எதிரணியினரின் சதிக்கு அஞ்சப்போவதில்லை

எதிரணியினர் எத்தகைய சதியை மேற்கொண்டாலும் அவற்றை ஒதுக்கி மக்களுக்கு சேவையாற்ற முடிந்துள்ளது. நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் நாம் முன்னெடுக்கும் திட்டங்களை எவராலும் தடுக்க முடியாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பிம்ஸ்டெக் தலைவராக எமது ஜனாதிபதி நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறான பெறுபேறுகளை கண்டு இந்தக் குழு பீதியடைந்து எமது திட்டங்களை குழப்ப முயன்று வருவதாகவும் அவர் கூறினார். பதுளை – செங்கலடி வீதியின் பிபிலையில் இருந்து செங்கலடி வரையான பகுதியை அபிவிருத்தி செய்யும் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்,

இத்தனை காலமும் நாம் மக்களின் ஏச்சுப் பேச்சுக்களை கேட்டாலும் மக்களுக்கு வழங்க வேண்டிய சேவைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றோம். இந்த வருடத்தில் கைவீசி பணியாற்றுமாறு அமைச்சர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன் என்றும் கூறினார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர், கடந்த மூன்று வருட காலத்தில் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் துரித அபிவிருத்தி பணிகளை செயல்படுத்த நடவடிக்கை எடுத்தோம். இந்த பணிகளை தொடர்ந்து முன்னெடுத்து 2025 இல் செல்வந்த நாடாக எமது நாட்டை கட்டியெழுப்ப இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த செங்கலடி பாதையை புனரமைப்பதனூடாக உல்லாசப் பயண துறைக்கு பெரும் நன்மை கிடைக்கும். அதன் மூலம் மொனராகலை, மட்டக்களப்பு, பதியதலாவ உள்ளிட்ட பிரதேசங்கள் விரைவான வளர்ச்சியடையும் மட்டக்களப்பு விமான நிலையத்தை புதுப்பித்து உள்ளூர் விமான சேவையை ஆரம்பிக்க இரண்டு தேசிய விமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது. மத்தள விமான நிலையம் இவ்வருட இறுதியில் பூர்த்தி அடைந்த பின்னர் மத்தள விமான நிலையத்திலிருந்து இரண்டு மணித்தியாலத்துக்கும் குறைந்த நேரத்தில் பதியதலாவ, அறுகம்பை போன்ற இடங்களை சென்றடையலாம்.

எந்தவொரு அரசாங்கமும் ஆட்சிக்கு வந்த நாள் தொடக்கம் நாட்டை அபிவிருத்தி செய்ய விரும்பும். ஆனால் எமக்கு கடனுடன் கூடிய நாட்டையே பொறுப்பேற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அன்று எம்மால் கடன் தவணையையோ வட்டியையோ செலுத்த முடியாதிருந்தது. ஒரு திட்டத்தை ஆரம்பிக்க நாம் பெற்ற கடனின் வட்டியையும் தவணைப் பணத்தையும் செலுத்தமுடியாது போனால் அந்த திட்டம் நாட்டைப் பாதிக்கும். எமக்கிருந்த சவால் நாட்டை எப்படியாவது முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதாகும். நாம் எடுத்த கடினமான முடிவுகளால் தற்போது கடனை அடைக்கவும், நாட்டை நிர்வகிக்கவும் தேவையான நிதி பெறப்பட்டுள்ளது.

எம்மால் கடனை செலுத்த முடியுமென மக்களுக்குத் தெரியும். நாம் அதற்காக கஷ்டமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. வற் வரி அதிகரிப்பை யாரும் விரும்பமாட்டார்கள். வற் வரியை விதிப்பதா அல்லது நாடு பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைவதை பார்த்துக்கொண்டிருக்க வேண்டுமா? அதில் ஒன்றையே நாம் தேர்ந்தெடுக்க முடியும். அதன்படி மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் வற் வரியை அதிகரிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. தற்போது நாட்டின் பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளது. நாட்டின் வருமானம் நாட்டை நடத்திச் செல்வதற்கு போதாமையினால் குறிப்பிட்ட காலத்துக்கு முன்னரே அவர்கள் தேர்தலை நடத்தினார்கள். 2013 ஆம் ஆண்டு நாட்டின் வருமானம் 1137 பில்லியன் ரூபாவாகும். ஆனால் கடனை செலுத்த 1162 பில்லியன் ரூபா தேவைப்பட்டது. ஆகவே முன்னதாக தேர்தலை நடத்தியதையிட்டு நாம் ஆச்சரியப்படவில்லை.

