புத்தாண்டில் அனைவருக்கும் சிறு ஆறுதல் தருகின்ற சூழல்

சூரியன் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைவதைத் தொடர்ந்து உதயமாகும் தமிழ், சிங்களப் புத்தாண்டு இந்நாட்டின் தமிழ், சிங்கள மக்களுக்கு மிகவும் சிறப்பும், மகிழ்வும் நிறைந்ததாகும்.

ஜனாதிபதி வௌியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியிலேயே இதனை தெரிவித்துள்ளார்.

சௌபாக்கியத்தையும் சுபீட்சத்தையும் வேண்டியே அனைவரும் சம்பிரதாயங்களை செய்கின்றனர்.

கடந்த வருடம் சித்திரைப் புத்தாண்டு உதயமான போது நாம் அனைவரும் மிகப்பெரிய நெருக்கடிக்குள் சிக்கியிருந்தோம். புத்தாண்டு கொண்டாட்டம் ஒருபுறமிருக்க, அன்றாட வாழ்க்கையைக் கொண்டு நடத்துவதே மிகப் பெரிய சவாலாக இருந்தது. ஆனால் இப்புத்தாண்டில் அனைவருக்கும் சிறு ஆறுதல் தருகின்ற சூழல் உருவாக்கியுள்ளது.

அடுத்த புத்தாண்டில், இதனை விடவும் சௌபாக்கியத்தையும் செழிப்பையும் ஏற்படுத்திக் கொள்ளவே நாம் முயற்சிக்க வேண்டும். நாம் அனைவரும் ஒருதாய் மக்களாக ஒரே பாதையில் பயணித்தால் அந்த இலக்கு சாத்தியமாகும்.

இன, மத, கட்சி, நிற பேதங்களை புறந்தள்ளிவிட்டு புதிய நோக்குடன் முன்னோக்கிப் பயணிக்க இந்த சித்திரைப் புத்தாண்டில் சங்கட்பம் கொண்டால் இந்த புத்தாண்டு மட்டுமன்றி, எதிர்காலத்தையும் நலம் மிக்கதாக அமைத்துக்கொள்ள முடியும்.

அனைவருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

——

பிரதமர் தினேஷ் குணவர்தன :

தேசத்தின் மாபெரும் கலாசார விழாவான சிங்கள- தமிழ் சித்திரைப் புத்தாண்டில் ஒரே சுப நேரத்தில் செயற்படும், உலகின் எந்த நாட்டிலும் இல்லாத தனித்துவமான பல்வேறு பழம்பெரும் பாரம்பரியங்களை நாம் மரபுரிமையாகப் பெற்றுள்ளோம் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாம் எப்போதும் வளமான புத்தாண்டுக்காக வாழ்த்துவோம். இம்முறை நாடு எதிர்கொண்ட உணவு மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளுக்கு மத்தியில், புத்தாண்டின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி, விளைச்சலினால் நாட்டை செழிப்படையச் செய்வதற்காக எமது விவசாய சமூகத்தினர் மேற்கொண்ட சவால்மிக்க பணிகளை இந்தப் புத்தாண்டில் நன்றியுடன் நினைவுகூர வேண்டும்.

இயற்கையோடு உறவாடிய எமது முன்னோர்கள் புத்தாண்டில் அதனை இன்னும் நிஜமாக்கினார்கள். அவர்களின் வாரிசுகளான எமக்கு உணவுப் பாதுகாப்பு, சிக்கனம், எமது பாரம்பரியம் மற்றும் ஒற்றுமை பற்றி மீண்டும் மீண்டும் கூற வேண்டிய தேவையில்லை. செயற்படுதலே எமக்கு முன் உள்ள தேவையாகும்.

கடந்த காலங்கள் எமக்கு சிந்திப்பதற்காக பல விடயங்களை விட்டுச் சென்றுள்ளன. தொற்றுநோய் அனர்த்தம், பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிகள் போன்றன அண்மைக்கால வரலாற்றில் நாம் காணாத விடயங்களாகும். அவற்றை மீண்டும் சந்திக்காதிருப்பதற்கும் அடுத்த தலைமுறைக்கு அவற்றை விட்டுச் செல்லாதிருப்பதற்கும் புதிய சிந்தனைகளால் வளம்பெற்ற இனியதோர் புத்தாண்டு இன்றிலிருந்து மலரட்டும்.

——

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ :

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு சூரியனின் பெயர்ச்சியுடன் ஆரம்பமாகும் சிங்கள மற்றும் இந்து புத்தாண்டு இந்நாட்டில் சிங்கள மற்றும் தமிழ் மக்களால் கொண்டாடப்படும் ஒரு சிறந்த கலாச்சார விழாவாகும்.

பல ஆண்டுகளாக, இலங்கை மக்கள் பல சவால்களுக்கு மத்தியில் புத்தாண்டைக் கொண்டாடினர் என்றாலும், ஒட்டுமொத்த மக்களின் ஒரே எதிர்பார்ப்பு நாடு மற்றும் மக்கள் செழிப்புடனும் ஆரோக்கியத்துடனும் வாழ்வதாகும்.

