உன்னதத்தின் ஆறுதல்! வாரம் 20. 3 ( பொங்கல் சிறப்பு செய்தி )

இயற்கையின் ஆசீர்வாதமும், தேவனுக்கு நன்றியும்.

சகோதரன். பிரான்ஸ்சீஸ் அந்தோனிப்பிள்ளை.

ரெகோபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.

வாசகநேயர்கள் அனைவருக்கும் உள்ளம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். பொங்கல் என்பது தம்மை வாழவைக்கும் கடவுளுக்கு நன்றியுடன் படைக்கும் முதற்பலனாகும்

அவர் தீயோர் மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார். மத்தேயு 5:45

நாம் வாழும் இந்த உலகத்தில் சகலஉயிரினங்களும் தேவன் படைத்த படைப்பால் கிடைக்கும் சகல நன்மைகளையும் ஆசீர்வாதங்களையும் அனுபவித்து மகிழ்ந்து வருகின்றன. குறிப்பாக சகல மனிதர்களும் அவர்கள் நல்லவர்களோ, கெட்டவர்களோ எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும், தேவன் படைத்த இயற்கையின் ஆசீர்வாதங்களை எவ்வித வேறுபாடுமின்றி அனுபவித்து வருகின்றனர்.

சூரியன், சந்திரன், காற்று, மழை, பனி, கடல், ஆறு, குளம், காடு, மேடு ஆகிய அனைத்திலும் இருந்து தேவனின் படைப்பால் கிடைக்கும் நன்மைகளையும் எவ்வித வேறுபாடின்றி தாம்படைத்த மக்கள், தங்கள் வாழ்க்கையில் பெற்று வாழத்தக்கதாக தேவன் சகலரையும் ஆசீர்வதித்துள்ளார்.

இந்த மிகப்பெரிய தேவனின் அன்பை இயேசு மலைப்பிரசங்கத்தில் தெளிவாக கூறுகிறார். அவர் தீயோர் மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப் பண்ணுகிறார். மத்தேயு 5:45.

பரலோக இராட்சியத்தையும், அதன் நீதியையும், அதன் தன்மையையும் தம்மைத் தேடிவந்த பாமரமக்களுக்கு தெளிவு படுத்தும்போது, தேவன் தாம்படைத்த எல்லா மக்களையும் நேசிக்கிறார் என்றும், மக்கள் தேவனின் அன்பை, அவரின் தன்மையை அறியாமல் வாழ்ந்து வருகிறார்கள் என்பதையும் அந்த மக்களுக்கு தெரியப் படுத்தினார்.

அவருடைய வெளிச்சம் யார்மேல் உதிக்காமல் இருக்கிறது? சூரியனின் ஒளியை அல்லது, வெளிச்சத்தை தேவன் படைத்த சகல ஜீவராசிகளும் எங்கிருந்தாலும் கண்டுகொள்ள, அடைந்து கொள்ளக் கூடியதாக உள்ளது. இதனை வேதம் நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்து உண்டாகி சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கி வருகிறது என வெளிப்படுத்துகிறது. யாக்கோபு 1: 17.

இந்த மகாபெரிய உண்மையை அறிய மனதற்ற மக்களாக நாம் வாழ்வது எவ்வளவு வேதனைக்குரியது. அத்துடன் இந்த பெரிய உண்மைக்கு புறம்பாக அதனை மறந்து, மறைத்து, மறுதலித்து வாழ்வது இன்னும் வேதனைக்குரியது. இந்த வேதனையை தாம்படைத்த மக்கள் அடையக்கூடாது என்பதற்காக 2000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த இயேசுபிரான் மக்களுக்கு போதித்தார். இந்த இயற்கையின் ஆசீர்வாதங்கள் தேவனிடத்தில் இருந்து எமக்கு வருகிறதென்பதையும் இந்த இயற்கையின் ஆசீர்வாதங்களால் தேவன் சகல மனிதரையும் ஆசீர்வதிக்கிறார் என்பதையும் இன்று நாம் இந்த தியானத்தினூடாக அறிந்து கொள்ளக்கூடியதாக உள்ளது.

