இன்றைய முக்கிய இலங்கை செய்திகளின் தொகுப்பு.. 19.12.2019 வியாழன்

கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று காலை (19) முற்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க எதிர்வரும் 24 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நேற்று (18) மாலை கைது செய்யப்பட்டு இன்று (19) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க கொழும்பு நீதவான் நீதிமன்றில் சற்றுமுன்னர் முற்படுத்தப்பட்டுள்ளார்.

2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்று தொடர்பில் முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு சட்டமா அதிபரினால் கொழும்பு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு பெற்றுக் கொடுக்கப்பட்ட ஆலோசனையின் படி முன்னாள் அமைச்சர் நேற்று மாலை கைது செய்யப்பட்டு கொழும்பு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.

இதன்போது, அவரை இன்று வரையில் விளக்கமறியில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

கவனயீனத்துடன் வாகனத்தை செலுத்தி நபரொருவரை படுகாயமடையச் செய்தமை மற்றும் வீதி விபத்தின் போது வேறு ஒரு நபரை சாரதியாக அடையாளப்படுத்தியதாக முன்னாள் அமைச்சருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

———

இலங்கைக்கான சுவிஸ் தூதரக அதிகாரி கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன சுவிஸ்சர்லாந்தின் வெளிவிவகார அமைச்சர் இக்னேசியோ காசியசை தெளிவுப்படுத்தியுள்ளார்.

சுவிஸ் வெளிவிவகார அமைச்சரை நேற்று பிற்பகல் (18) தொலைப்பேசியில் அழைத்து இலங்கை வெளிவிவகார அமைச்சர் இது தொடர்பில் தெளிவுப்படுத்தியதாக அமைச்சு அறிவித்துள்ளது.

அரசாங்கத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியமை தொடர்பில் குற்றவியல் தண்டனை சட்டத்தின் 120 ஆம் மற்றும் 190 பிரிவுகளுக்கு அமைய கைது செய்யப்பட்டுள்ளதாக தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட கானியா பெனிஸ்டர் பிரான்ஸ்சிஸ் என்பவர் இலங்கை பிரஜை என்பதால் இலங்கை சட்டங்களுக்கு ஏற்ப அவருக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.

அவருக்கு தேவையான அனைத்து சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவரின் உரிமைகளை பாதுகாக்கப்பதாகவும் வெளிவிவகார அமைச்சர் சுவிஸ்சர்லாந்தின் வெளிவிவகார அமைச்சரிடம் எடுத்துரைத்துள்ளார்.

குறித்த பெண் அதிகாரி தொடர்பான விசாரணைகள் தேசிய மற்றும் சர்வதேச தரத்துக்கமைய முன்னெடுக்கப்படுவதாகவும் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன கூறியுள்ளார்.

சுவிஸ்சர்லாந்தின் வெளிவிவகார அமைச்சு அண்மையில் வெளியிட்டிருந்த அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் மேற்படி கருத்தை தெரிவித்துள்ளார்.

சம்பவம் நடைபெற்றதாக கூறப்படும் தினம் முதல் கானியா பெனிஸ்டர் பிரான்ஸ்சிஸ் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலைப்படுத்தப்படும் வரையான காலப்பகுதியில் எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் சர்வதேச தரத்துக்கமைய முன்னெடுக்கப்படுவதாகவும் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்த சுவிஸ் வெளிவிவகார அமைச்சர் இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் நீண்ட கால உறவை கருத்திற்கொண்டு இந்த சம்பவம் தொடர்பில் விரைவான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதோடு அதற்கு தேவையான சகல ஒத்துழைப்புகளை வழங்குவதாகவும் குறிப்பிட்டதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சுவிஸ் தூதரக அதிகாரி இன்று அங்கொடையில் உள்ள மனநல நிறுவகத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவிற்கு அமையவே அவர் அந்த நிருவகத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.

