‘ஜனநாயகன்’ லீக் துரதிஷ்டவசமானது

கார்த்தி, நாகார்ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்களை இயக்கியவர் தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி. இவர் அடுத்து இயக்கும் படத்தில் சல்மான் கான் ஹீரோவாக நடிக்கிறார். இதை  வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் மூலம் தில் ராஜு தயாரிக்கிறார். இதில் நயன்தாரா நாயகியாக இணைந்துள்ளார்.

ஷாருக்கானின் ‘ஜவான்’ படம் மூலம் இந்திக்குச் சென்ற நயன்தாரா, இப்போது சல்மான் கான் படத்திலும் கதாநாயகியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. சமீபத்தில் இப்படத்தின் தொடக்கவிழாவில் எடுத்த வீடியோவை சல்மான் கான் ரீல்ஸாக வெளியிட்டிருந்தார். அதில் இப்படத்தின் ரிலீஸையும் அவர் அறிவித்துள்ளார். அதன்படி இப்படம் அடுத்த வருடம் ஜூன் மாதம் வெளியாக இருக்கிறது.

——

டாம் க்ரூஸ் நடித்த ‘டாப் கன்’ திரைப்படம் வெளியாகி 40 ஆண்டுகள் நிறைவடை வதைக் கொண்டாடும் வகையில் இந்தியாவில் திரையரங்குகளில் மீண்டும் வெளியாகிறது.

ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ், புகழ்பெற்ற நடிகராக உயர்வதற்கு முக்கிய காரணமாக இருந்து 1986-ல் வெளியான திரைப்படம், ‘டாப் கன்’. அதிரடி ஆக்ச‌ஷன் படமான இதை மறைந்த இயக்குநர் டோனி ஸ்காட் இயக்கி இருந்தார்.

இதில், கெல்லி மெக்கில்லிஸ், வால் கில்மர், அந்தோணி எட்வர்ட்ஸ், மெக் ரியான், டாம் ஸ்கெரிட் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அமெரிக்க விமானப்படை விமானிகளின் வாழ்க்கை முறையைத் தத்ரூபமாகத் திரையில் காட்டிய படம் இது.

‘டாப் கன்’ வெளியாகி 40 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் வகையில் இப்படத்தையும் 2022-ம் ஆண்டு வெளியான இதன் தொடர்ச்சியான ‘டாப் கன்: மேவரிக்’ படத்தையும், மே 15-ம் தேதி இந்தியாவில் மீண்டும் வெளியிடுகின்றனர். ஒரு வாரத்துக்கு மட்டும் திரையிடப்படும் என்று பாரமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

——-

“நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் விஜய் எனும் சக்தி அரசியலில் நிரந்தரமாக நிலைத்திருக்கும்” என்று பாடகர் ஸ்ரீனிவாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக தேர்தல் வாக்குப் பதிவு குறித்து பிரபல பாடகர் ஸ்ரீனிவாஸ் தனது எக்ஸ் தள பதிவில், “இந்தத் தேர்தலில் போட்டி திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையில் தான் நடப்பதாகத் தெரிகிறது. நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் விஜய் எனும் சக்தி அரசியலில் நிரந்தரமாக நிலைத்திருக்கவே வந்திருக்கிறார் என கருதுகிறேன்.

அதிமுக வலுவாகத் திகழும் மேற்குத் தமிழகத்தின் நிலைமை குறித்து என்னால் உறுதியாகச் சொல்ல இயலவில்லை. ஆனால், விஜய் ஆட்சிக்கு வருகிறாரோ, இல்லையோ இந்தத் தேர்தல் முழுவதுமே விஜய் எனும் நபரைச் சார்ந்தே அமையப்போகிறது என்று தோன்றுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

——–

இணையத்தில் ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியான விவகாரம் தொடர்பாக, எடிட்டர் சங்கத்தில் இருந்து பிரதீப் இ.ராகவ் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

‘ஜனநாயகன்’ படத்தை இணையத்தில் லீக் செய்து தொடர்பாக தமிழக காவல் துறையினர் 6 பேரை கைது செய்துள்ளனர். இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே, ‘ஜனநாயகன்’ படத்தின் எடிட்டரான பிரதீப் இ.ராகவை தென்னிந்திய திரைப்பட எடிட்டர்கள் சங்கத்தில் இருந்து இடைநீக்கம் செய்திருக்கிறார்கள்.