நாம் இத்தகைய சவால்களை அறிந்தே நாட்டை பொறுப்பேற்றோம். தேவையான பணத்தை நாம் தற்போது பெற்றுள்ளோம். கடந்த 03 வருடங்களையும் மிகவும் சிரமமாகவே கழித்தோம். ஆனால் அந்த 03 வருடங்களில் பாரிய பணிகளை ஆற்றியுள்ளோம்.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு 26000 மில்லியன் ரூபா கடன் இருந்தது. கடந்த அரசாங்கத்தின் செயலினால் நாம் பில்லியன், மில்லியன் அளவிலான கடன்களைப் பற்றியே பேச வேண்டியுள்ளது.

இருதய நோயாளிகளுக்கு இலவசமாக ஸ்டென்ரை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்தோம். பல மருந்துகளின் விலைகளை குறைத்துள்ளோம். புற்றுநோயாளர்களுக்கு வழங்கிய 15 இலட்சம் ரூபாவை அவர்கள் வாழும் காலம்வரை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். தற்போது எமக்கு ஜி.எஸ்.பி. சலுகை கிடைத்துள்ளது. அதன் மூலம் எமது நாட்டின் வருமானம் அதிகரிக்கும். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். இவற்றையெல்லாம் பொருளாதாரத்தை மேம்படுத்தவே செயல்படுத்துகின்றோம். ஆனாலும் நாம் இன்னும் சிரமமான காலப் பகுதியிலிருந்து முற்றாக மீளவில்லை. இன்று உலகளாவிய ரீதியில் பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. எல்லா நாடுகளினதும் பணத்தின் பெறுமதி டொலரின் பெறுமதியோடு வீழ்ச்சியடைந்துள்ளது. எவ்வளவு சவால்கள் சிரமங்கள் ஏற்பட்டாலும் நாம் பாரிய அபிவிருத்திப் பணிகளை நிச்சயமாக மேற்கொள்வோம்.

நாம் மேற்கொள்ள வேண்டியது நாட்டின் ஏற்றுமதியை அதிகரிப்பதாகும். 2025 ஆம் ஆண்டளவில் பணக்கார நாடாக இலங்கையை உருவாக்குவதே எமது நோக்கமாகும்.

ஏற்றுமதி மூலம் நாட்டின் வருமானத்தை அதிகரிக்க வேண்டும். கல்வித் துறையிலும் நாம் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம். முன்னேறிச் செல்ல வேண்டிய பாதையை நாம் உங்களுக்கு காட்டியுள்ளோம். அதனால் எதிர்தரப்பார் தற்போது பீதி அடைந்துள்ளார்கள். நாட்டை விற்பது, இராணுவ வேட்டை என பகிரங்கங்கமாக போலி கோஷங்களை எழுப்பி மக்களை திசைதிருப்ப முனைகின்றார்கள். இவர்கள் என்ன சீர்குலைவை செய்தாலும் அவற்றைப் பொருட்படுத்தாது நாம் மக்களுக்கு நல்ல பெறுபேறுகளைப் பெற்றுக்கொடுத்துள்ளோம்.

எம்மை உலகம் ஏற்றுக்கொள்ளவில்லை என அவர்கள் கூறினாலும் எமது ஜானதிபதி பிம்ஸ்டெக் மகாநாட்டின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். எமது திட்டங்களை முறியடிக்க சிலர் முயற்சி செய்கின்றார்கள்? நாம் அதற்கு இடமளிக்க வேண்டுமா?

நாம் நாட்டுக்காக வேலை செய்திருந்தால் எதிர்வரும் தேர்தலில் மக்கள் எமக்கு வாக்களிக்கட்டும் இல்லையென்றால் வேறு தரப்பினருக்கு வாக்களிக்கட்டும் ஆனால் எமது ஆட்சி காலத்தில் நாங்கள் மேற்கொள்ளும் திட்டங்களை ஏன் சீர்குலைக்கின்றார்கள்? நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் நாம் மேற்கொள்ளும் திட்டங்களை யாராலும் நிறுத்த முடியாது.

Related posts

Leave a Comment