நாட்டின் பொருளாதார இலக்குகளுக்கு பாதிப்பு இல்லாத வகையிலேயே அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணங்களை வழங்குதல் மற்றும் நாட்டை மீளக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (19) நடைபெற்ற அனர்த்த நிவாரணங்களுக்கான குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
டித்வா சூறாவளியின் பின்னர் கடந்த 3 வாரங்களாக நாட்டை வழமைக்கு கொண்டு வருவதற்காக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். 27ஆம் திகதி முதல் முப்படையினர், அரச அதிகாரிகள், மக்கள், சர்வதேச சமூகம், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வழங்கிய ஒத்துழைப்புகள் மூலம் ஜனாதிபதியின் தலைமைத்துவத்தில் முன்னெடுத்த நடவடிக்கைகள் ஊடாகவே நாட்டை வழமைக்கு கொண்டுவர முடியுமாகி இருக்கின்றது.
2025ஆம் ஆண்டில் அனர்த்த நிவாரணங்களுக்காக 75 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், 2026ஆம் ஆண்டில் 500 பில்லியன் ரூபாய் குறைநிரப்பு ஊடாக ஒதுக்கப்பட்டுள்ளது. எமது பொருளாதார திட்டமிடல்களுக்கு பாதிப்புகள் இல்லாமலேயே இந்த ஒதுக்கீடுகள் செய்யப்படுகின்றன.
நாங்கள் கடன் சுமைக்குள் சிக்கிக்கொள்ளாமல் பயணிக்கும் வகையிலேயே இந்த திட்டமிடல்கள் நடக்கின்றன. எமது திட்டமிடல்களால் பொருளாதார இலக்குகளுக்கு பாதிப்பு இல்லாமல் இதனை செய்ய முடியுமாக இருக்கின்றது. இந்த நேரத்தில் சர்வதேச சமூகத்தினர், புலம்பெயர் சமூகத்தினர், நாட்டு மக்கள், தனியார் நிறுவனங்கள் என்பன பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளனர். இவர்களை நாங்கள் பாராட்டுகின்றோம். அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை காரணமாகவே இவ்வாறு உதவிகள் கிடைக்கின்றன.
எமது இந்த நடவடிக்கையின் போது இதில் யாரை இணைத்துக்கொள்வது என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டியுள்ளது. நம்பிக்கையை இழந்த, பேரழிவுகளின்போது மோசடிகளில் சிக்கியவர்களை நாங்கள் இந்த நேரத்தில் இணைத்துக்கொள்ளாமல் இருப்போம் என்ற யோசனையை முன்வைக்கின்றோம். இந்த நேரத்தில் முழு நாட்டையும் ஒன்றிணைக்கவும் மற்றும் சர்வதேச நாடுகள் முன்வருவதற்கும் நாங்கள் முன்வைத்துள்ள ஊழல் அற்ற அரசாங்கம் தொடர்பான யோசனைகள் மீதான நம்பிக்கையே காரணமாக அமைந்துள்ளது என்றார்.
