திரை விமர்சனம்: போர்

புதுச்சேரி மருத்துவப் பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்டி பட்டம் வாங்க முயன்று கொண்டிருக்கிறார் பிரபு செல்வன் (அர்ஜுன் தாஸ்). அங்கு முதலாமாண்டு மாணவராக நுழைகிறார் யுவராஜ் (காளிதாஸ் ஜெயராம்). இருவருக்கும் சிறு வயதிலிருந்தே பகை. அது இங்கும் தொடர்கிறது. இவர்களின் பொதுவான தோழிகளாக ரிஷ்விகா (சஞ்சனா நடராஜன்), காயத்ரி (டி.ஜெ.பானு) இருக்கின்றனர். இன்னொரு பக்கம், மாணவர் தேர்தலில் கல்லூரி டிரஸ்டி மகள் சூர்யாவுக்கும் (அம்ருதா சீனிவாசன்) காயத்ரி குழுவுக்கும் பகை. இந்த இரு பகைகளும் ஒரு புள்ளியில் சேர்கின்றன. அதன் விளைவால் பல்கலைக்கழகம் எப்படி ‘போர்’க்களமாகிறது என்பது கதை.

ஒரு வெப் சீரிஸுக்குரிய அம்சம் கொண்ட கதை இது. ஏழு அத்தியாயங்களை, இரண்டரை மணிநேரத்தில் படமாக தந்த இயக்குநர் பிஜோய் நம்பியாரின் மனத் தைரியம் அதிகம். இளமை துள்ளலாகப் படம் எடுப்பதற்குரிய வாய்ப்புகள் இருந்தும், அதை முடிந்த வரை மிஸ் செய்திருக்கிறார். படம்தொடங்கியது முதலே கதையில் என்ன நடக்கிறது, எதற்காக இந்தக் காட்சி என்கிற குழப்பம் தொற்றிக் கொள்கிறது. அது படம் முடியும் வரை தொடர்வது திரைக்கதை ஓட்டையை வெளிச்சம் போட்டு காட்டிவிடுகிறது.

மருத்துவம் படிக்கும் மாணவிகள் போதைப் பொருட்களைச் சர்வ சாதாரணமாகப் பயன்படுத்துவதில் தொடங்கும் முரண், ஏழு அத்தியாயங்களிலும் எதிரொலிப்பது இன்னொரு சிக்கல். மன அழுத்தப் பிரச்சினையிலிருக்கும் அர்ஜுன் தாஸ், சிறு வயதில்பாலியல் சீண்டலுக்கு ஆளாகும் காளிதாஸ் ஜெயராம், பல்கலைக்கழக அரசியல், ஹாஸ்டலில் நடக்கும் அடிதடி , தோழியின் தன் பாலின ஈர்ப்பு என ஒவ்வொரு காட்சியுமே மேம்போக்காகவே இருக்கின்றன.

எந்தக் கல்லூரி ஹாஸ்டலில் அடிக்கடி ஆண் – பெண் மாறி ஓர் அறையில் இருக்க முடியும் என்பதை இயக்குநர்தான் விளக்க வேண்டும். படம் முழுவதும் தொடரும் தெளிவற்றக் காட்சிகள் சோதிக்கின்றன.

ஆராய்ச்சி மாணவர் பாத்திரத்துக்கு அர்ஜுன் தாஸ் பொருந்தினாலும், ஒரே மாதிரியான உடல்மொழியும் அவருடைய குரலும் மைனஸ். காளிதாஸ்ஜெயராம், கதாபாத்திரத்துக்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார். பல இடங்களில் அவருடைய காட்சிகள் ரசிக்கும்படியாகவும் இருக்கின்றன. படம் முழுவதும் வருமாறு சஞ்சனா நடராஜன், டி.ஜெ. பானு, நித்யஸ்ரீ ஆகியோரின் பாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அம்ருதா சீனிவாசன் கதாபாத்திரத்துக்கு இன்னும் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம்.

ஹரீஷ் வெங்கட், சச்சிதானந்த் சங்கரநாராயணன், கவுரவ் கோட்கிண்டியின் பின்னணி இசையில் குறையில்லை. ஜிம்ஷிகாலிட், பிரெஸ்லி ஆஸ்கர்டிசோசா ஆகியோரின் ஒளிப்பதிவு பக்கப்பலம்.பிரியங்க் பிரேம்குமாரின்எடிட்டிங்கில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.இது கருணையற்ற ‘போர்’.

Related posts