பனோரமா ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் த்ரிஷா, ராதிகா சரத்குமார், அபர்ணா பாலமுரளி நடிப்பில் உருவாகும்த்ரில்லர் படத்தின் படப்பிடிப்பு இன்று லண்டனில் தொடங்கியது.
லோகோமோட்டிவ் குளோபல் நிறுவனத்துடன் பனோரமா ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து தமிழில் தனது முதல் திரைப்படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்தை மலையாள இயக்குநர் ராஜா கிருஷ்ண மேனன் இயக்குகிறார்.
இந்தப் படத்தில் த்ரிஷா, ராதிகா சரத்குமார் அபர்ணா பாலமுரளி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இன்னும் தலைப்பிடப்படாத இப்படம் டார்க் சைக்கலாஜிக்கல் ஜானரில் உருவாகிறது. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இயக்குநர் ராஜா கிருஷ்ண மேனன் கூறும்போது, ‘இந்தப் படம் பல வகைகளில் எனக்கு முதல் அனுபவமாக அமைந்துள்ளது. இது என்னுடைய முதல் தமிழ்ப் படம், முதல் சைக்கோ த்ரில்லர் படம். பெண்களை மையமாகக் கொண்ட எனது முதல் கதையும் இது’ என்று தெரிவித்துள்ளார்.
——
ரஜினியின் ‘ஜெயிலர் 2’ படம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி அக்டோபர் 15-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு உறுதி செய்துள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் ‘ஜெயிலர் 2’. இதில் ரஜினியுடன் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, மேக்னா ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். மோகன்லால், சிவ ராஜ்குமார் கவுரவ வேடத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார்.
இந்தப் படத்தின் முதல் சிங்கிளான ‘அலே போலேலோ’ பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. படம் அக்டோபர் மாதம் வெளியாகும் எனப் படக்குழுவால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதனிடையே, பல்வேறு காரணங்களால் படத்தின் வெளியீடு தள்ளிப் போகலாம் என்று ஊகங்கள் வெளியாகின. இந்தநிலையில், திட்டமிட்டபடி படம் அக்டோபர் 15-ம் தேதி திரைக்கு வரும் என்பதைப் படக்குழு மீண்டும் உறுதி செய்துள்ளது.
இது குறித்து சன் பிக்சர்ஸ் அதன் எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ள தகவலில், ‘ஜெயிலர் 2 அக்டோபர் 15-ம் தேதி அலப்பறை கிளப்புறோம்’ என்று தெரிவித்துள்ளது.
