‘யாத்திசை’ தரணி ராசேந்திரன் அடுத்து இயக்கும் படத்தில் சசிகுமார் நாயகனாக நடித்துள்ளார். சேயோன், பவானி, சமுத்திரக்கனி, ஷிவதா, கிஷோர் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். அசோக் செல்வன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.
ஜே.கமலக்கண்ணனின் ஜே.கே.ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படத்துக்கு சேது முருகவேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். சார்தக் கல்யாணி இசையமைத்துள்ளார். “பிரிட்டிஷ் ஆட்சி காலத்தைப் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் சசிகுமார் இந்திய தேசிய ராணுவ (ஐஎன்ஏ) அதிகாரியாக நடித்துள்ளார். பீரியட் படம் என்பதால் கதையை மேலும் செழுமைப்படுத்த பிரம்மாண்டமான விஎப்எக்ஸ் காட்சிகள் இடம்பெறுகின்றன. படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது. போஸ்ட் புரொடக் ஷன் நடந்து வருகின்றன” என்றது படக்குழு.
—-
நிறங்கள் மூன்று, தருணம் போன்ற படங்களில் நடித்த துஷ்யந்த் நாயகனாக நடித்துள்ள படம், ‘ஆல் பாஸ்’. ஜனனி நாயகியாக நடித்துள்ளார். சரத் லோகித்சவா, ஜெயப்பிரகாஷ், செந்திகுமாரி, சுப்பிரமணிய சிவா, வினோதினி என பலர் நடித்துள்ளனர். ஜேம்ஸ் வசந்தன் இசை அமைத்துள்ளார்.
ஒன்ஸ் ஸ்டெப் என்டர்டெயின்மெண்ட் சார்பில் மோகனா.ஆர் தயாரித்துள்ள இப்படத்தை மைதீன் இயக்கியுள்ளார். படம் பற்றி அவர் கூறும்போது, “வடசென்னை என்றாலே அடிதடி, வெட்டு, குத்து, ரத்தம் என்றே தமிழ் சினிமாவில் காட்டி வந்திருக்கிறார்கள். இது எதுவுமே இல்லாத வடசென்னை மக்களின் எதார்த்த வாழ்வியலைப் பேசும் படம் இது. 45 நாட்கள் முழு படப்பிடிப்பையும் வடசென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் முடித்திருக்கிறோம். படப்பிடிப்பு நிறைவு பெற்ற நிலையில் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன” என்றார்.
——
பேட்மிண்டனை மையமாகக் கொண்டு உருவாகும் காதல் கலந்த விளையாட்டு படத்துக்கு ‘ரீமேட்ச்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் கேபிஒய் பாலா கதாநாயகனாக நடித்துள்ளார்.
தானு ஹர்ஷா கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். இவர் சிறந்த பேட்மிண்டன் வீராங்கனை. முக்கிய கதாபாத்திரங்களில் இளவரசு, சந்தோஷ் பிரதாப், ஷா ரா, சஷாங்க், சித்ரா லட்சுமணன், செல் முருகன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அச்சு ராஜாமணி இசை அமைக்கிறார்.
அர்வி ஒளிப்பதிவு செய்கிறார். இயக்குநர் ராதா மோகனிடம் இணை இயக்குநராக பணியாற்றிய ஆர்.விமல் குமார் எழுதி இயக்குகிறார். ஸினிமா மீடியா அண்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தினேஷ்ராஜ், பிரகாஷ் சேஷாத்ரி, ஜி. ரவி குமார் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இதன் தொடக்க விழா சென்னையில் நடை பெற்றது.
கலைப்புலி எஸ். தாணு, நடிகை மீனா, அருள்பதி, இயக்குநர்கள் சசி, ராதா மோகன், ஆர்.கண்ணன், மகேஷ் ராஜேந்திரன், நடிகர் கதிர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
