இன்றைய (08.03.2020) முக்கிய உலக செய்திகள் எழுத்து வடிவம்..!

சீனாவின் தென்கிழக்கே புஜியானில் குவாங்சு நகரில் லிசெங் பகுதியில் ஓட்டல் ஒன்று உள்ளது. இந்த ஓட்டலில் 80 அறைகள் உள்ளன. இவற்றில் சில அறைகளில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களை தங்க வைத்து கண்காணித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்றிரவு இந்த ஓட்டல் திடீரென இடிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் 4 பேர் பலியாகி உள்ளனர். 71 பேர் சிக்கி உள்ளனர். அவர்களில் 42 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். இதுபற்றி விசாரணை மேற்கொண்ட போலீசார் ஓட்டல் உரிமையாளரை கைது செய்துள்ளனர்.

இதன்பின் மீட்பு பணியில் 800க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் 11 தேடுதல் மற்றும் மீட்பு பணியினர் மற்றும் மீட்பு பணிகளுக்காக 7 நாய்களும் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.

சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்டு அங்கிருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரசால் அந்நாட்டில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். உலகம் முழுவதும் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

—–

சிரியாவில் தலைநகர் டமாஸ்கசில் இருந்து ஹோம்ஸ் பகுதியை நோக்கி எரிபொருள் நிரம்பிய லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. வழியில் இரண்டு மிக பெரிய பேருந்துகள் மீது திடீரென லாரி மோதி விபத்திற்குள்ளானது.

இதன்பின் தொடர்ந்து 15 வாகனங்கள் மீதும் மோதியுள்ளது. இந்த சம்பவத்தில் பேருந்துகளில் பயணம் செய்த ஈராக் நாட்டை சேர்ந்த பயணிகள் உள்பட 32 பேர் கொல்லப்பட்டனர். 77 பேர் காயமடைந்தனர்.

இதனை அடுத்து மீட்பு குழுவினர் அந்த பகுதியில் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். சிரியாவில் ர‌ஷியா ஆதரவு பெற்ற அதிபர் ப‌ஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே 9 ஆண்டுகளாக போர் நீடித்து வருகிறது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் தங்களது இருப்பிடங்களை விட்டு இடம் பெயர்ந்து வேறு இடங்களுக்கு தஞ்சம் புகுந்து வருகின்றனர்.

——-

சீனாவில் கடந்த வருடம் டிசம்பர் மாத இறுதியில் ஹுபெய் மாகாண தலைநகர் உகானில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. உகானில் அதிக பாதிப்பு ஏற்பட்டு உள்ளதுடன் தொடர்ந்து உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவை தொடர்ந்து இந்த வைரஸ் தென்கொரியா மற்றும் ஈரானில் வேகமுடன் பரவி வருகிறது. வைரஸ் பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தென் கொரியாவில் மேலும் புதிதாக 93 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 7,134 ஆக உயர்ந்துள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரசால் உலகம் முழுவதும் சுமார் 90 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts