முகவுரை..
இது எல்லோரையும் அன்புடன் நேசிக்கும் மகிழ்ச்சியான எழுத்து..
முதலில் மகத்தான புத்தாண்டு வாழ்த்துக்கள்.
பொற்காலம் என்பது மனித வாழ்வின் மிகச்சிறந்த பருவமாகும்.. தங்கம் நெருப்பில் எரிந்து, மறைந்து போகாமல் வெளியே வருகின்றபோது அது தங்கமாக மிளிர்கிறது.. பெரும் சோதனைகளையும், அவமானங்களையும் சந்தித்து வெளியே வரும் போதுதான் வாழ்வு பொற்காலமாகிறது..
ஏரா என்றால் என்ன ஒரு நவீனத்தின் தொடக்கமென ஆங்கிலத்தில் அதைப் பொருள் கொள்கிறார்கள். ஆனால் நமது நாட்டில் ஏராவிற்கு இன்னொரு பொருள் இருக்கிறது. ஒரு கப்பலைக் கட்டும்போது அதற்கு முள்ளந்தண்டு போல அமைக்கப்படும் முதலாவது உறுதியான மரம்தான் ஏரா ஆகும்.
முழுமையாக கப்பலை தாங்கப்போவது அதுதான்.. அதை ஓடும் தினம் ஒரு விழாவாக நடைபெறும், அதற்குப் பெயர் ஏரா ஓடுகை என்பதாகும். அதுபோலத்தான் பொற்காலத்தை தொடங்குவதற்கும் ஓர் ஏரா ஓட்டம் அவசியம். அதனால்தான் பொற்காலத்தின் புதிய ஏரா என்பது இதன் தலைப்பாகிறது.
காலம் எல்லோருக்கும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. வாய்ப்பு ஒரு முறைதான் வரும் என்பது ஒரு பழமொழி. அந்த வாய்ப்பை நாம் தவறாது பற்றிக்கொள்ள வேண்டும். சம காலத்தில் அதை வேண்டாம் என்று நிராகரிக்கத் தூண்டும் பெரும் நெருக்கடிகளையும் கூடவே அனுப்பும், அந்த நெருப்புக்கடலை நாம் தாண்ட வேண்டும். அதைத் தாண்ட முடியாது அந்தக் கடலோடு போனவர்கள் கோடி.. தங்கமாக வெளியேறியவர்கள் மிகச் சொற்பமே..
அந்த நெருப்பு நேரம் யாருமற்று தனிமையில் நிற்பது போன்ற பொட்டல் வெளியக நம்முன் நிற்கும். வேண்டாமடா சாமி, கைவிட்டு பழைய வாழ்விற்கே போகலாமென்று மனது சொல்லும். மனமொரு குரங்கு அதைக் கட்டிப் போடுங்கள், அப்போதுதான் காலம் இதுவரை மறைத்து வைத்திருற்த புத்தம் புதிய வழியை நம் முன் போடும். நீங்கள் உறுதியாக நின்றால் போதும் அது முதல் கதவைத் திறக்கும்.
அப்போது ஓர் அதிசயம் தெரியும், நமது பணிகளுக்கேற்ற புதியவர்களையும், புதிய சூழல்களையும் அது நம்முன் வைத்து ஒரு சேவகன் போல கைகட்டி நிற்கும். அந்த அழகு ஒரு மாயை அல்ல, அதுதான் நிஜம். அதைப் பரிபூரணமாக நம்பிவிட்டால் போதும், கப்பலின் வடிவத்தை தீர்மானிக்கும் வங்குக்கால் மரங்களை அடுக்குவது போல நமது பணிளை படபடவென அடுக்கிச் சொல்லும்.
இவனிடம் ஒரு பணியை ஒப்படைத்தால் ஏதோ கடைசிவரை அதை செய்வான் என்ற பேர்வழிகளுக்கு காலம் வாய்ப்பை தருவதில்லை. ஒருவன் அதை வெற்றியாக முடிப்பானா இல்லையா என்பதைக் கண்டு பிடிக்க காலத்திற்கு திறமை இருக்கிறது. அவனிடம் மட்டுமே காலம் அதை ஒப்படைக்கும்.
காலம் என்பது அனிச்சையானது நாம் சொல்வதைத்தான் செய்யும் என்பது உலக அறிஞர்களின் எழுத்துக்களாக உள்ளன. ஆனால் அது உண்மையல்ல, காலத்தை அவர்கள் கண்டு பிடிக்கவில்லை. காலம் என்பது நாம் கேட்டாலும், நமது பணிக்கு எது தேவையோ அதைத்தான், அதை மட்டும்தான் தரும். அதில் ஒரு துளி கூட அதிகமாக இருக்காது.
அவ்வளவு மட்டுமா இல்லை, இதற்குள் மேலும் எண்ணற்ற, எழுத்தில் வடிவம் கொடுக்க முடியாத அதிசயங்கள் எல்லாம் உண்டு. அதைக் கண்டறியவே எழுபது வருடங்களாக எனது போர் தொடர்கிறது. பொற்காலத்தின் ஏராவை ஓட இத்தனை ஆண்டுகள் உழைக்க வேண்டியிருந்தது. அந்தக் காலத்தை தொடங்கி வைத்த ஆண்டுதான் 2025 என்கின்ற மகத்தான ஆண்டு.
அது கடந்து போகும் ஆண்டல்ல அதுதான் 2026 ஆக இன்று புதிதாய் பிறந்துள்ளது. நாம் நமது ஏழ்மை மிகு அறிவிற்கு புரிவதற்காக காலத்திற்கு ஒரு கணக்கை வைக்கிறோம்.. காலம் என்பது தொடக்கமும் முடிவுமற்றது, அது கி.மு. – கி.பி சிறைகளுக்குள் அகப்பட்ட ஒன்றல்ல. ஆனாலும் இப்போதைக்கு விளங்கப்படுத்த இது ஒரு வழி என்பதால் அந்த அடைப்புக்குறிக்குள் நின்று இந்த எழுதுகையை ஆரம்பிக்கிறேன்.
கி.செ.துரை
01.01.2026
