பாடத்திட்டத்தில் இடம்பெற்ற தவறு விளக்கமளித்த பிரதமர்!

கல்வி மறுசீரமைப்பின் கீழ் தரம் 6 மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் பொறுத்தமற்ற இணையதள முகவரியொன்று உள்ளடக்கப்பட்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.இந்நிலையில் கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய இது குறித்து நேற்று வியாழக்கிழமை (8) அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்து விளக்கமளித்துள்ளார்.

‘எதிர்காலத்தில், பாடசாலைப் பாடப்புத்தகங்களை அச்சிடும் பொறுப்பு கல்வி வெளியீட்டுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படும். குறைபாடுகள் அடையாளம் காணப்பட்ட அந்த மாதிரிப் பாடப்புத்தகங்கள் எந்தவொரு மாணவருக்கும் விநியோகிக்கப்படவில்லை என்பதுடன், உள்வாரி விசாரணைகள் நிறைவடையும் வரை அச்சிடப்பட்ட அனைத்து பிரதிகளும் சீல் வைக்கப்பட்டுள்ளன.’ என்று கல்வி அமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

அஸ்கிரிய பீடத்தின் தரப்பின் மகாநாயக்க தேரர் வரக்காகொட ஸ்ரீ ஞானரதன தேரர் மற்றும் மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் ஆகியோருக்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய தரம் 6 ஆங்கில மாதிரிப் பாடப்புத்தகத்தின் முதலாம் அச்சுப்பதிப்பில் ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

——-

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அவர் கம்பஹா நீதவான் நீதிமன்றில் இன்று (9) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

எவ்வாறாயினும் அவர் வௌிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

2001ஆம் ஆண்டு அவரது தனிப்பட்ட பாவனைக்காக இராணுவத்தினால் வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, 2019ஆம் ஆண்டு திட்டமிட்ட குற்றவாளியான மாகந்துர மதூஷிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கண்டெடுக்கப்பட்டது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகளுக்காக அவர் கடந்த மாதம் 26ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts