அஜித்துக்கு வில்லன்; விஜய்க்கு திகைப்பு

அஜித்துக்கு வில்லனாக நடிக்கவும், விஜய்யுடன் நடித்தால் அந்தத் திகைப்பு வானளவு இருக்கும் என்றும் பிரசன்னா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கரோனா வைரஸின் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது மத்திய அரசு. இதனால் திரையுலகப் பிரபலங்கள் தொடங்கி அனைவருமே வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். இதனால் அவர்கள் தங்களுடைய ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ரசிகர்களுடன் கலந்துரையாடி வருகிறார்கள்.

மேலும், சில பிரபலங்கள் தொண்டு நிறுவனங்கள் மூலமாக ட்விட்டர் தளத்தில் கலந்துரையாடி வருகிறார்கள். அதன் மூலம் கரோனா பாதிப்புக்கு நிவாரண நிதி திரட்டி வருகிறார்கள். இதன் அடிப்படையில் நடிகர் பிரசன்னா இன்று (ஏப்ரல் 1) மாலை தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் எழுப்பும் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

அதில் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு பிரசன்னாவின் பதில்களும்:
அஜித் படத்தில் நடித்தால் எந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பம்?
அவரை எனக்கு நிறையப் பிடித்தாலும் அதே அளவு அவருக்கு வில்லனாகவும் நடிக்க விருப்பம்.
யாரிடமும் உதவி இயக்குநராக இல்லாத ஒரு அறிமுக இயக்குநர் உங்களிடம் வந்து கதை சொன்னால் நடிப்பீர்களா?
எல்லாம் கதையைப் பொறுத்துதான். மேலும் இன்னும் சில விஷயங்களையும் பரிசீலிக்க வேண்டும். ஆனால் கண்டிப்பாக அறிமுக இயக்குநர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.

ஊரடங்கை எப்படிக் கையாள்கிறீர்கள்?
மகிழ்ச்சியாகக் குழந்தைகளுடன் கழித்து வருகிறேன். ஓவியம் வரைகிறேன், விஹானுடன் ஏபிசிடி, 123 எழுதுகிறேன். பொம்மைகள் வைத்து விளையாடுகிறேன். எனது மகள் ஆத்யந்தாவோடு சேர்த்து எனது செல்ல நாய்கள் பாப்லோவும், மார்லோவும் என்னை எப்போதும் ஓய்வெடுக்க விடுவதில்லை.
அல்லு அர்ஜுன் பற்றி ஒரு வார்த்தை?
அவர் தனித்துவமானவர். அலா வைகுந்தபுரமுலோ படத்தை நான்கு முறை பார்த்தேன்.
விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு வந்தால் எப்படி இருக்கும்?
விஜய்யுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் அந்தத் திகைப்பு வானளவு இருக்கும்.

துப்பறிவாளன் 2 இயக்குநர் விஷால் பற்றி சில வரிகள்…
பல வருடங்களாக ஒரு நல்ல நண்பராக எனக்குத் தெரியும். இன்னும் அவரை இயக்குநராகப் பார்க்கவில்லை. அவருக்கு என் வாழ்த்துகள்.
மாஃபியாவில் வழக்கமான ஒரு வில்லன் கதாபாத்திரத்தை உங்கள் நடிப்பின் மூலமாக ஸ்டைலாகக் காட்டினீர்கள். இயக்குநர் சொன்னதைத் தாண்டி நீங்கள் ஏதாவது கூடுதலாகச் சேர்த்தீர்களா?
அது மிகவும் எளிமையான கதை என்பது எனக்குத் தெரியும். இயக்குநர் கார்த்திக் நரேனிடம் ஒரு பார்வை இருந்தது. எனது சின்ன அனுபவத்தைக் கொண்டு அதை ஒரு வழக்கமான வில்லன் போல ஆக்காமல் பார்த்துக் கொண்டேன். அதை நான் ஒரு கதாநாயகன் போலத்தான் பார்த்தேன். திரையில் நான்தான் நாயகன் என்று நம்பினேன்.

உங்கள் வாழ்க்கையில் மிகச்சிறந்த தருணம்?
இரண்டு தருணங்கள் உள்ளன. விஹான் பிறக்கும்போது, ஆத்யந்தா பிறக்கும்போது என் கைகளில் அவர்களைக் கொடுத்த தருணங்கள்.

Related posts