இது தொடர்பாக தென்னிந்திய திரைப்பட எடிட்டர்கள் சங்கம் வெளியிட்டுள்ள கடிதத்தில், “படத்தொகுப்பாளர் பிரதீப் இ.ராகவ் தென்னிந்திய திரைப்படத் தொகுப்பாளர் சங்கத்தின் சட்டவிதிகளை மதிக்காமல் தொடர்ந்து ‘ஜனநாயகன்’ உட்பட தான் பணியாற்றும் அனைத்து திரைப்படங்களுக்கும் சங்க உறுப்பினர் அல்லாதவர்களை உதவியாளராக பயன்படுத்துவது சங்க செயற்குழு முன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு சங்க சட்ட விதிகளுக்கு எதிரானது. மேலும், ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியாக நேரடியாக பிரதீப் இ.ராகவ் காரணம் இல்லை என்றாலும், அவரது கவனக்குறைவே காரணமாக அமைந்துள்ளது என்பதை ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்த நிலை தொடர்ந்தால் திரைப்பட துறையே செயலிழந்து போகும் அபாயம் உள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்காமல் தடுக்கும் கடமை தென்னிந்திய திரைப்படத் தொகுப்பாளர் சங்கத்துக்கு உள்ளது.

திரைத் துறையின் பாதுகாப்பு மற்றும் சங்கத்தின் மாண்பை காப்பாற்ற வேண்டி 17.04.2026 அன்று நடந்த அவசர செயற்குழு கூட்டத்தில், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் முன்னணி படத்தொகுப்பாளர்கள் முன்னிலையில் கலந்தாலோசிக்கப்பட்ட கருத்துகளை கவனத்தில் கொண்டு பிரதீப் இ.ராகவை தென்னிந்திய திரைப்பட தொகுப்பாளர் சங்கம் இடைநீக்கம் செய்து இந்த அறிவிப்பை வெளியிடுகிறது.

இந்த இடைநீக்க காலத்தில் சங்கம் பிரதீப் இ.ராகவுக்கு எந்தவிதமான ஒத்துழைப்பும் வழங்காது எனவும், மேலும் சகோதர சங்கங்கள் இந்த அறிவிப்புக்கு முழு ஆதரவு தருமாறும் கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.

——-

‘ஜனநாயகன்’ இணையத்தில் லீக்கானது மிகவும் துரதிஷ்டவசமானது என்று மமிதா பைஜு வேதனை தெரிவித்துள்ளார்.

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’. கே.வி.என் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம், தணிக்கைப் பிரச்சினையால் இன்னும் வெளியாகாமல் உள்ளது. சில தினங்களுக்கு முன்பு முழுப்படமும் இணையத்தில் லீக்கானாது. இது தொடர்பாக 6 பேரை கைது செய்துள்ளது தமிழக காவல்துறை. இந்த வெளியீட்டால் படக்குழுவினருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.’ஜனநாயகன்’ வெளியீட்டால் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளது. இந்த வெளியீடு தொடர்பாக இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள மமிதா பைஜு, “இது மிகவும் ஏமாற்றமும், வேதனையும் தருகிறது. எத்தனையோ பெரும் கனவுகளும், கடின உழைப்பும் இந்த வெளியீட்டினால் வீணாகப் போயுள்ளது. ஆனால், அவை இதற்கு தகுதியானது அல்ல.

ஆரம்பத்தில், இந்த வெளியீடு குறித்து சமூக வலைதளத்தில் வந்த தகவல்களை நம்பவில்லை. ஏனென்றால் அவற்றில் வரும் அனைத்தையும் நம்பிவிட முடியாது. என் சகோதரர் தான் முதன்முதலில் இந்த வெளியீடு குறித்து தெரிவித்தார். ஏன் இப்படி என நினைத்தேன். இந்த லீக் என்பது மிகவும் துரதிஷ்டவசமானது” என்று தெரிவித்துள்ளார் மமிதா பைஜு.

Related posts