‘தர்மன்’ படத்தில் ரஜினி – ஸ்ரேயா இருவரும் இணைந்து நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘சிவாஜி’ படத்தில் ரஜினி – ஸ்ரேயா இருவரும் இணைந்து நடித்திருந்தார்கள். தற்போது ‘தர்மன்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ரஜினிகாந்த். அந்தப் படத்தின் கெட்டப்பில் ஸ்ரேயா உடன் எடுக்கப்பட்ட செல்ஃபியில் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தப் புகைப்படத்தை வைத்து ரஜினி – ஸ்ரேயா இருவரும் 17 ஆண்டுகள் கழித்து இணைந்து நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹைதராபாத்தில் ரஜினி – ராம் பொத்தினேனி உள்ளிட்ட பலர் பங்குபெறும் காட்சிகளை படமாக்கி வருகிறார் அஸ்வத் மாரிமுத்து. ‘தர்மன்’ படத்தில் ஸ்ரேயா நடிக்கிறாரா என்பது குறித்து படக்குழுவினரும் எந்தவொரு தகவலும் வெளியிடவில்லை.
ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வரும் ‘தர்மன்’ படத்தில் சிம்ரன், ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்து வருவது உறுதியாகி இருக்கிறது. இதற்கு இசையமைப்பாளராக அனிருத் பணிபுரிந்து வருகிறார். 2027-ம் ஆண்டு இப்படம் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
——–
நடிகை டாப்ஸி நடித்துள்ள ‘காந்தாரி’ திரைப்படம் காப்புரிமை சர்ச்சையில் சிக்கியுள்ளது. ஆக் ஷன் த்ரில்லர் படமான இதை தேவஷிஷ் மகிஜா இயக்கியுள்ளார். கனிகா தில்லான் தயாரித்துள்ள இப்படத்தில் ஸ்வஸ்திகா முகர்ஜி, மிதா வசிஷ்ட், சாயா கதம் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் செப்.3-ம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியாகிறது.
இந்நிலையில் எழுத்தாளர் கல்யாண் பண்டி என்பவர் இப்படத்தின் கதை, 2019-ம் ஆண்டு தான் எழுதி பதிவு செய்த கதையை போன்றுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
“கடத்தல் கும்பலிடம் சிக்கிய தனது குழந்தையை மீட்கப் போராடும் ஒரு தாய், பின்னர் சக்திவாய்ந்த போராளியாக மாறுவதுதான் அந்தக் கதையின் மையக்கரு. இந்தக் கதையை அப்போது வூட் நிறுவனத்தில் இருந்த மோனிகா ஷெர்கில் என்பவரிடம் பகிர்ந்தேன். பின்னர் 8 பக்க ஸ்கிரிப்ட் மற்றும் கதையின் சுருக்கத்தை அனுப்பினேன். மோனிகா ஷெர்கில் இப்போது நெட்பிளிக்ஸ் நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளார்” என்று கூறியுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டை கனிகா தில்லானின் நிறுவனம் மறுத்துள்ளது. ‘காந்தாரி’ முற்றிலும் அசல் படைப்பு என்றும், அதன் கதை மற்றும் திரைக்கதை முழுவதும் கனிகா தில்லானுடைய சொந்தப் படைப்பு என்றும் தெரிவித்துள்ளது.
——–
ரவிதேஜா, பிரியா பவானி சங்கர், பேபி நட்சத்திரா, சுவாசிகா உள்பட பலர் நடித்துள்ள படம், ‘இருமுடி கட்டு’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை சிவா நிர்வானா இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இப்படம் ரூ.70 கோடிக்கும் அதிகமாக வசூலித்து ஓடிக்கொண்டிருக்கிறது.
இப்படம் பற்றி ஜி.வி.பிரகாஷ் கூறும்போது, “ஒரு படத்துக்கு இசையமைக்க அதன் கதை மிகவும் முக்கியம். ‘பொல்லாதவன்’, ‘ராஜா ராணி’ படங்களின் கதையை கேட்டபோது இது நிச்சயம் பிளாக்பஸ்டர் என தோன்றியது.
அதுபோலவே ‘இருமுடி கட்டு’ படத்தின் கதையை கேட்டபோதும் தோன்றியது. இங்கே பல ஹீரோக்கள், ரவி தேஜாவுக்கு ரசிகர்களாக உள்ளனர்.
கமர்ஷியல் படங்களில் ரவி தேஜாவுக்குத் தனித்துவம் இருக்கிறது. பல இயக்குநர்களும் அவருக்கு ரசிகர்கள். தெலுங்கில் இந்தப் படம் மிகப்பெரிய ஹிட். குழந்தை நட்சத்திரம் நட்சத்திரா இந்தப் படத்துக்காக பல விருதுகளைப் பெறுவார்” என்றார்.
