விக்ரம், பா.ரஞ்சித்தின் ‘தங்கலான்’ வீடியோ எப்படி?

நடிகர் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள ‘தங்கலான்’ படத்தின் சிறப்பு வீடியோ காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உட்பட பலர் நடித்துள்ள படம், ‘தங்கலான்’. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. படம் ஜனவரி மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் நடிகர் விக்ரமின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
வீடியோ எப்படி? – சுற்றி எரியும் நெருப்புக்கு இடையில் கண்களில் கண்ணீருடன் விக்ரம் புழுங்கிக் கொண்டிருக்கும் காட்சியுடன் தொடங்குகிறது வீடியோ. அவருக்கான மேக்கப் மற்றும் மேக்கிங் காட்சிகள் வந்து செல்ல, விக்ரமை சுற்றி நின்று தாக்கும் காட்சிகளில் அத்தனை யதார்த்தம்.
எல்லாவற்றையும் தாண்டி சிங்கிள் ஷாட் ஒன்றில் சண்டையிட்டபடியே முன்னோக்கி ஓடி வருகிறார் விக்ரம். இந்த மொத்த வீடியோ மூலம் தனது கதாபாத்திரத்துக்கு விக்ரம் செலுத்தியுள்ள உழைப்பும், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் கூடியுள்ளது. படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Related posts