சிங்கள மற்றும் இந்து புத்தாண்டு சமூக உறவுகளை மேம்படுத்துவதற்கும் பழைய பழக்க வழக்கங்களைத் தொடரவும், ஒருவருக்கொருவர் பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்தவும் உதவுகிறது.

சமூகத்தில் நேர்மறை நற்பண்புகளையும் நெறிமுறைகளையும் புகுத்தும் மாபெரும் கலாசார விழாவாக விளங்கும் சிங்கள, இந்து புத்தாண்டு, மனித நல்லிணக்கத்திற்கான கதவுகளைத் திறக்கும் நல்லிணக்கப் பண்டிகையாகவும் அமைந்துள்ளது.

இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையே பிரிக்க முடியாத பிணைப்பு உள்ளது. இதன் விளைவாக மனிதன் இயற்கைக்கு நன்றி செலுத்தும் வாய்ப்புகளை காண்கிறான். சிங்கள இந்து புத்தாண்டு என்பது நன்றியின் உண்மையான வடிவம் என்றும் பொருள்படும்.

தன்னிறைவு பெற்ற பொருளாதாரத்தை கொண்டிருந்த நம் நாடு, தற்போது கண்ணீர் வடிக்கும் நாடாக மாறியதோடு, புத்தாண்டை குடும்பத்துடன் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் கொண்டாடும் வாய்ப்பு கூட பல ஆண்டுகளாக இல்லாமல் போய்விட்டது. எமது நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை நிலைமைகளுக்கு அசாதாரணமான சவால்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த இருள் சூழ்ந்த காலம் முடிந்து, நமது நாட்டின் ஒட்டுமொத்த குடிமக்களும் வார்த்தையின் உண்மையான அர்த்தத்தில் வளமான மற்றும் ஒளிமயமான எதிர்காலத்திற்காக உறுதியுடன் அணிதிரள்வதற்கான வலிமையைப் பெற பிரார்த்திக்கிறேன் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

—–

ஜீவன் தொண்டமான் :

மலர்ந்துள்ள தமிழ், சிங்கள புத்தாண்டானது, அனைத்து மக்களுக்கும் மறுமலர்ச்சியையும், மற்றற்ற மகிழ்ச்சியையும், மன நிறைவையும், மகத்தான பல சுப விடயங்கள் ஈடேறும் ஆண்டாக அமைய, எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“கொவிட் – 19 பெருந்தொற்று, அதன்பின்னரான பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் தமிழ், சிங்கள புத்தாண்டை வழமைபோல் வண்ணமயமாக கொண்டாட முடியாத நிலை இலங்கைவாழ் மக்களுக்கு ஏற்பட்டது. தற்போது நிலைமை மாறிவருகின்றது. பொருளாதார நெருக்கடி தீர்ந்துவருகின்றது. கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் புத்தாண்டை மகிழ்வுடன் கொண்டாடக்கூடிய – வரவேற்ககூடிய சூழ்நிலை உதயமாகியுள்ளது. எனவே, முன்னோக்கி செல்ல முடியும் – எல்லோர் வாழ்விலும் இன்பம் பொங்கும் என்ற நம்பிக்கையுடன் புத்தாண்டில் காலடி வைப்போம்.

ஐக்கியமே ஆக்கம். தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் மக்கள் மத்தியில் ஒற்றுமையைக் காண முடியும். குடும்ப நிகழ்வாக இருந்தால் என்ன, விளையாட்டு போட்டிகளாக இருந்தால் என்ன அனைத்து மக்களும் கூடி மகிழ்வார்கள். ஒருவருக்கொருவர் உதவிகளை செய்வார்கள். புத்தாண்டு காலப்பகுதியில் மட்டும் அல்லாமல் இலங்கை தாய் மக்களாக நாம் அனைவரும் தொடர்ந்து ஒற்றுமையாக வாழ வேண்டும்.

அதேபோல ‘ஒற்றுமை’யின் முக்கியத்துவத்தை கருதி, நாட்டை மீட்டெடுக்க அனைத்துக்கட்சிகளும் இனியாவது ஒன்றுபட வேண்டும். அதற்கான அழைப்பை இந்த நன்நாளில் மீண்டுமொருமுறை விடுக்கின்றேன். அவ்வாறு அனைவரும் இணைந்து செயற்பட்டால், அடுத்த வருடம் எல்லா வழிகளிலும் முன்னேறிய நாடாக நாம் புத்தாண்டை கொண்டாடக்கூடிய சூழ்நிலை நிலவும்.

அதேவேளை, புத்தாண்டு காலத்தில் மக்கள் சுற்றுலா செல்வார்கள், இசை நிகழ்ச்சி உள்ளிட்ட களியாட்டங்களில் ஈடுபடுவார்கள். பட்டாசுகளை கொளுத்தி வாணவேடிக்கை நிகழ்த்துவார்கள். எனவே, எந்த விடயத்தை செய்தாலும் அவதானத்துடனும், அடுத்தவர்களுக்கு தீங்கு ஏற்படாத வகையிலும் செய்யுமாறும் – செயற்படுமாறும் கேட்டுக்கொண்டு, உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன். உங்கள் எண்ணங்கள் ஈடேற இறைவனை பிரார்த்திக்கின்றேன். என்றும் நாங்கள் உங்களுடன்.” – என்றுள்ளது.

Related posts