ராஜமவுலி இயக்கும் ‘வாரணாசி’ திரைப்படத்தில் ராமருக்கும் கும்பகர்ணனுக்கும் இடையிலான 30 நிமிட போர்க்காட்சி இடம்பெற இருப்பதாக விஜயேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார்.
ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘வாரணாசி’. ஆக் ஷன் அட்வெஞ்சர் ஃபேன்டஸி படமான இதன் கதையை ராஜமவுலியின் தந்தை, விஜயேந்திர பிரசாத் எழுதியுள்ளார். இதில் மகேஷ்பாபு ‘ருத்ரா’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
அவருடைய கதாபாத்திரம் ராமருடன் தொடர்புடையதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. பிரியங்கா சோப்ரா ‘மந்தாகினி’ என்ற பாத்திரத்திலும், பிருத்வி ராஜ் சுகுமாரன் ‘கும்பன்’ (கும்பகர்ணன்) என்ற வில்லன் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். இப்படம், 2027ம் ஆண்டு ஏப்.7ல் வெளியாகிறது. முக்கியமான காட்சிகள் கென்ய காடுகளில் படமாக்கப்பட்டுள்ளன. அண்டார்டிகா உள்பட பல நாடுகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தில் ராமருக்கும் கும்பகர்ணனுக்கும் இடையிலான 30 நிமிட போர்க் காட்சி பிரம்மாண்டமாக இடம் பெற இருப்பதாகக் கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார். ராஜமவுலி, தனது சாகசக் கதையில் புராணப் பின்னணியை தனித்துவமான முறையில் கலந்திருக்கிறார் என்கிறார்கள்.
——
நடிகர் ரவி மோகனும், அவரது மனைவி ஆர்த்தியும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ரவி மோகன் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், பாடகி கெனிஷாவுடன் ரவி மோகனை தொடர்புப்படுத்தி சர்ச்சைகள் எழுந்தன.
இந்நிலையில் விவாகரத்து வழக்கு தொடர்பாக ரவி மோகன் மற்றும் ஆர்த்தி என இரு தரப்பும் பரஸ்பரம் எந்த கருத்துகளையும் பொது வெளியில் தெரிவிக்கக்கூடாது என உயர் நீதிமன்றம் ஏற்கெனவே தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் ரவி மோகனை பிரிவதாக பாடகி கெனிஷா சமூக வலைதளம் வாயிலாக பதிவிட்ட நிலையில், ரவி மோகன் கடந்த மாதம் 16ம் தேதி பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி தனது குழந்தைகளுக்காக அமைதி காப்பதாக மனக் குமுறலை கண்ணீர் மல்க தெரிவித்தார்.
இந்நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவை மீறி ரவி மோகன் ஊடகங்களிடம் பேட்டியளி்த்துள்ளதாகக் கூறி ஆர்த்தி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு விசாரணைக்கு வந்தபோது தனது செயலுக்காக மன்னிப்பு கோரி ஊடகங்களில் பொது அறிவிப்பு வெளியிட தயாராக இருப்பதாக ரவி மோகன் தெரிவித்தார்.
அதைப் பதிவு செய்து கொண்ட உயர் நீதிமன்றம் ஆர்த்தியின் மனுவை முடித்து வைத்தது. அதன்படி ரவி மோகன் வெளியிட்டுள்ள பொது அறிவிப்பில், உயர் நீதிமன்ற உத்தரவை மீறி பத்திரிகையாளர்களிடம் திருமண தகராறு தொடர்பாக பேசி விட்டேன். இதற்காக பாதிக்கப்பட்ட அனைவரிடமும் எனது வருத்தத்தையும், மன்னிப்பையும் கோருகிறேன் என தெரிவித்துள்ளார்.
——
அறிமுக இயக்குநர் சகோ கணேசன் இயக்கத்தில், விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப், தேஜு அஸ்வினி ஆகியோரின் நடிப்பில், ஹைபர்லிங்க் ஆந்தாலஜி வடிவில் க்ரைம் த்ரில்லராக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘மூன்றாம் கண்’.
டிரெண்டிங் என்டர்டெயின்மென்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டூடியோஸ் சார்பில் கே.சசிகுமார் தயாரித்துள்ளார். ஜூன் 12-ல் வெளியாகும் இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
இயக்குநர் சகோ கணேசன் பேசும்போது, “இது வித்தியாசமான கமர்ஷியல் திரைக்கதையைக் கொண்ட படம். இதில் விருமாண்டி, வான்டேஜ் பாயின்ட் போன்ற படங்களில் பயன்படுத்தப்பட்ட திரைக்கதை டெக்னிக்கான ‘ரோஷமான் எபெக்ட்’ என்ற விஷயத் தைப் பயன்படுத்தி இருக்கிறோம். இந்தக் கதையை எழுதும் போதே சில கதாபாத்திரங்களுக்கு குறிப்பிட்ட நடிகர்களை மனதில் வைத்திருந்தேன்.
