இலங்கையில் பொழியும் மோசமான மழை முக்கிய தகவல்கள்

களனி கங்கையை அண்டிய, கொழும்பு, வத்தளை மற்றும் அதனைச் சூழ்ந்த பகுதிகளில் வெள்ளநீர் வேகமாக உயர்ந்து வருவதாக அதிகாரிகள் அவசரமாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் விளைவாக வத்தள, ஹுனுப்பிட்டிய, கஹத்துடுவ, எலக்கந்த, பள்ளியாவத்த வீதி உள்ளிட்ட பல பகுதிகளில் நீர்மட்டம் கணிசமாக அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக, அபாய எச்சரிக்கை வலயத்தில் உள்ள குடியிருப்பாளர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற வேண்டும் என்று அனர்த்த முகாமைத்துவ மையமும், பொலிஸாரும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதோடு, தேவையானால் படகு சேவைகளும் இயக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடுகளில் இருந்து வெளியேற முடியாமலும் நீர் அதிகமாக காணப்படும் இடங்களில் இருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் மக்களுக்கு உதவுவதற்காக படகு சேவை புரிபவர்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில் குறித்த மாவட்டங்களுக்கு பொறுப்பானவர்களை தொடர்பு கொள்வதன் மூலம் படகு சேவைகளை பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்த்து, அதிகாரிகள் வழங்கும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

—–

டிட்வா புயல் 28.11.2025 வெள்ளிக்கிழமை இரவு 10.00 மணி நிலைவரப்படி, திருகோணமலையின் குச்சவெளியில் மையம் கொண்டுள்ளது. இது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வருகின்றது. இது எதிர்பார்த்த வேகத்தில் நகரவில்லை. தற்போது மணிக்கு 5 கிலோமீற்றர் வேகத்திலேயே நகருகின்றது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்தார்.

டிட்வா புயலின் மையப்பகுதி நாளை 29 ஆம் திகதி காலை வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளத்துக்கு அண்மையாக கடலுக்குச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. நகர்வு வேகம் குறைவாக உள்ளமையால் கரையைக் கடக்கும் நேரமும் தாமதமாகும்.

அதனால் நாளையும் வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளுக்கு அவ்வப்போது மிதமானது முதல் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மன்னார் மாவட்டங்களுக்கு தற்போது கிடைத்து வரும் கனமழை இரவு 2.00 மணிவரை (29.11.2025) நீடிக்கும் வாய்ப்புள்ளது. காற்றின் வேகமும் வடக்கு மாகாணத்தில் படிப்படியாக அதிகரிக்கும்.

ஆகவே வடக்கு மக்கள் மிக அவதானமாக இருக்குமாறு வேண்டப்படுகிறார்கள். குறிப்பாக தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் மிகுந்த அவதானமாக இருப்பது அவசியம். வெள்ளநீர் அதிகரிக்கும் சந்தர்ப்பத்தினை உணர்ந்தால் முன்கூட்டியே உரிய அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு பாதுகாப்பான இடத்துக்கு செல்வது சிறந்தது.

அதேவேளை வடக்கு மாகாணத்தின் கரையோரப் பகுதிகள் குறிப்பாக வடக்கு மாகாணத்தின் மேற்கு கரையோரப்பகுதிகள் மற்றும் தீவுப்பகுதிகளில் Storm Charge எனப்படும் கடல்நீர் குடியிருப்புக்களுக்குள் உட்புகுதல் செயற்பாடு இடம்பெறும். ஆகவே கரையோரப் பகுதி மக்கள் இது தொடர்பாகவும் அவதானமாக இருப்பது அவசியம்.

கடந்த சில நாட்களாக இலங்கையைப் புரட்டிப் போட்ட, இலங்கையின் காலநிலை வரலாற்றில் முன்னெப்போது இல்லாத அளவுக்கு மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்திய ஒரு வரலாற்றுத் துன்பியல் நிகழ்வுகளுக்கு காரணமான ‘டிட்வா’ புயல் நாளையுடன் இலங்கையை விட்டு நீங்குகிறது என்பது இலங்கையர்கள் அனைவருக்கும் மிக மகிழ்ச்சியான செய்தியாகும்.

——-

தற்போது நாடு முழுவதும் நீடித்து வரும் கடும் மழை மற்றும் மோசமான வானிலை நிலைமையைக் காரணமாகக் கொண்டு, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) வெளியிட்டிருந்த மண்சரிவு முன் எச்சரிக்கை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 11 மாவட்டங்களில் உள்ள 91 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மிக உயர்ந்த மட்டமான 3ஆம் கட்ட வெளியேறும் அறிவிப்பான சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பெய்யும் கன மழை காரணமாக பல பகுதிகளில் நிலச்சரிவு, பாறை சரிவு மற்றும் நிலத்தடி இடிவுகள் ஏற்படும் ஆபத்து மிக அதிகரித்துள்ளதால், மக்கள் அவசியமெனில் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு நகர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிரதேச செயலாளர் பிரிவுகள்:

பதுளை மாவட்டம்

மீகஹகிவுல, பதுளை, ஹாலிஎல, கந்தகெட்டிய, பசறை, ஊவா பரணகம, வெலிமடை, லுணுகல, எல்ல, பண்டாரவளை, சொரணாதோட்டம், ஹல்துமுல்லை.

கொழும்பு மாவட்டம்

பாதுக்க, சீதாவக்க.

கம்பஹா மாவட்டம்

அத்தனகல்ல.

களுத்துறை மாவட்டம்

புலத்சிங்கள, இங்கிரிய, ஹொரணை.

கண்டி மாவட்டம்

உடபலாத்த, கங்கவட்ட கோரளை, தொளுவ, மினிப்பே, பாத்தஹேவாஹெட்ட, மேததும்பற, தெல்தோட்டை, அக்குரணை, கங்க இஹல கோரளை, பாததும்பற, யட்டிநுவர, தும்பனே, உடுநுவர, ஹாரிஸ்பத்துவ, பூஜாபிட்டிய, பஸ்பாகே கோரளை, பன்விலை, ஹதரலியத்த, குண்டசாலை.

கேகாலை மாவட்டம்

மாவனெல்ல, ரம்புக்கன, அரநாயக்க, புலத்கொஹுபிட்டிய, கலிகமுவ, கேகாலை, யட்டியாந்தோட்டை, தெஹிஓவிட்ட, ருவன்வெல்ல, வரகாபொல, தெரணியகலை.

குருநாகல் மாவட்டம்

ரிதிகம, மாவதகம, மல்லவபிட்டிய, நாரம்மல, அளவ்வ.

மாத்தளை மாவட்டம்

நாவுல, ரத்தோட்டை, அம்பன்கங்க கோரளை, உக்குவலை, வில்கமுவ, யட்டவத்த, மாத்தளை, பல்லேபொல, லக்கல, பல்லேகம.

மொனராகலை மாவட்டம்

பிபில, மேதகம.

நுவரெலியா மாவட்டம்

வலப்பனை, ஹங்குராங்கெத்த, நீல்தண்டாஹின்ன, மதுரட்ட, நுவரெலியா, கொத்மலை மேற்கு, கொத்மலை கிழக்கு, அம்பகமுவ, தலவாக்கலை, நோர்வுட்.

இரத்தினபுரி மாவட்டம்

கிரியெல்ல, இரத்தினபுரி, எஹெலியகொடை, குருவிட்ட, கொலன்ன, எலபாத, அயகம, பலாங்கொடை, கலவான, இம்புல்பெ, கஹவத்தை, நிவித்திகல, ஒப்பநாயக்க, கொடகவெல, பெல்மதுல்ல.

மக்கள் அனைவரையும் எச்சரிக்கையுடன் இருக்கவும், தாழ்வான இடங்களில் வசிப்போருக்கு உடனடி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சிறப்பு அறிவுறுத்தல்களை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வழங்கியுள்ளது.

——-

நாட்டில் தற்போது உருவாகியுள்ள திடீர் அனர்த்த நிலையை கருத்தில் கொண்டு, பொதுமக்களுக்கு தடையின்றி சுகாதார சேவைகள் வழங்குவதற்காக இன்று வெள்ளிக்கிழமை (28) முதல் டிசம்பர் 04 வரை ஒரு வார அவசர சுகாதார நிலையை சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சகம் பிரகடனம் செய்துள்ளது.

இந்த அவசரநிலைக்கமைய, அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கும் இன்றைய தினம் முதல் மறு அறிவிப்பு வரும்வரை அனைத்து விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன என்றும், அதனைத் தெரிவிக்கும் விசேட சுற்றுநிருபத்தில் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க கையொப்பமிட்டுள்ளார்.

