தொண்டமனாறு சிறுவர் பூங்காவில் 100 கிலோ கேரளா கஞ்சா

தொண்டமனாறு சிறுவர் பூங்காவில் கடத்துவதற்கு தயாரான நிலையிலிருந்த 100 கிலோ கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன், அதனை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்று மதுவரித் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.

இந்த கஞ்சா கடத்தல் முறியடிப்பு இன்று அதிகாலை 4.30 மணிக்கு முன்னெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

சங்கானை மதுவரி நிலை அத்தியட்சகர் சஞ்ஜய் சிறீமன்ன தலைமையிலான பிரிவினரே இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

தொண்டமனாறு சிறுவர் பூங்காவுக்கு கஞ்சா பார்சல்களை கடத்துவதற்கு தயார்படுத்திக் கொண்டிருந்த போது மதுவரித் திணைக்களத்துக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

பலாலியைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டார். சந்தேக நபரை மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட கஞ்சா போதைப்பொருளும் நீதிமன்றில் பாரப்படுத்தப்படும் என மதுவரி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேவேளை, அண்மைய நாள்களில் யாழ்ப்பாணக் குடாநாட்டில் 600 கிலோவுக்கு மேற்பட்ட கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-யாழ். நிருபர் பிரதீபன்-

Related posts