மன்மதன் பாஸ்கி ‘கலங்கரை’ திரைப்படத்துடன் வருகிறார்

பிரான்ஸில் ‘நதி’ குறும்படத்துடன் ஆரம்பித்த மன்மதன் பாஸ்கி
‘கலங்கரை’ திரைப்படத்துடன் வருகிறார்

ஈழத்திருநாட்டின் வட புலத்தில் கூத்துக்கலை கொலு வீற்றிருக்கும் ஊர்களில் வட்டுக்கோட்டையும் குறிப்பிடத்தக்கது.

வடமோடி, தென்மோடி, மலையகத்தில் காமன் கூத்து போன்று வட்டுக்கோட்டைப் பிரதேசமும் வட்டுக்கோட்டைக் கூத்து என்ற மரபைப் பின்பற்றி வருகிறது.

இங்கு சிந்து நடைக் கூத்தான காத்தவராயனும் ஆடப்படுவது உண்டு.

கூத்துக்கலையில் புகழ் பெற்ற பல கலைஞர்கள் வட்டுக்கோட்டைக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

வட்டுக்கோட்டையில் பிறந்து அங்கேயே கலைத்துறையில் கால் பதித்து, புலம் பெயர்ந்து பிரான்ஸ் தேசத்தில் காலூன்றி கலைத்துறையில் குறிப்பாக திரைப்படத்துறையில் வேரூன்றி நிற்கும் மன்மதன் பாஸ்கி இன்றைய கலையரங்கத்தில் மாண்பேற்றப்படுகிறார்.

சிறுவனாக இருக்கும் பொழுதே நாட்டுக்கூத்துக்கள் நடைபெறும் இடங்களை வட்டமிட்டே வாழ்க்கை நகர்ந்தது.

விதம் விதமான கூத்துக்கள் நடைபெறும். சிறு வயது, அவை விளங்கா விட்டாலும் இசை, பாட்டு என்பன இளமையிலேயே மனதில் பதிவாகிவிட்டன.

ஆர்வத்துடன் ஓடித்திரிந்த இந்தச்சிறுவனை அவதானித்த ஓவியர் பாரி, தனது நெறிப்படுத்தலில் ‘கேணல் கிட்டு’ நினைவு நாடகம் ஒன்றில் நடிக்க வைத்தார்.

இன்றைய திரைப்படக் கலைஞன் பாஸ்கியின் கலைத்துறை இப்படித்தான் ஆரம்பித்தது.
ஒரு போட்டிக்காக நடைபெற்ற நிகழ்வு, இதற்குப் பரிசிலும் பெற்றுக்கொண்டார்.

மன்மதன் பாஸ்கியின் முழுமையான கலை வெளிப்பாடு என்பது பிரான்ஸ் நாட்டிலே தான் நிகழ்ந்தது – நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

1995ல் பிரான்ஸ் நாட்டில் புகலிடம் தேடிக்கொண்ட பாஸ்கி, பிரான்ஸில் ஆரம்பத்தில் பாடகனாக வலம் வந்தார்.

சுழிபுரத்தைச்சேர்ந்த கிற்றார் வாத்தியக் கலைஞர் பொன்.குமார், பாஸ்கியைச் சந்திக்கும் வேளைகளிலெல்லாம் பாடகர், வாத்தியக் கலைஞர்கள் தேவை இசைக்குழு ஆரம்பிக்கப் போவதாகக் கூறியுள்ளார்.

1998ல் ‘தமிழீழ இசைக்குழு’ ஆரம்பிக்கப்பட்ட பொழுது அதில் பொன்.குமார், தமிழ்ச்செல்வன், நிரு, கவிதா, ஈஸ்வரி, சதா, பாஸ்கி, ஒலியமைப்பாளர் அருள் ஆகியோர் அங்கம் பெற்றனர்.

