ஷாருக்கானின் ‘டன்கி’ முதல் நாளில் ரூ.30 கோடி

ஷாருக்கான் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டன்கி’ திரைப்படம் முதல் நாளில் ரூ.30 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது, இந்த ஆண்டு வெளியான ஷாருக்கானின் மற்ற படங்களைவிட குறைவான வசூல் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலிவுட்டின் முன்னணி இயக்குநரான ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள படம் ‘டன்கி’.
டாப்ஸி, விக்கி கவுஷல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை ஷாருக்கானும், ஹிரானியும் இணைந்து தயாரித்துள்ளனர்.
படத்துக்கு பிரிதம் இசையமைத்துள்ளார்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நேற்று (டிச.21) திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
இந்நிலையில், படம் முதல் நாளில் ரூ.30 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஷாருக்கான் நடிப்பில் ஜனவரி மாதம் வெளியான ‘பதான்’ முதல் நாளில் ரூ.57 கோடி வசூலித்தது.
அதேபோல அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘ஜவான்’ முதல் நாளில் ரூ.75 கோடியை வசூலித்து மிரட்டியது.
இந்த இரண்டு படங்களும் ரூ.1,000 கோடி வசூலை ஈட்டின.
அந்த வகையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஷாருக்கானின் ‘டன்கி’ குறைவான வசூலையே முதல் நாளில் ஈட்டியுள்ளது.
மேலும், அடுத்தடுத்த விடுமுறை நாட்களை முன்னிட்டு படத்தின் வசூல் கூடும் எனத் தெரிகிறது.

Related posts