உதயநிதி பேசியது நாகரிக அரசியலுக்கு ஏற்புடையதல்ல

“நாளை சட்டமன்றம் கூடும் சூழ்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பிலிருப்பவரைச் சிறைப்படுத்துவதைத் தவிர்ப்பது ஆளுங்கட்சியின் மீதான நன்மதிப்பை உயர்த்தும்” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள தனது எக்ஸ் தளப் பதிவில், “அண்மையில் திமுக சார்பில் காவிரி நீர் உரிமைக்காக தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ‘இரட்டுற மொழிதல்’ என்னும் வகையில் எள்ளி நகையாடும் கருத்தொன்றைக் கூறியிருக்கிறார்.

எதிர்க்கட்சிகளின் மீது பொய் வழக்குப் போடுவதிலேயே முதல்வரின் கவனம் இருக்கிறது என்று அவர் சொல்லியபோது, ஆங்கே திரண்டிருந்தவர்கள் பிரபல நடிகை ஒருவரின் பெயரைச் சொல்லிக் கூச்சலிடுகின்றனர்.

அப்போது அவர் கிண்டலாகப் பேசும் முனைப்பில் தவறான பொருள்படும்படி ஒரு கருத்தைப் பேசியுள்ளார். இது ஆங்கில ஊடகங்களில் விவாதிக்கும் அளவுக்கு – கண்டிக்கும் அளவுக்கு தேசிய அளவிலான பிரச்சினையாக மாறியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் என்கிற பொறுப்பு வாய்ந்த இடத்தில் இருப்பவர் இதுபோல இரட்டை பொருள் தரும் ‘எள்ளல் நடையில்’ பேசும் முறையைத் தவிர்த்திருக்க வேண்டும். ஒரு பெண்ணைக் குறித்து இழிவாகப் பேசும் இத்தகைய அணுகுமுறை அவரது அரசியல் தகுதிக்குப் பொருத்தமானதில்லை. நாகரிக அரசியலுக்கு ஏற்புடையதல்ல.

சூழ்ந்திருப்பவர்களின் சுவைக்கேற்ப சொல்லாடல் செய்வது என்கிற உந்துதலால் உணர்ச்சிவயப்பட்ட – தன்னிலை மறந்த அணுகுமுறையைக் கைவிட வேண்டும். பெண்மையைக் கொச்சைப்படுத்தும் வகையில் புரிதலை ஏற்படுத்திய அந்த அணுகுமுறை கண்டிக்கத் தக்கதாகும். நாளை சட்டமன்றம் கூடும் சூழ்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பிலிருப்பவரைச் சிறைப்படுத்துவதைத் தவிர்ப்பது ஆளுங்கட்சியின் மீதான நன்மதிப்பை உயர்த்தும்.

தற்போதைய நிலையில், காவிரி நீர் உரிமைக்காக அனைத்துக் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் என யாவரும் இணைந்து குரல் கொடுப்பதற்கும்; இந்திய ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்கும் இது ஏதுவாக அமையும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

———

தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை போலீஸார் இன்றைக்குள் விடுவிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், உதயநிதி ஸ்டாலினும் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக முதல்வரை அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசியதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை தஞ்சை போலீஸார் இன்று காலை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

அவரை போலீஸார் அழைத்துச் செல்வதற்கு முன்னதாகவே, கைது சூழல் நிலவுவதாக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தரப்பில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செயப்பட்டது. அது இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜரானார். உதயநிதி ஸ்டாலின் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் என்.ஆர்.இளங்கோ, ஹசன் முகமது ஜின்னா ஆகியோர் ஆஜராயினர்.

அப்போது அரசுத் தரப்பு வழக்கறிஞர், “உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை. அது கைதுக்கு முந்தைய நடவடிக்கை தான். அவரை தஞ்சை போலீஸார் விசாரித்து முடித்ததும் விடுவிப்பர்,” என்றார்.

அப்போது நீதிபதி இளந்திரையன், உதயநிதியை இன்றைக்குள் விடுவிக்க வேண்டும் என்றும், அதேவேளையில் உதயநிதியும் காவல் துறை விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

நடந்தது என்ன?

தஞ்சாவூரில் நேற்று திமுக சார்பில் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், மேகேதாட்டு அணைகட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு துணை போகும் தமிழக அரசை கண்டித்தும், டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார், அப்போது அவர் தமிழக முதல்வருக்கு எதிராகவும், ஆபாசமாகவும் பேசியதாக தஞ்சாவூர் மத்திய மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பைரவி என்பவர் தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் கிழக்கு காவல் நிலைய போலீஸார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

சட்டப்பிரிவுகள் 196, 192, 352, 79, 296(பி), 61 மற்றும் 351(2) பிஎன்எஸ், தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடைச் சட்டம் (The Tamil Nadu Prohibition of Harassment of Women Act) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் (IT Act) பிரிவு 67, அதாவது பாலியல் சார்ந்த கருத்துக்களை வெளியிடுதல் ஆகிய பிரிவிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று காலை அவரது வீட்டுக்கு தஞ்சை போலீஸார் வந்தனர். தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் உருவானதால் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

சிறிது நேரத்தில் காவல்துறையினர் உதயநிதியை அழைத்துச் சென்றனர். இதனால் தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதுபோலவே, தவெகவினரும் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் காவல்துறை விசாரணைக்குப் பின்னர் இன்றைக்குள் விடுவிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

——

உதயநிதி விவகாரத்தால் தஞ்சாவூரில் இன்று திமுக – தவெகவினர் இடையே செருப்பு, கல் வீச்சு மோதல் சம்பவம் நடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், திமுகவினர் சாலை மறியலிலும், முதல்வரின் உருவ பொம்மையை எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் தவெகவினர் திமுகவினரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் திமுக சார்பில் நேற்று காவிரி விவகாரம் தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், தமிழக முதல்வரை கண்டித்தும், அவரை தரகுறைவான வார்த்தைகளால் பேசியுள்ளார். இந்த பேச்சுக்குக்கு தவெக மற்றும் பிற அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், நேற்று தவெக தஞ்சாவூர் மத்திய மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பைரவி தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில் முதல்வர் குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின் மீது புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், சென்னை சென்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக, உதயநிதி கைது நடவடிக்கையை கண்டித்து திமுகவினர் இன்று ரயில் நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணாசிலை பகுதிக்கு ஊர்வலமாக சென்று, அங்கு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், ஆர்.வைத்திலிங்கம், முன்னாள் எம்எல்ஏக்கள் டிகேஜி.நீலமேகம், எம்.ராமச்சந்திரன், மேயர் (பொறுப்பு) அஞ்சுகம் பூபதி, மாநகர செயலாளர் சண்.ராமநாதன் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் பங்கேற்றனர்.

அப்போது, முதல்வர் விஜய்யின் உருவ பொம்மையை தீயிட்டு எரித்து, முதல்வருக்கு எதிராகவும், தமிழக அரசுக்கு எதிராகவும் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதே நேரத்தில் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து தவெக மகளிர் அணியினர் பனகல் கட்டிடம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திமுகவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தவெக எம்எல்ஏ ஆர்.விஜய் சரவணன் உள்ளிட்ட ஏராளமான தவெகவினர் கலந்துகொண்டனர்.

திமுகவினர் அண்ணாசிலை அருகே போராட்டத்தில் ஈடுபட்டபோது, தவெகவினர் அண்ணாசிலை நோக்கி திமுகவினருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியபடி வந்தனர். அவர்களை போலீஸார் தடுத்தனர்.

