தம்பி விஜய் வந்தால் வரவேற்பேன்: கமல் பேட்டி

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக சொல்லி இருக்கிறாரே?

தம்பிக்கு ஆர்வம் இருந்தால் வரட்டும்.

உங்கள் பாணியில் ஊழலை ஒழிப்பேன் என்கிறாரே?

அது நல்ல பாணிதானே.

விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பீர்களா?

கண்டிப்பாக வரவேற்பேன். அவர் சொன்னப்படி ஊழலுக்கு எதிராக என்பதை ஊர்ஜிதப்படுத்திவிட்டால் கண்டிப்பாக சகோதர மனப்பான்மையுடன் வரவேற்பேன்.

உங்கள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட கிராமசபையின் தாக்கம் என்ன?

நல்ல கேள்வி, கேள்வியே எங்களுக்கு தேவையானது. கிராமசபையின் சக்கரம் தரையில் அழுத்தமாக பதியவைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 6 ஆயிரம் 7 ஆயிரம் அளவுக்கு தொட்டுக்கொண்டிருக்கிறோம். அதை 12,533 அளவில் கொண்டுச்செல்லவேண்டும்.

அதை செய்துவிட்டால் அனைவருக்கும் தெரியக்கூடிய மாற்றத்தை செய்ய முடியும். ஏனென்றால் சட்டமன்றத்திற்கு இணையான அளவு பலம் கொண்டது கிராம சபை அதை மக்களும் நம்ப வேண்டும்.

பலவித எதிர்ப்புக்களிடையே 3 ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு ஒப்புதல் வாங்கப்பட்டுள்ளதே?

பிரச்சினையே அதுதான், இதைத்தான் ஸ்டெர்லைட் விவகாரத்திலும் கூறுகிறோம். யாரிடம் ஒப்புதல் வாங்கப்பட்டுள்ளது? மக்கள் இருக்கக்கூடிய இடத்தில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய இடத்தில் மக்களிடம்தானே பேச வேண்டும். அதைவிடுத்து எங்கோ அலுவலகத்தில் பேப்பரை நகர்த்துவது எப்படி சரியாக இருக்கும்.

தேர்தல் வந்தால் பூத் கமிட்டி அமைக்கும் அளவுக்கு தொண்டர்கள் உங்களிடம் இல்லை என சில அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்களே?

அவர்களுக்கெல்லாம் பதில் அந்த கமிட்டி இயங்கும்போது தெரியும். நாங்கள் அழுத்தமாக மெல்ல மெல்ல அடியெடுத்து வைக்கிறோம். பணத்தைக்கொடுத்து சரி செய்ய வேண்டும் என்கிற நிலையை தவிர்க்கிறோம்.

7-ம் தேதி ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது என்ன மாதிரி ஏற்பாடு செய்யப்பட வேண்டும்?

முந்தி எடுத்ததுபோல் இல்லாமல் நல்ல முறையில் ஏற்பாடு செய்யவேண்டும்.

Related posts