தெணியான் சிரார்த்த தின நிகழ்வு

கடந்த ஆண்டு மறைந்த ஈழத்தின் மூத்த எழுத்தாளர் தெணியான் (கந்தையா நடேசு) முதலாம் ஆண்டு சிரார்த்த தின நிகழ்வு, உருவச்சிலை திறப்பு நிகழ்வும், ´´ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் – தெணியான்´´ நூல் வெளியீடும் யாழ்ப்பாணம் வடமராட்சி பிரதேசத்தின் கரவெட்டி, கொற்றாவத்தையில் அமைந்துள்ள அவர் வாழ்ந்த வீட்டில் நேற்று (11) 10.30 மணிக்கு இடம் பெற்றது.

யாழ்ப்பாணம் மாநகரசபை ஆணையாளரும் கவிஞருமான இ. த. ஜெயசீலன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மங்கள விளக்கேற்றிய பின் தெணியானின் உருவச் சிலையினையும், கல்வெட்டினையும் மல்லாகம் நீதிமன்றத்தின் பதில் நீதவானும், சட்டத்தரணியுமான சோ. தேவராஜா திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து தெணியானின் மனைவி மரகதமும் சிலைக்கு மாலை அணிவித்தார்.

சோ. தேவராஜா உரையினை தொடர்ந்து நூல் வெளியீட்டுரையையும், கருத்துரையினையும் எழுத்தாளர் மு. அநாதரட்சகன் நிகழ்த்தினார். தொடர்ந்து தெணியான் பற்றிய நினைவுப் பகிர்வினை கலாநிதி ந. ரவீந்திரன் நிகழ்த்தினார். சிலையை வடிவமைத்த சிற்பிக்கு கெங்காதரன் இந்துசன் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கும் இதன் போது நிகழ்வு இடம்பெற்றது.

தெணியானின் குடும்பத்தவர்களுடன் இணைந்து நிகழ்வை ஏற்பாடு செய்த ஜீவநதி இதழின் பிரதம ஆசிரியர் கலாமணி பரணீதரன் நன்றியுரையுடன் நிகழ்வுகள் இனிதே நிறைவுற்றது.

இந்நிகழ்வில் கிராமத்தவர்கள், எழுத்தாளர்கள், ஆர்வலர்கள், வாசகர்கள், கல்வியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

சிறுபான்மை தமிழர் மகா சபையின் தலைவராகவும், ஈழத்து முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராகவும் சேவையாற்றியதோடு ஒடுக்கப்பட்ட மக்களுக்காக என்றுமே ஓங்கி ஒலித்த குரல் தெணியானின் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts