவம் தரப்பில் 35 பேர் வரை உயிரிழந்திருப்பதாக அமெரிக்க உளவுத்துறை தகவல் தெரிவிக்கிறது.
ஆனால், இதுவரை சீனா எந்தவிதமான அதிகாரபூர்வமான தகவலையும் வெளியிடவில்லை.
இந்த நிலையில் சீனத் தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் பலியானதற்கு இரங்கல் தெரிவித்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, தற்போது சீனாவின் தாக்குதலைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ கூறும்போது, “சீன கம்யூனிஸ்ட் கட்சி முரட்டுத்தனத்தைக் கையாள்கிறது. உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட ஜனநாயக நாடான இந்தியாவுடனான எல்லைப் பதற்றங்களை சீனா அதிகரித்துள்ளது.
மேலும், தென்சீனக் கடலை ராணுவமயமாக்குகிறது. சட்டவிரோதமாக அங்கு அதிகமான நிலப்பரப்பைக் கோருகிறது. முக்கியக் கடல் பாதைகளில் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.
இத்துடன் கரோனா வைரஸ் குறித்து பொய் கூறி அதனைப் பிற நாடுகளுக்குப் பரவச் செய்தது. அதன் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் இறந்துவிட்டனர். உலகப் பொருளாதாரம் அழிந்துவிட்டது” என்று விமர்சித்துள்ளார்.

Related posts