விதார்த், சந்தோஷ் பிரதாப், கலையரசன் உள்ளிட்ட அனைவரும் எதிர்பார்த்ததை விட சிறப்பாக நடித்துள்ளனர். கலையரசனின் கதாபாத்திரம் மிகவும் சவாலானது. அவருடைய உடல் மொழி, குரல், நடிப்பு என அனைத்தையும் மிக நுட்பமாக வெளிப்படுத்தியுள்ளார். சந்தோஷ் பிரதாப்பை இந்தக் கதாபாத்திரத்துக்காகத் தேர்வு செய்தது சரியான முடிவு என்பதைப் படப் பிடிப்பின் போது உணர்ந்தேன்” என்றார்.
—–
திரைத்துறையில் ஆண் மற்றும் பெண் நடிகர்களின் ஊதிய வித்தியாசம் மிகப் பெரியது என்றும் அவை மாற்றப்பட வேண்டும் என்றும் நடிகை காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “தற்போது, திரையுலகில் ஆண் மற்றும் பெண் நடிகர்களுக்கு இடையே நிலவும் ஊதிய பாகுபாடு குறித்து தொடர்ந்து விவாதங்கள் நடந்து வருகின்றன. இது குறித்து இன்னும் பல நடிகர்கள் பேசுவார்கள் என்று நம்புகிறேன். ஊதிய பாகுபாடு இல்லை என்று சொல்லிவிட முடியாது. இந்த நிலை மாற வேண்டும். மாற்றங்கள் மெதுவாக நடந்து வருகின்றன. திரைத்துறை இப்போது பெருமளவில் கார்ப்பரேட் மயமாகி விட்டது.
இது ஆட்டத்தின் விதிகளையே மாற்றியிருக்கிறது. இருந்தாலும்,ஆண் மற்றும் பெண் நடிகர்களின் ஊதியத்துக்கு இடையே இருக்கும் வித்தியாசம் மிகப்பெரியது.
எனக்குத் தென்னிந்தியத் திரைத்துறை மீது கூடுதல் ஈர்ப்பு உண்டு. ஏனென்றால் அங்குதான் நான் எனது திரையுலகப் பயணத்தைத் தொடங்கினேன். அங்கு ஒன்பது மணி நேரத்துக்கு மேல் வேலை செய்வதில்லை.
பாலிவுட்டில் எனக்குக் கிடைக்காத ஒருவித சவுகரியம் தென்னிந்திய சினிமாவில் கிடைக்கிறது. ஒழுக்கம் மற்றும் நேரத்தை சரியாக கடைபிடித்தல் ஆகியவற்றுடன், பெண்களுக்கு மிகுந்த மரியாதையும் அளிக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
—–
இயக்குநர் சசியும், விஜய் ஆண்டனியும் மீண்டும் இணைந்துள்ள திரைப்படம், ‘நூறு சாமி’. சுவாசிகா, அஜய் திஷன், லிஜோமோல் ஜோஸ், கருணாஸ், சக்தி, காவ்யா அனில், பாலாஜி சக்திவேல், அருள்தாஸ், முனிஷ்காந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஜூன் 19-ல் வெளியாகிறது.
படம் பற்றி இயக்குநர் சசி, செய்தியாளர்களிடம் பேசும்போது, “ ‘பிச்சைக்காரன்’ படத்தின் நாயகன், தாயைத் தெய்வமாக மதித்தான். தாயை மனுஷியாக பார்க்கத் தொடங்கிய படம் ‘நூறு சாமி’. இந்தப்படத்தின் முக்கிய அம்சங்களாக சுவாசிகாவின் அற்புத நடிப்பும், விஜய் ஆண்டனியின் வித்தியாச நடிப்பும் பேசப்படும்.
ஒரு நடிகராக இன்னும் பல மடங்கு மெருகேறியிருக்கிறார் அவர். கிராமத்து மனிதனாக வாழ்ந்திருக்கிறார். சுவாசிகாவும் அருமையான பங்களிப்பைத் தந்துள்ளார். ‘நூறு சாமி’ படத்துக்குப் பிறகு தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகைகளில் ஒருவராக அவர் திகழ்வார். இப்படம் பார்க்கிற அனைவரும் படத்தோடு தங்களைத் தொடர்புப்படுத்திக் கொள்ள முடியும்” என்றார்.