இதையடுத்து திமுகவினரும், தவெகவினரும் ஒருவர் மீது ஒருவர் கூச்சலிட்டபடி செருப்பு, கற்களை வீசிக மோதிக் கொண்டனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போலீஸார் இரு தரப்பையும் சமாதானம் செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

——

“எதிர்க்கட்சிகளை எந்த விதத்திலுமே செயல்படக் கூடாது என்கிற நிலையை முதல்வர் கைவிட வேண்டும்” என அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

முதல்வருக்கு அனுபவம் இல்லை:

காவிரி நீர் திறப்பில் அரசியல் பேச விரும்பவில்லை. ஒவ்வொரு வருடமும் ஜூன் 12-ம் தேதி காவிரி பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது இயல்பான ஒன்று. அது மழை குறைவாக இருக்கும்பட்சத்தில், போதிய நீர் ஆதாரம் மேட்டூர் அணையில் இல்லை என சொன்னால், அந்த அரசு உடனடியாக கர்நாடக அரசை அணுகியிருக்க வேண்டும் அல்லது காவிரி மேலாண்மை ஆணையத்திலே கோரிக்கை வைத்திருக்க வேண்டும்.

உச்ச நீதிமன்றத்தை நாடி, கர்நாடக அரசுக்கு நமது கோரிக்கை சென்று அடைய நடவடிக்கை வேண்டும். ஆனால், நம் முதல்வருக்கு அனுபவம் இல்லாத காரணத்தால், உரிய நேரத்தில் கருத்துகளை சொல்லக்கூடிய அலுவலர்கள் அவருடன் இல்லாததால், கால தாமதம் ஏற்பட்டு உள்ளது.

முதல்வருக்கும் நாவடக்கம் வேண்டும்:

“எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், வளர்ந்து வரக்கூடிய அரசியல் தலைவர். ஏற்கெனவே ஆட்சியிலும், அதிகாரத்திலும் செயல்பட்டு உள்ளார். பொது மேடைகளில் பேசும்போது வார்த்தைகளை அளந்து பேச வேண்டும். இந்த இரட்டை அர்த்தங்களைக் கொண்ட வார்த்தைகளை, தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் பயன்படுத்தவே கூடாது. பண்புடன் பேசி வந்தால் தான் மக்களிடம் மரியாதை கூடும்.

அதே நேரத்தில், உடனடியாக எதிர்க்கட்சிகளை எந்த விதத்திலுமே செயல்படக் கூடாது என்ற நிலையிலே பயமுறுத்துகின்ற வகையிலே இன்றைய முதல்வர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். அதனை அவர் கைவிட வேண்டும். முதல்வருக்கும் நாவடக்கம் வேண்டும். முதல்வரும் சினிமாவில் கீழே ரசிகர்கள் கைதட்ட வேண்டும் என்பதற்காகச் சில வார்த்தைகளைப் பயன்படுத்தும் அந்த வார்த்தைகளையே, முதல்வரான பின்பும் பயன்படுத்திவிடக் கூடாது.

காவிரியின் வரலாறு தெரியாது…

காவிரி நதிநீர், மேகேதாட்டு பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்த, அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஆலோசனைகள் கூறியும், முதல்வர் விஜய் யாரையும் மதிக்கவில்லை. தான்தோன்றித்தனமாகத்தானே அவர் செயல்படுகிறார். கர்நாடகவில் அம்மாநிலத்தில் அனைத்து கட்சியினரும் ஒற்றுமையாக உள்ளனர்.

ஆனால், இங்கு நாங்கள் ஒற்றுமையாக வருகிறோம் என கூறினால் கூட, முதல்வர் கேட்க மாட்டேன் என்கிறார். காவிரி பிரச்சனை குறித்து முதல்வர் விஜய், நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் பேசுவதில்லை. ஏதோ ஒரு வாய்ப்பு கிடைத்து அமைச்சராக உள்ள ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் ஆகியோர் அகங்காரமான வார்த்தைகளை பேசுகின்றனர்.

காவிரியின் வரலாறு, பிரச்சினைகள் எப்போது உருவாகியது, முன்னாள் முதல்வர்கள் என்னவெல்லாம் போராடினார்கள் என்பது குறித்து நீர்வளத் துறை அமைச்சருக்கு என்ன தெரியும்? அவர் ரசிகர் மன்ற தலைவராக இருந்தவர்” என்று கே.பி.முனுசாமி கூறினார்.

Related posts