‘தமிழீழ இசைக்குழு’ மாவீரர் நாள் நிகழ்விலும் இசை நிகழ்ச்சி நடத்தியது.
ட்றம்ஸ் வாத்தியக் கலைஞர் நிருவிடமிருந்து, பாஸ்கி ட்றம்ஸ் இசைக்கப் பயின்று கொண்டார். பின்னர், ட்றம்ஸ் வாத்திய அடிப்படையை பிரெஞ்சு இசைக்கலைஞரிடமும் கற்றுக்கொண்டார்.

எஸ்.எஸ்.தில்லைச்சிவத்தின் ‘ஈழநிலா’ இசைக்குழுவிலும், பாஸ்கி சிறிது காலம் ட்றம்ஸ் வாத்தியம் இசைத்தார்.

பிரான்ஸில் ஓர் இசைக்கலைஞனாக கலைப்பயணத்தை ஆரம்பித்த பாஸ்கி, சக இசைக்கலைஞராக விளங்கிய சாரங்கன் உடனான நட்பினால், ரி.ரி.என் தொலைக்காட்சியில் சுதன்ராஜ் இயக்கிய ‘படலைக்குப் படலை’ தொடரின் பார்வையாளராக இருந்தார்.

திடீரென ஒரு பாத்திரத்துக்கு நடிகரின் தேவை ஏற்பட்டது.

சாரங்கனின் சிபார்சில் ‘படலைக்குப் படலை’ தொடரில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார்.
இந்தத் தொடர் மூலம் பாஸ்கி புகழ் பெற்றார். தொலைக்காட்சி பார்வையாளர்களின் அபிமானத்தைப் வென்றார்.

2005ம் ஆண்டு பிரான்ஸிலுள்ள ‘நல்லூர் ஸ்தான்’ விளையாட்டுக்கழகம் குறும்படப் போட்டி ஒன்றை நடத்தியது.

இந்தப் போட்டியில் பாஸ்கி ஒரு குறம்படத்தைத் தயாரித்து வழங்க வேண்டும் என குணா, வதனன் ஆகியோர் ஆர்வமூட்டினர்.

பரிஸ் லா சப்பல் கபே பாரத்தில் குணா பாஸ்கியைச் சந்தித்து “குறும்படம் செய்” என வலியுறுத்தினார். குணாவின் உற்சாகத்தை அடுத்து, சுகந்தன் வழங்கிய ஒளிப்பதிவுக்கருவியைக் கொண்டு ‘நதி’ என்ற குறும்படத்தை எழுதி, இயக்கி, நடித்து போட்டிக்கு ‘நதி’ குறும்படத்தை வழங்கி, சிறந்த நடிகன், சிறந்த இயக்குநர் விருதுகளைப் பெற்றார்.

‘நதி’ குறும்படத்தை Cannes திரைப்படவிழாவுக்கும் அனுப்பப் பட்டது. தமிழ் நாட்டில், ‘மக்கள் தொலைக்காட்சி’ நடத்திய போட்டியிலும் ‘நதி’ குறும்படத்துக்கு விருது கிடைத்தது. கனடாவில் நடைபெற்ற தமிழ்த்திரைப்பட விழாவிலும் ‘நதி’ விருது பெற்றது. ‘விம்பம்’ போட்டியில் ‘நதி’ குறும்படத்துக்கு ஐந்து விருதுகள் கிடைத்தன. குறும்படத்துறையில் தொடர்ந்து பாஸ்கி இயங்கி வந்தார்.

நதி, ஈரவிழிகள், மூன்று இரவு நாலு பகல், உன்னைப்படை, எனக்கும் உனக்கும், தினப்பயணம், கண்களைத்திற, வப்பு, செய்வினை, பூக்களைக் கொய்யாதீர்கள், வட்டிப்பணம், மறவர்கள், கண்ணீர்தேசம், சொந்த வீடும் நாய் படாப்பாடும், சகோதரிகள் கவனத்திற்கு, அந்தியில் உதயம், இருட்டு, லண்டன்மாப்பிள்ளை ஆகிய குறும்படங்களில் நடித்துள்ளார்.