சுற்றுநிருபத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நாட்டின் அனைத்து வைத்தியசாலைகளின் பணிப்பாளர்கள் மற்றும் நிறுவனத் தலைவர்கள் நோயாளர் பராமரிப்பு சேவைகள் 24 மணி நேரமும் தடையின்றி நடைபெறுவதை உறுதிசெய்ய தேவையான பணியாளர் ஒழுங்குமுறைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அனர்த்தங்களுக்கு உள்ளான பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகள், சிகிச்சையில் உள்ள நோயாளிகளில் வைத்திய ஆலோசனைக்கு ஏற்ப பாதுகாப்பாக வீடு திரும்பக்கூடியவர்களை விடுவிக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் அபாயமான நிலையில் உள்ள கட்டிடங்களில் அமைந்துள்ள மருத்துவ உபகரணங்கள் மற்றும் நோயாளர் பராமரிப்பு பிரிவுகள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வைத்தியசாலைகளுக்குத் தேவையான மருந்துகள், மருத்துவ வாயுக்கள் மற்றும் அத்தியாவசிய உபகரணங்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க தேவையான நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்பு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அனர்த்தநிலை காரணமாக ஏற்படக்கூடிய அவசர சூழ்நிலைகளை கணக்கில் கொண்டு, தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் (ICU) உள்ள நோயாளிகள் மற்றும் ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளை அருகிலுள்ள பாதுகாப்பான வைத்தியசாலைகளுக்கு மாற்றுவதற்கான முன்கூட்டிய திட்டம் ஒன்றை தயாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

திடீர் அனர்த்தநிலையை எதிர்கொள்ள சுகாதாரத் துறையின் முழுப் பலமும் செயல்பாட்டில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், நாட்டின் அனைத்து சுகாதார அமைப்புகளும் மேம்பட்ட அவசர முன்னெச்சரிக்கைகளுடன் செயல்படுகின்றன.

——

மக்களுக்கு அவசர அனர்த்த நிவாரணங்களை வழங்குதல் மற்றும் நாட்டை மறுசீரமைத்தல் குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய வெளிநாட்டு ராஜதந்திரப் பிரதிநிதிகளுக்குத் தெளிவு படுத்தினார்.

தற்போது நாடு எதிர்கொண்டுள்ள அவசர அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட குடிமக்களுக்கு நிவாரணம் வழங்குதல் மற்றும் நாட்டை மறுசீரமைத்தல் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்துக் கொழும்பில் உள்ள ராஜதந்திரப் பிரதிநிதிகளுக்குத் தெளிவூட்டுவதற்காக, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரின் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (2025 நவம்பர் 28) பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலின்போது, அனர்த்த நிலைமைக்கு முகங்கொடுத்து அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் அவசர நிவாரண நடவடிக்கைகள் மற்றும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மறுசீரமைத்தல், மக்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்துப் பிரதமர் அவர்கள் ராஜதந்திரப் பிரதிநிதிகளுக்குத் தெளிவுபடுத்தினார்.

வெள்ளம் மற்றும் தற்போது நிலவும் அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அரசாங்கம் எடுத்து வரும் உடனடி நடவடிக்கைகள் குறித்தும், மறுசீரமைப்புக்காக எடுக்கப்பட வேண்டிய குறுகிய கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

இந்தச் சவாலான காலப்பகுதியில் இலங்கை அரசாங்கத்திற்குத் தமது உதவிகளையும் ஒத்துழைப்பையும் வழங்குவதாக ராஜதந்திரப் பிரதிநிதிகள் இதன்போது தெரிவித்தனர்.

அத்துடன், மனிதாபிமான உதவிகள், வசதிகள் மற்றும் தொடர்ச்சியான நிவாரணங்களை வழங்குவதற்கும், மறுசீரமைப்புக்காக வெளிநாட்டு உதவிகளை வழங்குவதற்கும் இலங்கை அதிகாரிகளுடன் நெருக்கமாகச் செயற்பட்டு ஒத்துழைப்பதாகவும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.

மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் மற்றும் நாட்டை மீள்சீரமைக்கும் பணிகளுக்கு ஆதரவளிக்கவும், அவற்றின் ஒருங்கிணைப்பு மற்றும் தொடர்பாடலை வலுப்படுத்துவதற்கும், வெளிநாட்டலுவல்கள் அமைச்சினால் அவசரப் பதிலளிப்புப் பிரிவு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவு வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகப் பணிகள் மற்றும் கொழும்பில் உள்ள ராஜதந்திரத் தூதுக்குழுக்களுடன் நெருக்கமாகச் செயல்படவுள்ளது.

தற்போது நிலவும் அனர்த்த நிலைமையினால் பாதிக்கப்பட்ட வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் குறித்த விபரங்களை அறிவதற்காக, இலங்கை சுற்றுலா அவசர அழைப்பு இலக்கமான (1912) ஐ அழைக்கவும். வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் பொதுத் தொடர்பாடல் மற்றும் சர்வதேச பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் திரு. துஷார ரொட்ரிகோவை 070 788 7778 என்ற இலக்கத்தின் ஊடாகத் தொடர்புகொள்வதன் மூலமும் தேவையான உதவிகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

இந்தச் சந்திப்பில் அரசாங்கப் பிரதிநிதிகள், வெளிநாடுகளில் உள்ள இலங்கை ராஜதந்திரப் பிரதிநிதிகள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Related posts