இலங்கை மலையக முரளிதரன் திரை விமர்சனம்: 800

இலங்கை மலையகப் பகுதியைச் சேர்ந்த இந்தியத் தமிழர் குடும்பத்தில் பிறக்கிறார் முரளிதரன் (மதுர் மிட்டல்). அவரை கிறிஸ்தவ, உண்டு உறைவிடப் பள்ளியில் சேர்க்கிறார்கள் அவர் பெற்றோர். கிரிக்கெட் ஆர்வம் கொண்ட அவருக்கு அந்தப் பள்ளியில் விளையாட வாய்ப்பு வழங்கப்படுகிறது. பள்ளி போட்டிகளில் சிறந்த சுழற்பந்து வீச்சாளராக உருவெடுக்கிறார். பிறகு பல சோதனைகளையும் சவால்களையும் கடந்து சர்வதேச அரங்கில் 800 விக்கெட்களை வீழ்த்தி உலகின் சிறந்த பந்துவீச்சாளராக அவர் உருவெடுப்பதே மீதிக் கதை.

சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் முறியடிக்கப்படாத சாதனைகளைப் படைத்த முத்தையா முரளிதரனின் கதையை, ஈர்க்கும் வகையிலான படமாகத் தரும் முயற்சியில் பெருமளவு வெற்றிபெற்றிருக்கிறார் இயக்குநர் எம்.எஸ்.ஸ்ரீபதி. அவருடன் இணைந்து திரைக்கதை வசனம் எழுதியிருக்கும் சினேகன் கருணதிலகாவுக்கும் இந்தப் பாராட்டு செல்ல வேண்டும்.

முரளிதரன், சர்வதேச கிரிக்கெட்டில் நுழைவதற்கான போராட்டங்களை முதல் பாதியிலும் அங்கு எதிர்கொண்ட சோதனைகளையும் சாதனைகளையும் 2-ம் பாதியிலும் சொல்லியிருக்கிறார்கள். அவரின் கிரிக்கெட் சாதனைகளுக்கு இணையாக, தனிநபராக அவர் எதிர்கொண்ட சோதனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னணி தலைவர் ஒருவரை சந்திக்கும் காட்சி, முரளிதரன், இலங்கை இனக்கலவரத்தால் இரண்டு தரப்பிலும் பாதிக்கப்படும் அப்பாவி மக்கள் குறித்து வருத்தமும் தமிழ் மக்கள் அனைவரும் முன்னேற வேண்டும் என்று உண்மையான அக்கறையும் கொண்டிருந்ததை உணர்த்துகிறது.

இலங்கையில் தமிழர் உரிமை அரசியல் தொடர்பான வசனங்கள் கத்தி மீது நடக்கும் பயணத்தைப் போல் லாகவமாகக் கையாளப்பட்டிருக்கின்றன. இது போன்ற விஷயங்களுக்குக் கொடுக்கப் பட்ட முக்கியத்துவத்தால் கிரிக்கெட் தொடர்பான காட்சிகளில் இருக்க வேண்டிய சுவாரஸியம் குறைந்து விட்டதாகத் தோன்றுகிறது. கபில்தேவ், ஷேன் வார்ன் தொடர்பான காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.

இலங்கை அணியின் அன்றைய கேப்டன் அர்ஜுன ரணதுங்கா, முரளிதரனின் திறமையை ஊக்குவித்தது, சோதனைகளின்போது உடன் நின்று ஆதரித்தது ஆகியவை சிறப்பாகப் பதிவாகியுள்ளன. படத்தில் சில கிரிக்கெட் காட்சிகள் ரசிக்க வைத்தாலும் இதுபோன்ற பயோபிக் திரைப்படங்களில் எதிர்பார்க்கப்படும் சாகச உணர்வு கொஞ்சம் குறைவாகவே இருக்கிறது. அதே நேரம் 800-வது விக்கெட் எடுக்கும் பரபரப்பான தருணத்தை உச்சக் காட்சியாக வைத்தது அரங்கைவிட்டு மனநிறைவுடன் வெளியேற வைக்கிறது.

மதுர் மிட்டல் தோற்றம், உடல்மொழி, பந்துவீச்சு என முத்தையா முரளிதரனைக் கண்முன் நிறுத்துகிறார். தந்தை முத்தையாவாக வேல ராமமூர்த்தி, தாயாக ஜானகி சபேஷ், பாட்டியாக வடிவுக்கரசி, மனைவி மலர்மதியாக மஹிமா நம்பியார், மூத்த பத்திரிகையாளராக நாசர், அர்ஜுன ரணதுங்காவாக, கிங் ரத்னம் என துணை நடிகர்களும் நிறைவான பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள். ‘‘ஒருவனின் அடையாளத்தை அவனே தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியும் என்றால் உலகில் எந்த மனிதனுக்கும் பிரச்சினையே இருக்காது” என்பதுபோன்ற வசனங்கள் திரைக்கதைக்கு வலு சேர்க்கின்றன.

ஜிப்ரானின் பின்னணி இசை காட்சிகளுக்கு உயிரூட்டுகிறது. இலங்கையின் கண்டி, கொழும்பு, இனக்கலவரக் காட்சிகள், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகள், கிரிக்கெட் ஆடுகளத்தில் போட்டிகள் நடப்பது என பல வகையான களங்களையும் சூழல்களையும் நேரில் பார்ப்பதுபோல் கண் முன் நிறுத்துகிறது ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு.

முத்தையா முரளிதரனை ஒரு கிரிக்கெட் சாதனையாளராக மட்டுமல்லாமல் நேர்மையான மனிதராகவும் தமிழ் மக்கள் மீது அக்கறைகொண்ட இலங்கைத் தமிழராகவும் பார்வையாளர்கள் மனங்களில் பதிய வைத்திருக்கும் இந்தப் படத்தை குறைகள் மறந்து வரவேற்கலாம்.

Related posts