இன்று இவ்விதமாக தேவனுடைய இயற்கையின் நன்மைகளையும், ஆசீர்வாதத் தையும் நாள்தோறும் பெற்று வாழும் நாம், தேவனால் ஆசீர்வதிக்கப்பட்ட மக்கள் என்பதை எப்போதாவது நினைத்து தேவனுக்கு நன்றி கூறியிருக்;கிறோமா? இல்லை. காரணம் இவற்றை நாம் தேவனுடைய ஆசீர்வாதமாக நினைத்துப் பார்ப்பதில்லை. இதனால்தான் தேவனுக்கு நன்றி செலுத்தும் பழக்கம் எம்மிடத்தில் காணப்படுவது இல்லை.

ஏதாவது நமக்கு கிடைத்துவிட்டால் நாம் அதைத்தான் ஆசீர்வாதம் என நினைத்து கடவுளுக்கு நன்றி செலுத்துகிறோமோ தவிர, நாள் தோறும் தேவனுடைய இயற்கையின் படைப்புக்களினால் அடையும் ஆசீர்வாதங்களுக்கு நன்றி செலுத்துவது கிடையாது.

தேவனுக்குப் பிரியமான பிள்ளைகளே, நமது தேவன் தாம் படைத்த மக்களை ஆசீர்வதித்து மகிழும் ஓர் அன்பான தெய்வம் என்பதை ஒரு நாளும் மறக்க வேண்டாம். இதை நாம் 3யோவான் வசனம் 2 இல் காணலாம். பிரியமானவனே உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாக இருக்கும்படி வேண்டுகிறேன். பிரியமானவனே உன் ஆத்துமா வாழ்கிறதுபோல எனக்குறிப்பிடுவதில் இருந்து எல்லா ஆசீர்வாதமும் ஆத்துமாவுடன் தொடர்புடையது என அறியக் கூடியதாக உள்ளது.

அதாவது அனைத்து ஆசீர்வாதங்களோடும் வாழவேண்டும் என்ற ஓர் நிலையை வேதம் எமக்கு வெளிப்படுத்துகிறது. ஆகவே கடந்த காலங்களில் தேவனுடைய ஆசீர்வாதத்தின் தன்மைகளை அறியாமல் பல வேதனைகளை மனதிலும், உடலிலும், உள்ளத்திலும் சுமந்து வாழ்ந்த வாழ்க்கையில் இருந்து, தேவன் தினமும் ஆசீர்வதிக்கும் நன்மைகளை நினைத்து அவருக்கு நன்றி செலுத்தி வாழ முற்படுவோம். அப்போது நாம் ஓர் புதிதான மன அமைதியை எமது அன்றாட வாழ்க்கையில் கண்டுகொள்ளலாம்.

அன்பான இயேசுவே, இன்று நீர் உமது படைப்பில் உள்ள இயற்கையின் ஆசீர்வாதத்தைக்குறித்து அறிந்து கொள்ளக்கூடிய ஓர் சூழ்நிலையை எனக்கு தந்ததற்காக உமக்கு நன்றி அப்பா. இதுவரை காலமும் இந்த ஆசீர்வாத்தைக்குறித்து அறியாமலும், அடைந்த ஆசீர்வதத்திற்கு நன்றி கூறாமலும் வாழ்ந்து விட்டேன். அதற்காக மன்னியும். இன்றிலிருந்து தினமும் நான் அடையும் சகல நன்மைகளுக்கும் உமக்கு நன்றி செலுத்தி வாழவும், தேவன் விரும்புவது போல ஆத்துமா வாழ்வது போல சுகமாக வாழவும் என்ற உமது வாழ்த்துதலுக் கேற்றபடி வாழ உதவி செய்யும் படியாக இயேசுவின் நாத்தினால் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே ஆமென்.

கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.

Bro. Francis T. Anthonypillai. Rehoboth Ministries – Praying for Denmark.

Related posts