ரஜினி அரசியல் கட்சியின் பெயர் சித்திரை மாதம் ?

ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சியின் பெயரை வரும் சித்திரை மாதம் அறிவிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கடந்த 23 ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரசிகர்கள் சந்திப்பை ரஜினிகாந்த் நடத்தினார். அப்போது தான் அரசியலுக்கு வருவதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த அறிவிப்பை வெளியிட்டு, 1½ ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்காதது அவரது ரசிகர்கள் மத்தியில் சற்று ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் அளித்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டசபை தொகுதி இடைத்தேர்தலிலும் எந்த முடிவையும் அறிவிக்காமல் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு மவுனத்தையே பரிசாக தந்தார்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் தாம் தொடங்க உள்ள அரசியல் கட்சியின் பெயரை வரும் சித்திரை மாதம் அறிவிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

கட்சி பெயரை அறிவிப்பதற்கான முன்னேற்பாடுகளில் அவர் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கியிருப்பதாகவும், அதன் காரணமாகவே தமிழருவி மணியன் உள்ளிட்டோருடன் அண்மையில் ஆலோசனை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இவற்றின் எதிரொலியாகவே தர்பார் பட விழாவில் ரசிகர்கள் தம் மீது வைத்துள்ள நம்பிக்கை வீண்போகாது என அவர் பேசியதற்கு காரணம் கூறப்படுகிறது.

தற்போது உள்ளாட்சித் தேர்தலுக்கும் அதே போன்ற அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளார் ரஜினி.

போயஸ் கார்டன் இல்லத்தில் தமிழருவி மணியன் உள்ளிட்ட சில முக்கிய பிரமுகர்களுடன் அண்மையில் ரஜினிகாந்த் நீண்ட நேரம் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. அப்போது, கட்சியின் பெயரை அறிவிப்பது, அரசியல் கட்சியை எப்போது தொடங்குவது என்பன பற்றியெல்லாம் விவாதித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி வரும் 2020-ம் ஆண்டு சித்திரையில் கட்சியின் பெயரை அறிவித்து அதன் பின்னர் கட்சியை தொடங்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ரசிகர்கள் முன்னிலையில் ரஜினிகாந்த் தனது கட்சியின் பெயரை அறிவிக்க உள்ளார்.

2021-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு ரஜினி மக்கள் மன்றத்தினர் ஏற்கனவே தீவிரமாக செயல்பட தொடங்கி உள்ளனர்.

மக்கள் மன்றத்துக்கு உறுப்பினர்களை சேர்ப்பது, நலத் திட்டங்களை மேற்கொள்வது என ரஜினிகாந்தின் ரசிகர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள்.

உறுப்பினர் சேர்க்கையும் வேகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சட்டமன்ற தேர்தலை சந்திப்பது எளிதாகவே இருக்கும் என்று ரஜினிகாந்த் நினைக்கிறார்.

அதே நேரத்தில் கூட்டணி சேர்ந்து மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்கிற எண்ணம் ரஜினி, கமல் இருவரது மனதிலுமே உள்ளது. எனவே சட்டமன்ற தேர்தலில் இருவரும் இணைந்து செயல்பட கூடுதல் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Related posts