டென்மார்க் பாராளுமன்ற தேர்தல் முடிந்தது என்ன செய்யப் போகிறது நாடு..?

டென்மார்க்கின் பாராளுமன்றத் தேர்தல் வழமைபோல ஒரு கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற முடியாத நிலையில் முடிவடைந்திருக்கிறது.

இரண்டு அணிகள் முன்னிலை பெற்றுள்ளன சிவப்பு அணி, நீல அணி. இந்த இரண்டுமே பல கட்சிகளை கொண்ட, பல வேறு நோக்கங்களை கொண்ட கட்சிகளின் கூட்டணியாகும்.

100 வீதமான வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. வாக்களிப்பு வீதம் 84 வீதமாக இருப்பது ஓர் உயர் எண்ணிக்கையாகும்.

இப்போதய ஸ்ரேற் மினிஸ்டர் மெற்ற பிரடிக்சன் தான் பதவியில் தொடர இருப்பதாக கூறுகிறார் ஆனால் அவருடைய அணியில் தெளிவான பெரும்பான்மை இல்லை.

நீல அணிக்கு தலமை தாங்கும் வென்ஸ்ர கட்சிக்கும் பெரும்பான்மை இல்லை ஆனால் பேரம் பேசுவதன் மூலம் ஆட்சியை அமைக்க முயல்கிறார்கள்.

இவர்கள் இருவரில் யாருடைய அணியில் போவது என்ற முடிவை எடுக்கும் கிங் மேக்கராக முன்னாள் ஸ்டேட் மினிஸ்டரும் பின்னால் வெளியுறவுத்துறை அமைச்சருமான லாஸ் லொக்க ராஸ்முசனின் மொடரேட் கட்சி நிற்கிறது. இவர்கள் எந்த அணியில் சாய்கிறார்களோ அந்த அணி ஆட்சி அமைக்க முடியும்.

சிவப்பு அணி 48.2 வீதமான வாக்குகளை பெற்று 84 ஆசனங்களை தொட்டுள்ளது. நீல அணி 44 வீதமான வாக்களை பெற்று 77 ஆசனங்களை தொட்டுள்ளது. நடுவில் இருக்கும் மொடரேட் கட்சி 7.7 வீதமான வாக்குகளை பெற்று 14 ஆசனங்களை அடைந்துள்ளது.

சோசல் டெமக்கிரட் கட்சிக்கு இது நல்ல தேர்தல் அல்ல 21.9 வீதமான வாக்குகளை பெற்று முதலிடம் பெற்றாலும் 5.6 வீதமான பின்னடைவு கண்டுள்ளது. அதுபோல நீல அணியின் தலைமைக்கட்சியான வென்ஸ்ர 10.1 வீதமான வாக்குகளை பெற்றுள்ளது 3.1 வீதம் வீழ்ச்சி, தலை நகரில் ஓர் ஆசனத்தைக் கூடப் பெற முடியவில்லை.

தேர்தலில் நல்ல முன்னேற்றத்தை தொட்டது டேனிஸ் போல்க்கப்பார்டி ஆகும் 9.1 வீத வாக்குளை பெற்றுள்ளது இது 6.5 வீதமான முன்னேற்றமாகும். ஆனால் இவர்களின் கருத்து காலாதியான காலம் இதுவாகும்.

முன்னேற்றம் கண்ட கட்சிகள் முன்னேறிய வீதம் : எஸ்.எப். 3.3, கொன்ஸ்சவேட்டிவ் 2.1, போவன்ச : 2.1, றடிகல வென்ஸ்ர 2.0, லிபரல் அலையன்ச 1.5, என்கில்ஸ் லிஸ்ற : 1.2 இவர்கள் முன்னேறுவதாலோ பின்னேறுவதாலோ எதுவும் நடக்கப் போவதில்லை சிறிய கட்சிகள் ஆளும் அணியை தீர்மானிக்கும் மொடரேட் கூட 1.6 வீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.

இந்த வாக்களிப்பை பார்த்தால் ஆளும் அணி தனது கடமையை சரிவர செய்யவில்லை என்பதும், எதிரணி அதற்கு பதிலாக ஆட்சிக்கு வரும் தகுதி இல்லை என்பதும், இடை நிலையில் உள்ள கட்சியும் சரியான கட்சியாக கருதப்படவில்லை என்பதும் மக்கள் வாக்குகள் தரும் விடையாகும். மக்களின் மனக்குறையை தீர்க்கும் பெரிய கடமை கண் முன்னால் உள்ளது. அதற்கான தலைமைத்துவ தகுதி வேண்டும்.

01. கிறீன்ட்லாந்து பிரச்சனை 02. எரிபொருள் விலையேற்றம் 03. மத்தியகிழக்கு போர் ஐரோப்பாவில் பரவும் அபாயம், 04 டொனால்ட்டிரம்ப், புற்றின் போன்றவர்களை சமாளிக்கும் இராஜதந்திரம் 05. ஆட்டம் காணும் ஐரோப்பிய ஒன்றியத்தை காக்கும் வலு, 06. உதறும் நேட்டோவை காக்கும் வலு 07 சீன பொருளாதார போட்டியை எதிர்கொள்ளும் மதியூகம் 08. ஏ.ஐ தொழில் நுட்ப மாற்றத்தை சந்திக்கும் திறன் 09. டேனிஸ் ஏற்றுமதி சந்தையை காக்கும் பேரம் பேசும் ஆற்றல் 10. போர் ஒன்று வந்தால் தலைமை தாங்கும் உறுதியான தலைமை இவைகள் யாரிடம் இருக்கிறது. அப்படி யாராவது இருந்திருந்தால் மக்கள் அந்த அணியை அறுதிப் பெரும்பான்மை பெற வைத்திருப்பர்.

சூப்பர் ஸ்டார் அரசியல் தலைவர் டென்மார்க்கில் இல்லை, சூப்பர் கட்சியும் இல்லை. அதேவேளை ஐரோப்பா முழுவதும் உள்ள பெரும் பலவீனம் இதுவாகும். இதற்கு டென்மார்க் விதிவிலக்கல்ல.

மொத்தத்தில் இது உள்ளதை கொண்டு உலகை ஆளும் தேர்தலாக முடிந்திருக்கிறது. யார் வந்தாலும் புதிதாக எதையும் செய்ய எல்லாப்பக்கங்களிலும் பொருளாதார நெருக்கடி இருக்கிறது. பெற்றோல் விலையும், பொருட்களின் விலை உயர்வும், எரிபொருள் கட்டணங்களும் விண்ணை தொட்டுள்ளன. இரண்டாவது உலக மகாயுத்தத்தின் பின் சவாலான காலம் இது. மிக மிக தகுதியான தலைமை இல்லாவிட்டால் கடந்து செல்ல முடியாது. இதை தாண்டும் வீரர் யார் காத்திருக்கிறது நாடு.

அலைகள் 25.03.2026

Related posts