சினிமாவும் இசையும் உணர்வுப்பூர்வமானவை: இளையராஜா

பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’, ‘பேட்ட’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, ‘ரெட்ரோ’ போன்ற படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ், தனது 10-வது படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார்.

இதை, சிக்யா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் குனீத் மோங்கா கபூர், அசின் ஜெயின் மற்றும் ஜியோ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். இது அவருடைய 1540-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இது பற்றி இளையராஜா கூறும்போது, “சினிமாவும் இசையும் எனக்கு உணர்வுப்பூர்வமானவை. ஒரு கதையின் நேர்மையும், அதை சொல்லும் மனிதர்களின் உண்மையும்தான் முக்கியம். கார்த்திக் சுப்புராஜ் உடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி. சினிமா மீதான அவரது ஆர்வம் அவருடைய பணிகளில் தெரிகிறது.

ஒவ்வொரு படத்துக்கும் தனித்தனி உணர்வும், இசையும் உண்டு. இந்தப் படத்தின் பின்னணி இசை அமைக்கும் போது, அந்த இசையைத் தனி ஆல்பமாகவே வெளியிட வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அந்த அளவுக்கு சிறப்பாக உருவாகியுள்ளது” என்றார்.

——-

‘ஹபீபி’ தமிழ் சமூகத்துக்கான படம்: மகிழ் திருமேனி

அவள் பெயர் தமிழரசி’, ‘விழித்​திரு’ படங்​களை இயக்​கிய மீரா கதிர​வன், இப்​போது புது​முகங்​கள் நடித்​துள்ள ‘ஹபீபி’ என்ற படத்தை இயக்​கி​யுள்​ளார்.

இயக்​குநர் கஸ்​தூரி ராஜா, மாளவிகா மனோஜ் முக்​கிய வேடங்களில் நடித்​துள்​ளனர். நேசம் என்​டர்​ டெ​யின்​மென்ட் தயாரித்துள்ள இந்​தப் படத்​துக்கு மகேஷ் முத்​து சுவாமி ஒளிப்பதிவு செய்துள்​ளார். சாம் சி.எஸ் இசை அமைத்துள்​ளார்.

இப்​படத்​தின் இசை வெளி​யீட்டு விழா சென்​னை​யில் நடைபெற்றது. படக்​குழு​வினருடன் இயக்​குநர்​கள் சேரன், பார்த்திபன், அமீர், சமுத்​திரக்​க​னி, வெற்​றி​மாறன், மகிழ் திருமேனி, பாண்​டி​ராஜ், மிஷ்கின், சுசீந்​திரன், தயாரிப்​பாளர் பி.தேனப்​பன், நடிகர் நாசர், தவெக எம்​எல்ஏ முஸ்​தபா உள்பட பலர் கலந்​து​கொண்​டனர்.

இயக்​குநர் மகிழ் திரு​மேனி பேசும்​போது, “ஹபீபி படத்​தைப் பார்த்து விட்​டேன். இன்​றைய ட்ரெண்ட், சமூக சூழ்​நிலைக்கு ஏற்ப என திரைத்​துறை​யில் காலத்​துக்கு ஏற்​ற​வாறு ஓட வேண்​டிய கட்டாய​மும் நெருக்​கடி​யும் உள்​ளது. ஆனால், வேறு சில படங்​கள் உள்​ளன. அவை நம் வாழ்க்​கைக்கு மிக நெருக்​க​மானவை. அப்படியான படம்​தான் ‘ஹபீபி’.

இதை நண்​பர் மீரா கதிர​வன் இயக்கி இருக்​கிறார் என்​பது பெருமை. வாழ்​வா​தா​ரத்​துக்​காக நாடு விட்டு நாடு செல்​லும் ஆண்கள், அவர்​களைப் பிரிந்து தவிக்​கும் குடும்​பத்​தினர், இயந்திரமய​மாக்​கல் காரண​மாகத் தொழில் பாதிக்​கும் கைத்​தறி நெச​வாளர்​கள், கூட்​டுக் குடும்​பச் சிதைவு என பல விஷ​யங்​கள் இதில் பேசப்​பட்டு இருக்​கின்​றன.

தமிழ் சமூகத்​துக்​கான படம் இது. ஒரு கால​கட்​ட வாழ்​வியலை, பண்​பாட்டை இந்​தப் படம் ஆவணப்​படுத்தி இருக்​கிறது. தான் சார்ந்த முடிவு​களைத் தானே எடுக்​கும் ஹிஜாப் அணிந்த தற்சார்பு பெண்​ணின் கதா​பாத்​திரம்​ இந்​தப்​ படத்​தில்​ உண்​டு” என்​றார்​.

——

‘பிளாஸ்ட்’-டில் சமூகத்துக்கு தேவையான விஷயங்கள்

அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் அறிமுக இயக்குநர் சுபாஷ் கே.ராஜ் இயக்கியுள்ள ‘பிளாஸ்ட்’ திரைப்படம் மே 28-ல் வெளியாகவுள்ளது.

ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் தயாரித்துள்ளனர். அர்ச்சனா கல்பாத்தி கிரியேட்டிவ் புரொடியூசராகவும், ஐஸ்வர்யா கல்பாத்தி அசோசியேட் கிரியேட்டிவ் புரொடியூசராகவும் பங்காற்றியுள்ளனர். இதன் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

நடிகர் அர்ஜுன் கூறும்போது, “நான் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கராத்தே மாஸ்டர் கதாபாத்திரத்தை இப்போதுதான் முதன்முறையாக ஏற்று நடித்துள்ளேன். படப்பிடிப்பு தளத்தில் இயக்குநரின் தன்னம்பிக்கையை பார்த்தேன். ஒவ்வொரு இயக்குநருக்கும் நம்பிக்கை மிக முக்கியம்.

நான் ஏராளமான புதுமுக இயக்குநர்களுடன் பணியாற்றி இருக்கிறேன். அதில் இயக்குநர் சுபாஷ் கே ராஜ் சாதுரியமானவர். நடிகை அபிராமியுடன் நான் முதன் முதலாக நடிக்கும் போது, அவர் மலையாளம் மட்டும்தான் பேசுவார். இப்போது தமிழில் நன்றாகப் பேசி அசத்துகிறார்.

அவர் நடிகை மட்டுமல்ல, பாடகியும் கூட. இந்தப் படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். அதே போல் ப்ரீத்தி முகுந்தனைப் பார்த்து வியக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் எப்போது பார்த்தாலும் பயிற்சி செய்து கொண்டிருப்பார்” என்றார்.

இயக்குநர் சுபாஷ் கே.ராஜ் பேசும்போது, “இது ஆக்‌ஷன் படம்தான். ஆனால் குடும்பத்துடன் பார்த்து மகிழும் வகையில் இருக்கும். படத்தைப் பார்க்கும் ஒவ்வொருவரும் தங்களுடன் படத்தைத் தொடர்புப் படுத்திக் கொள்வார்கள். சமூகத்துக்குத் தேவையான பல விஷயங்களைச் சொல்லி இருக்கிறோம்” என்றார்.

Related posts