——–

அரிசியை பதுக்கி வைப்பவர்கள் மற்றும் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

——-

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுவிட்சர்லாந்து தூதரக பெண் அதிகாரி கானியா பென்னிஸ்டர் பிரான்சிஸ் அங்கொடை தேசிய மனநல வைத்தியசாலைக்கு இன்று மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இன்று அவரை அங்கொடை வைத்தியசாலையில் மேலதிக பரிசோதனைகளுக்காக அனுமதிக்குமாறு கடந்த தினம் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

——-

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தை நீக்குவதற்கு ஆதரவளிக்க மாட்டோமென பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாசவின் பெயர் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நேற்றுமுன்தினம் முதல் முறையாக அவர் மக்கள் சந்திப்புகளில் ஈடுபட்டிருந்தார்.

கொலன்னாவையில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய பின்னர் கோட்டையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டார். இந்நிகழ்வில் கருத்து வெளியிட்ட அவர்,

அமெரிக்காவுடனான மில்லேனியம் செலேன்ஜ் கோப்பரேஷன் உடன்படிக்கையை கைச்சாத்திடமாட்டோமென்றே தற்போதைய ஆட்சியாளர்கள் தேர்தல் காலத்தில் உறுதிமொழிகளை வழங்கினர். ஒப்பந்தத்தை இல்லாது செய்ய பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கத் தயாராக உள்ளோம். ஜனாதிபதித் தேர்தலின் அரசாங்கம் அளித்த உறுதிமொழியை காப்பாற்ற வேண்டும். அரசாங்கத்தின் நல்ல திட்டங்களுக்கு ஆதரவு வழங்க தயாராகவுள்ளோம்.

எதிர்க்கட்சியை ஒரு முற்போக்கான சக்தியாக வழிநடத்தவே விரும்புகிறேன். அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை இரத்துச் செய்ய மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றுக்கொள்ள அரசாங்கம் விரும்புகிறது. ஆனால், அதற்கு நாம் ஆதரவளிக்க தயாராகவில்லை. இந் நடைமுறையை விடுத்து இந்த அரசாங்கம் தேர்தலின்போது வழங்கிய அனைத்து உறுதிமொழிகளையும் செயற்படுத்த ஆதரவு வழங்குவோம் என்றார்.

——-

அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெய்து வந்த தொடர் மழை ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் கடந்த இரு தினங்களாக கடும்மழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் கணிசமான பகுதிகளில் நேற்று காலை முதல் நண்பகல் வரை தொடர்ச்சியான மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் மாவட்டத்தின் தாழ் நிலப் பகுதிகள், வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. நம் நாட்டின் மிகப் பெரிய நீர்த்தேக்கமாகக் கருதப்படும் இங்கினியாகல, சேனநாயக்க சமுத்திரத்தின் நீர்மட்டம் 86.6அடியைத் தாண்டியுள்ளதாகவும் அது 110அடிகளை தாண்டிய பின்னரே வான் கதவுகள் திறக்கப்படும் எனவும் மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் சுகத கமகே தெரிவித்தார்.

மேலும் இத் தொடர்ச்சியான மழையினால் மல்வத்த, நிந்தவூர், காரைதீவு, அட்டாளைச்சேனை, இறக்காமம், அக்கரைப்பற்று, திருக்கோவில், உஹன, தமன பிரதேசங்களின் தாழ்வயல் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் விவசாயத் திணைக்களத்தின் உயர் அதிகாரி தெரிவித்தார்.

இந்த மழையின் தாக்கத்தினால் அம்பாறை நகரிலுள்ள மாவட்ட அரச அலுவலகங்களின் ஊழியர்களின் வரவும் நேற்று மிகவும் குறைவாகவும் காணப்பட்டதுடன் நேற்று நண்பகல் (புதன்கிழமை) வரை வானம் இருள் சூழ்ந்து மப்பும் மந்தாரமுமாகக் காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன் மகாஓயா, ரம்புக்கன்ஓயா நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் மகாஓயா பகுதியின் தாழ்நிலங்கள் நீரில் மூழ்கி காணப்படுவதாகவும் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அதிகாரி தெரிவித்தார்.

Related posts