நதி, தாயின்மடி, ஈரவிழிகள், உன்னைப்படை, நடை நடையாய், தூங்கா நகரம், எனக்கும் உனக்கும், செத்தபின், கண்களைத்திற, செல்வன், வலி, அடங்கா மதவி, பூக்களைக் கொய்யாதீர்கள் ஆகிய குறும்படங்களை இயக்கியுள்ளார். பல விருதுகளையும் வென்றுள்ளார்.

குறும்படத்தின் வெற்றிகள் பாஸ்கியை முழுநீளத் திரைப்படம் ஒன்றை தயாரிக்கவும், இயக்கவும் தூண்டியது.

‘தீராநதி’ திரைப்படத்தை 2011ம் ஆண்டு ரசிகர்களுக்கு வழங்கினார்.

தொடர்ந்து, பிரெஞ்சுத் திரைப்படங்களிலும் சிறு சிறு பாத்திரங்களில் நடித்து வருகிறார்.

2015ல் சோபா சக்தி கதாநாயகனாக நடித்துள்ள ‘தீபன்’ திரைப்படத்திலும் பாஸ்கி நடித்துள்ளார். படத்தை இயக்கியவர் Jacques Audiard.

2013ல் கனடா லெனின் எம்.சிவம் இயக்கிய ‘A Gun and A Ring’,

2015ல் பிரிட்டன் சுஜித் ஜி இயக்கிய ‘The Last Halt’ (கடைசித்தரிப்பிடம்),

2016ல் உதய் ஆனந்த் இயக்கிய, மம்மூட்டி நடித்த ‘White’ மலையாளப் படம்,

2017ல் பிரான்ஸ் Olivier Nakache & Éric Toledano ஆகியோர் இயக்கிய
‘C’est la vie!’ (Le Sens de la fête),

2018ல் பிரான்ஸ் சதாபிரணவன் இயக்கிய ‘Friday & Friday’,

2019ல் பிரான்ஸ் Olivier Nakache & Éric Toledano ஆகியோர் இயக்கிய ‘Hors Normes’,

2020ல் பிரான்ஸ் Ruben Alves இயக்கிய ‘Miss’,

2020ல் பிரான்ஸ் Lawrence Valin இயக்கிய ‘Aathi’ – The Loyal Man,

2020ல் இலங்கை ஆனந்த ரமணன் இயக்கிய ‘The Sixth Land’ (ஆறாம் நிலம்)

2022ல் பிரான்ஸ் Clément Cogitore இயக்கிய ‘Goutte d’or’,

2022ல் பிரான்ஸ் Michel Leclerc இயக்கிய ‘Les Goûts et les Couleurs’,

2023ல் பிரான்ஸ் Olivier Nakache & Éric Toledano ‘Une Année Difficile’,

2026ல் பிரான்ஸ் Justin & Nawell Madani இயக்கிய ‘Jusqu’au bout’,

ஆகியவற்றில் நடித்துள்ள மன்மதன் எம்.பாஸ்கி ‘கலங்கரை’ முழு நீளத்திரைப்படத்தை ஈழத்திலும் பிரான்ஸிலும் படமாக்கியுள்ளார். புதிதாக நாயகி ஒருவரை அறிமுகம் செய்துள்ளார். இதில் பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

‘கலங்கரை’யில் பாஸ்கியுடன் இணைந்து மேடை, வானொலி, தொலைக்காட்சி, சமூக வலைத்தளங்கள் என யாவற்றிலும் நகைச்சுவையை அள்ளி வழங்கி வரும், அங்கிள் சிறியும் நடித்துள்ளார்.

பாஸ்கியின் ‘கலங்கரை’ திரைப்படம், 11.10.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 மணிக்கு Villeneuve-la-Garenneனிலுள்ள Megarama Cinemaவில் காண்பிக்கப்படுகிறது.

Related posts