இலங்கையில் காலை நேர தமிழர் அரசியல் முக்கிய செய்தி 22.12.2019 ஞாயிறு

இலங்கை தமிழரசு கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றிய இரா.சம்பந்தன், தாம் சர்வதேச சமூகத்திடமிருந்து எழுத்து மூலமான உத்தரவாதங்களைப் பெற்றிருப்பதாகக் கூறுகின்றார்கள். அவ்வாறாயின், அந்த எழுத்து மூலமான உத்தரவாதங்கள் என்ன என்பதை சம்பந்தன் வெளிப்படுத்தத் தயாரா என ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமசந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

தமிழரசு கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவு விழாவில் சம்பந்தன் ஆற்றிய உரை தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவ் அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது,

சம்பந்தன் தமிழ் மக்கள் வழங்கிய ஆணைக்கு விசுவாசமாக நடந்துகொண்டாரா? தமிழ் மக்களுக்கு உரித்தான உரிமைகள் எதனையாவது பெற்றுக்கொடுத்தாரா? கடந்த நான்கரை வருடங்களாக அவர் எடுத்த முடிவுகள் அனைத்தும் தோல்வியில் முடிந்ததற்கான காரணத்தைப் பரிசீலித்தாரா? அதிலிருந்து பாடங்கள் எதனையும் கற்றுக்கொண்டாரா?

இப்பொழுது மீண்டும் ஒருமுறை முழுமையான ஆணை வேண்டுமெனக் கேட்கிறார். ஒரு பகுதி கூட யாருக்கும் போய்விடக்கூடாது என்றும் கூறுகிறார். இத்தகைய புதிய ஆணையினூடாக எதனையாவது சாதிப்பதற்கான திட்டங்களோ, வழிகாட்டல்களோ, அதற்கான வியூகங்களோ உங்களிடம் இருக்கின்றதா?

விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டது நல்ல விடயமாக இருக்கலாம்’ என்ற ஒரு கருத்தையும் குறிப்பிட்டிருக்கிறார்.

விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டது நல்லதென்று சம்பந்தன் கருதுவாரானால் விடுதலைப் புலிகள் மௌனிக்கப்பட்டதன் பின்னரான கடந்த பத்து வருடத்தில் அவர் எதனைச் சாதித்தார்?.

விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டது நல்லது என்று கூறுவதானது ஆயுதப் போராட்டம் அழிக்கப்பட்டது நல்லதொரு விடயமாக இருக்கலாம் என்றே பொருள்படும். ஆயுதப் போராட்டம் என்பது சிங்கள-பௌத்த மேலாதிக்க சக்திகளிடமிருந்து தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்கான போராட்டமே தவிர, அது ஒரு பயங்கரவாத நடவடிக்கையல்ல.

வெளிநாட்டு நீதிமன்ற வழக்குகளில் கூட விடுதலைப் புலிகள் உரிமைகளுக்காகப் போராடுகின்ற அமைப்பே தவிர பயங்கரவாத அமைப்பல்ல என்று குறிப்பிட்டிருக்கின்றார்கள். ஆகவே இதில் எது சரி என்பதை சம்பந்தன் தெளிவுபடுத்த வேண்டும்.

விடுதலைப் புலிகள் மட்டுமன்றி, ஏனைய விடுதலை அமைப்புகளும்கூட, தமிழ் மக்கள் தலைநிமிர்ந்து வாழ்வதற்காக தமது இன்னுயிரை ஈந்திருக்கிறார்கள். பல்வேறு தியாகங்களைச் செய்திருக்கிறார்கள். அவர்களின் தியாகங்களின் மீது நின்று தான் நாம் தமிழ் மக்களின் உரிமைகள் குறித்து குரல்கொடுக்கின்றோம் என்பதை மறந்துவிடக்கூடாது.

