கேரளா படகு விபத்து: பலி 22 ஆக அதிகரிப்பு

கேரள மாநிலம் மலப்புரத்தில் 40 பேருடன் சென்ற சுற்றுலா படகு ஒன்று கவிழ்ந்ததில் பலியானோர் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 4 குழந்தைகள் அடங்குவர். 8 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
மலப்புரத்தின் தானூர் பகுதியில் நேற்று (ஞாயிறு) இந்த விபத்து ஏற்பட்டது. இந்நிலையில் உயிரிழப்பு அதிகரித்துள்ளது.
சுற்றுலா படகில் அதிகம் பேர் பயணம் செய்தது படகு கவிழ்ந்ததற்கான காரணமாக சொல்லப்படுகிறது. இரண்டு அடுக்கு கொண்ட அந்தப் படகின் கீழ் பகுதியில் இருந்தவர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், இந்திய கடலோர காவற்படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மூத்த அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்கு அளித்தப் பேட்டியில், இதுவரை சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், கடலோர காவற்படையினர் ஈடுபட்டுள்ளனர். படகில் எத்தனை பேர் இருந்தனர் என்பது உறுதியாகத் தெரியவில்லை. அதனால் தேடுதல் பணி தொடர்கிறது என்றார்.
இன்று கேரள முதல்வர் பினராயி விஜயன், எதிர்க்கட்சித் தலைவர் விடி சதீஷன் ஆகியோர் நிகழ்விடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்வார்கள் எனத் தெரிகிறது.
கேரள படகு விபத்திற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், பிரதமர் பொது நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

Related posts