ஏதோ இந்த ஓட்டு பிரியுது, யாருக்கோ ஏதோ ஒண்ணு சரியுது, மக்கள் மனதில் ஏதோ ஒரு விஷயம் பத்தி எரியுது” என நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர் தெரிவித்தார்.
சென்னை, தி.நகர், இந்தி பிரச்சார சபா வாக்குச்சாவடியில் டி.ராஜேந்தர் வாக்கு செலுத்தினார். பிறகு, செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஏதோ இந்த ஓட்டு பிரியுது, யாருக்கோ ஏதோ ஒண்ணு சரியுது, மக்கள் மனதில் ஏதோ ஒரு விஷயம் பத்தி எரியுது… இவ்வாறாகத் நான் தேர்தலை நான் பார்க்கிறேன்.
இன்றைய நிலையில் சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினராக வருவதற்கு குறைந்தது ரூ.20 கோடி முதல் 110 கோடி செலவு செய்ய வேண்டியுள்ளது. பதவியில் இருப்பவர்கள் பல லட்சக்கணக்கான கோடிகள் குவித்து வைத்துள்ளனர். தற்போது ஓட்டு பெறுவதற்கு சிலர் கரன்சியைதான் நம்புகிறார்கள். மக்களின் கரத்தை நம்பவில்லை” என்றார்.
——-
தேர்தலில் மாற்றம் வரவேண்டுமா, இல்லையா என்பதை நான் முடிவு செய்ய முடியாது. மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. நான் ஒரு நடிகனாக இருக்கிறேன். எனக்கு எல்லா கட்சியிலும் ரசிகர்கள் உள்ளனர். எனவே, ஒரு சார்பாக எந்த கருத்தையும் சொல்ல முடியாது” என நடிகர் சிலம்பரசன் தெரிவித்தார்.
சென்னை தி.நகரில் நடிகர் சிலம்பரசன் இன்று வாக்களித்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ அனைவரும் வாக்களிக்கும்படி நேற்று ட்வீட் போடலாம் என்று இருந்தேன். ஆனால், இந்த தேர்தல் ஒரு வித்தியாசமானதாக இருப்பதால், அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளனர். அதனையே நல்ல மாற்றமாக நான் பார்க்கிறேன். தேர்தலில் மாற்றம் வரவேண்டுமா, இல்லையா என்பதை நான் முடிவு செய்ய முடியாது. மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.
நான் ஒரு நடிகனாக இருக்கிறேன். எனக்கு எல்லா கட்சியிலும் ரசிகர்கள் உள்ளனர். எனவே ஒரு சார்பாக எந்த கருத்தையும் சொல்ல முடியாது. அவரவருக்கு பிடித்தவருக்கு ஓட்டு போட போகிறார்கள்.
இந்த தேர்தலில் ஓட்டு போட்டே ஆகவேண்டும் என அபரிமிதமான ஆர்வம் தெரிகிறது. மே 4-ஆம் தேதி பார்ப்போம். இந்த முறை இளைஞர்கள் அதிகம் வாக்களிப்பது நல்ல விஷயம்தான். என் அப்பா டி.ஆர் சொன்னது அவரது கருத்து. நான் வேறு, அவர் வேறு. மக்கள் தெளிவாக உள்ளார்கள். அவர்கள் சரியானவர்களையே தேர்ந்தெடுப்பார்கள் என நம்புகிறேன்” என்றார்.
——–
தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தனது வாக்கைப் பதிவு செய்த நடிகை சிம்ரன், “வாக்குச்சாவடி என்பது சினிமா ஷூட்டிங் அல்ல” என்று பதிவிட்டுள்ளார்.
சென்னையில் தனது கணவருடன் வந்து வாக்களித்த சிம்ரன், பின்னர் தனது எக்ஸ் பக்கத்தில், “நிஜத்தின் மீது கவனம் செலுத்துவோம், நாடகங்களைத் தவிர்ப்போம். இது வாக்குச்சாவடியே தவிர, சினிமா படப்பிடிப்பு தளம் அல்ல. நாம் வாக்களிக்கும் போது அனைவரும் சமமானவர்களே. வாக்களிப்பது என்பது எனது உரிமை மட்டுமல்ல, அது எனது பொறுப்பு” என்று தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இதில் மொத்தம் 5.73 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இரவு 8.50 மணி நிலவரப்படி சுமார் 85.05 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
தேசம் சுதந்திரம் பெற்ற பிறகு நடைபெறும் தமிழத்தில் முதல் முறையாக 85 சதவீத வாக்காளர்கள் தங்களது வாக்கினை பதிவு செய்துள்ளது இதுவே முதல் முறையாகும். அதிகபட்சமாக கரூரில் 91.97% வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 75.48% வாக்குகள் பதிவாகியுள்ளன.
——
வாக்களித்த நடிகர் அஜித்குமார், ‘மாற்றம் தேவையில்லை’ என்று கூறியதாக தகவல் வெளியான நிலையில், அவர் அப்படி எதுவுமே கூறவில்லை என்று அவரது மேலாளர் விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் அஜித்குமார் சென்னை திருவான்மியூரில் உள்ள பாரதிதாசன் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடிக்கு இன்று காலை 7 மணிக்கு முன்பாகவே வந்தார். சிறிது நேரம் காத்திருந்த அவர், வாக்குப் பதிவு தொடங்கியதும் முதல் நபராக வாக்களித்தார்.
அஜித் வந்திருப்பதை அறிந்த ரசிகர்கள், பொதுமக்கள் வாக்குச்சாவடிக்கு வெளியே குவிந்தனர். கூட்ட நெரிசல் அதிகரித்ததால், போலீஸ் பாதுகாப்புடன் வெளியே வந்த அஜித், காரில் ஏறிச் சென்றார்.
இதற்கிடையே, வாக்களித்துவிட்டு வெளியே வந்த அஜித்திடம் பேட்டி எடுக்க செய்தியாளர்கள் முயன்றனர். அப்போது, ‘மாற்றம் தேவையா?’ என்று செய்தியாளர் கேட்டதற்கு ‘மாற்றம் தேவையில்லை’ என அஜித் பதில் அளித்ததாக சில ஊடகங்கள், சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
இதன் தொடர்ச்சியாக, ‘மாற்றம் தேவையில்லை என அஜித் பதில் அளித்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ என்று முதல்வர் ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு முதல்வர், ‘அஜித் நல்ல கருத்துதானே கூறியுள்ளார். அவருக்கு நன்றி’ என்று பதில் அளித்தார்.
இந்நிலையில், அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கத்தில், ‘வாக்களித்துவிட்டு வந்த அஜித்குமார் எந்தவிதமான அரசியல் கருத்தையும் வெளியிடவில்லை. மாற்றம் தேவையில்லை என்பது போன்ற பதிலையும் அவர் கூறவில்லை. செய்தியாளர் ஒருவர் கேள்வி கேட்டபோது, ‘பேட்டி வழங்க முடியாது’ என்ற பொருளில் அஜித் கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.
——
