ஓலைக்குடிசை குடும்பங்களுக்கு கட்சி பேதமின்றி நிரந்தர வீடு

நாட்டில் ஓலைக் குடிசைகளில் வாழும் அனைவருக்கும் ஓட்டு வீடுகளில் வாழும் உரிமையை பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கமாகுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

“உங்களுக்கு வீடு- நாட்டுக்கு நாளை” வீட்டுத் திட்டத்தின் கீழ் நாட்டில் வீடுகள் இல்லாத அனைவருக்கும் வீடுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் நாடளாவிய ரீதியில் உள்ள 14,000 கிராம சேவை பிரிவுகளில் நடைமுறைப்படுத்தப்படும் ‘உங்களுக்கு வீடு நாட்டுக்கு நாளை’ வீட்டு திட்டத்தின் கீழ் குருநாகல் மாவட்டத்தில் கிரிபாவ பிரதேச செயலக பிரிவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள வீட்டுத் திட்டத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். மேற்படி வேலை திட்டத்தின் கீழ் நாட்டில் அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் இந்த வீட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

நாட்டில் அனைத்து ஓலை வேயப்பட்ட வீடுகளும் ஓடுகள் உள்ள வீடுகளாக உருவாக்குவதே எமது நோக்கமாகும். ஐந்து வருடங்கள் இதற்காக காத்திருக்க முடியாது. நாம் 14,000 கிராம சேவகர் பிரிவுகளில் 14,000 இற்கும் அதிகமான வீடுகளை குறுகிய காலத்தில் அமைப்போம்.

இந்த வேலைத் திட்டமானது சிங்களம், தமிழ், முஸ்லிம் என்ற பேதங்கள் இன்றி அனைவருக்கும் வீடுகள் வழங்கப்படும். அதேபோன்று பொதுஜன பெரமுனவா, ஐக்கிய தேசியக் கட்சியா, அல்லது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியா என நாம் எவரையும் பார்ப்பதில்லை. எவராயினும் ஓலைக் குடிசையில் இருப்பாரானால் அவருக்கு ஓட்டு வீட்டை உருவாக்கிக் கொடுப்போம்.

30 வருட யுத்தத்தினால் அகதி முகாம்களில் வாழ்ந்த இலட்சக்கணக்கான தமிழ்,முஸ்லிம் மக்களுக்கு நாமே வீட்டைப் பெற்றுக்கொடுத்தோம். அது தான் இலங்கை வரலாற்றில் மேற்கொள்ளப்பட்ட பாரிய வீடமைப்பு அபிவிருத்தி திட்டமாகும். அவ்வாறான திட்டத்தை நடைமுறைப்படுத்திய நாம் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவது எமக்கு கடினமல்ல. தாம் பிறந்த ஊரிலேயே கூலிக்கு தங்கியிருப்பவர் போல் உள்ளவர்களுக்கு வீடுகளைப் பெற்றுக் கொடுக்கும் திட்டத்தை நான்கு வருடங்களில் நாம் நிறைவு செய்வோம். இது அரசியல் நோக்கத்திற்காக மேற்கொள்ளும் நோக்கமல்ல. மக்களுக்கான திட்டம்.

பாராளுமன்ற தேர்தல் வருகின்றது. எம்மிடம் தற்போது பெரும்பான்மை அற்ற அரசாங்கமே உள்ளது. நான் பிரதமராக இருந்தாலும் எமக்கு 96 உறுப்பினர்களே உள்ளனர். அதனை கருத்திற்கொண்டே நாம் செயற்படுகின்றோம். எதிர்வரும் தேர்தலில் நாம் 3/2 அதிகாரத்தை பெற்றுக்கொள்வோம். நாம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலேயே இருந்தோம். எம்மை கட்சியிலி்ருந்து வெளியேற்றிய பின் நாம் பொதுஜன பெரமுனவை அமைத்து முன்னேற்றமடைந்துள்ளோம். அனைத்து கட்சிகளையும் இணைத்துக்கொண்டு அடுத்துவரும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகவுள்ளோம் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

Related posts