பிரிட்டனின் பிரபுக்கள் இருக்கும்வரை உனக்கென்ன குறை சக்கைபோடு

மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தமை அரசியலமைப்புக்கு முரண்பட்டதாகக் காண முடியவில்லையென ஐக்கிய இராச்சியத்தின் பாராளுமன்ற உறுப்பினரான நெஸ்பி பிரபு தெரிவித்தார். ‘

இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தமை அரசியலமைப்புக்கு முரணானதென அந்தப் பாராளுமன்றத்தின் உறுப்பினரொருவரான சேர். ஹீகோ ஸ்வெயாரினால் தெரிவிக்கப்பட்ட கருத்து குறித்து தம்மால் திருப்தியடைய முடியாதென நெஸ்பி பிரபு தெரிவித்திருக்கிறார்.

ஒருநாட்டின் தீர்மானங்கள் எடுக்கப்படும் போது அரசியலமைப்புக்கு முரணானதா, இல்லையா என்பதை அறிவிப்பதற்கு வெளிநாட்டில் எவருக்கும் உரிமை கிடையாதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த நெஸ்லி பிரபு கூறியிருப்பதாவது:

“இலங்கையில் இடம்பெற்றுள்ள சம்பவம் எதுவுமே அரசியலமைப்புக்கு முரணானதாக என்னால் பார்க்க முடியாது. என்றாலும் அதனை புதுமையான செயலாகவே பார்க்க வேண்டியுள்ளது. ஐக்கிய இராச்சியத்தில் கூட இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. நாம் பாராளுமன்ற காலத்தை முழுமையாக நிறைவேற்றாத பல சந்தர்ப்பங்கள் உள்ளன. இவ்வாறான சம்பவங்கள் உண்டு. சில சந்தர்ப்பங்களில் மாற்றங்கள் ஏற்படத்தான் செய்கின்றன.

இந்தச் சம்பவத்துடன் சம்பந்தப்பட்ட நபர்கள் குறிப்பாக ஜனாதிபதி நாட்டின் நலனைக் கருத்திக் கொண்டு செயற்படுவாரென்று நான் நம்புகின்றேன். இலங்கையின் ஜனாதிபதிதான் அந்த நாட்டின் நிறைவேற்றதிகாரம் கொண்டவர். அவர் தேர்தல் ஒன்றின்போது தெரிவு செய்யப்பட்டவராவார். அப்படியான ஒருவர் நாட்டின் நலனுக்காக செயற்படுவார் என்று நம்புகின்றேன். நான் பல சந்தர்ப்பங்களில் இலங்கை ஜனாதிபதியைச் சந்தித்திருக்கின்றேன். அவர் புத்திசாதூரியமான ஒரு நபராவார்.

நான் இலங்கை அரசியலமைப்பை படித்தது கிடையாது. ஒவ்வொரு சட்டத்தரணிகளும் ஒவ்வொரு விதமாகக் கருத்துக் கூறுகின்றனர். இது இயற்கையானது.

நாட்டில் நடப்பதை யாப்புக்குட்பட்டதா, இல்லையா என்பது குறித்து கருத்துத் தெரிவிக்க வெளிநாட்டவருக்கு எந்தவிதமான உரிமையும் கிடையாது. முன்னாள் அமைச்சர் இலங்கையில் நடந்தது யாப்புக்கு முரணெனக் கூறியிருப்பதன் மூலம் தேவையற்ற பிரச்சினையொன்றை கிளப்பியுள்ளார்.

அது ஐக்கிய இராச்சியத்தின் அரசியல் யாப்பல்ல. எமக்கு எமது யாப்பிருக்கிறது. எனது 50 வருட கால சேவைக்காலத்தில் நான் மிகவும் பொறுப்புடன்தான் செயற்பட்டுள்ளேன்.

நான் எந்தச் சந்தர்ப்பத்திலும் ஒரு தரப்புக்கு ஆதரவாக செயற்பட்டது கிடையாது. பிரசாரங்கள் கூட செய்தது கிடையாது. எமது நண்பர்களும் அப்படி நடந்துகொள்வார்கள் என்று நம்புகின்றேன்.”

Related posts