நீங்கள் சொல்வது அத்தனையும் சரியென்று நினைக்காதீர்கள். உங்களது ஒவ்வொரு நடவடிக்கைகளையும் தமிழ் மக்கள் மிகவும் அவதானமாக அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனை உணர்ந்து நீங்கள் கருத்துக்களை வெளியிடுவது நல்லது. மக்களைத் தொடர்ந்தும் ஏமாற்ற முடியும் எனக் கருத வேண்டாம்.

உங்களது உதடுகள் ஐக்கியத்தை உச்சரிக்கின்ற போதிலும் உங்களது தன்னிச்சையான செயற்பாடுகள் எப்பொழுதும் ஐக்கியத்திற்குக் குந்தகமாகவும் எதிராகவுமே இருக்கின்றது. உங்களது செயற்பாடுகளும் அணுகுமுறைகளுமே ஒரு மாற்றுத் தலைமைக்கான அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.

——

இலங்கையில் ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வு வரும்வரை பாதுகாப்பு கருதி இங்கு வரமுடியாதவர்களுக்கு இந்திய அரசாங்கம் இரட்டை பிரஜாவுரிமை செய்து கொடுக்க வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் ஊடகவியலாளரை சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிறிகாந்தா தலைமையிலான குழு புதிய கூட்டணியில் இணையக் கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றதா என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது,

விக்கினேஸ்வரன் ஐயாவின் தலைமையில் கொள்கை சார்ந்த மாற்றுத் தலைமைக்கான கூட்டமைப்பை உருவாக்குவதற்கான பல சந்திப்புக்கள் நடைபெறுகின்றது. அதில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை உருவாக்குவது, யாப்பை உருவாக்குதல், கொள்கை சார்ந்து மக்களுக்கான புதிய அரசியல் தலைமை ஒன்றை உருவாக்குவது தொடர்பாக நாங்கள் நீண்ட நாட்களாக விக்கினேஸ்வரன் ஐயாவுடன் ஒன்றாக பயணித்துக் கொண்டிருக்கின்றோம். இந்த பயணத்தில் எமது கொள்கைகளை ஏற்றுக் கொண்டு வருபவர்கள் இணைந்து பயணிக்கலாம். குறிப்பாக சிறிகாந்தா, சிவாஜிலிங்கம் போன்றவர்களும் எமது இந்த கூட்டோடு இணைந்து பயணிப்பார்கள்.

இதன்போது, தமிழ் நாட்டில் உள்ள தமிழ் அகதிகள் தொடர்பாக உங்களது நிலை என்ன என ஊடகவியலாளர் கேள்வி எழுப்பிய போது,

இந்த நாட்டை விட்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து தமிழ் நாட்டில் பல்வேறு முகாம்களில் இருக்கும் எங்களுடைய அகதிகள் பலர் இந்த நாட்டுக்கு திரும்ப இருக்கிறார்கள். இன்னும் சிலர் நாட்டுக்கு திரும்ப முடியாத நிலையில் இருக்கிறார்கள். இடம்பெயர்ந்து சென்றவர்களது காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளது. பலருக்கு குடியிருப்பதற்கான காணிகள் இல்லை. ஏற்கனவே இங்கு குடியேற வந்தவர்களுக்கான வீட்டுத்திட்டங்கள், காணிகள், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. அவர்கள் நாடு திரும்ப வேண்டும். அவர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.

ஏற்கனவே வந்தவர்களுக்கே வசதிகள் செய்து கொடுக்கப்படாத நிலையில் அங்கு இருப்பவர்கள் இங்கு வந்து என்ன செய்ய முடியும் என்ற ஒரு பிரச்சினை இருக்கிறது. இந்த நிலையில் இந்தியாவின் மத்திய அரசு இந்தியாவில் இருக்கும் அகதிகளுக்கு குடியுரிமை வழங்க முடியாது என தெரிவித்துள்ளது. எங்களைப் பொறுத்த வரை இலங்கையில் ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வு வரும்வரை பாதுகாப்பு கருதி இங்கு வரமுடியாதவர்களுக்கு இந்திய அரசாங்கம் இரட்டை பிரஜாவுரிமை செய்து கொடுக்க வேண்டும்.

வவுனியா விசேட நிருபர்

Related posts