சமந்தா கரியரில் ஒரு சீரியல்

சாபத்தால் பிரிந்த காதல் எப்படி விமோசனம் பெற்றது என்பதை மெகா சீரியலுக்கு இணையான தரத்துடன் சொல்லிருக்கும் காவியம் தான் ‘சாகுந்தலம்’.
ரிஷி ஆஸ்ரமம் இருக்கும் காட்டு பகுதியில் ஆதரவற்ற குழந்தை ஒன்று அழுதுகொண்டிருக்கிறது. அந்த குழந்தையை கண்டெடுக்கும் கண்வ மகரிஷி குழந்தைக்கு சாகுந்தலா ( சமந்தா) என பெயரிட்டு தனது சொந்த மகளைப் போல் வளர்க்கிறார்.

சாகுந்தலா வளர்ந்து பெரியவளாகிறாள். அப்போது ஒருநாள், ஹஸ்தினாபுரத்தின் அரசன் துஷ்யந்தன் (தேவ் மோகன்) கண்வ மகரிஷியின் ஆசிரமத்திற்கு வருகிறான். சாகுந்தலாவைப் பார்த்ததுமே அவள் மேல் காதல் வயப்படுகிறான். சாகுந்தலாவும் துஷ்யந்தனை காதலிக்கிறாள். இருவரும் யாருக்கும் தெரியாமல் மணமுடித்துக்கொள்ள, விரைவில் வந்து அழைத்துச் செல்கிறேன் என கூறி துஷ்யந்தன் ஹஸ்தினாபுரம் திரும்புகிறான்.

வாக்களித்தபடி துஷ்யந்தன் வந்தாரா? இல்லையா? சாகுந்தலாவின் காதல் என்னவானது? அடுத்தடுத்து என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

காளிதாசரால் எழுதப்பட்ட ‘சாகுந்தலம்’ என்ற காதல் கதையை படமாக்கியிருக்கிறார் தெலுங்கு இயக்குநர் குணசேகர். படத்தின் தொடக்கத்தில் காட்டு விலங்குகள் ஊருக்குள் புகுந்து மக்களை தாக்குகிறது. அந்த விலங்குகளை நாயகன் தாக்குகிறார். அடுத்து எதிரி கூட்டம் தாக்க வருகிறது. அதையும் நாயகன் எதிர்த்து தாக்குகிறார். சமந்தாவை திரையில் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த ரசிகர்கள் மீது இத்தனை தாக்குதல்களா?! படத்தின் முதல் அரை மணி நேரம் காட்டு விலங்குகளின் கிராஃபிக்ஸ் காட்சிகள் மூலம் நேஷனல் ஜாக்ரஃபிக் சேனலை பெரிய திரையில் பார்க்கும் அனுபவத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

இதைக்கடந்து சென்றால் அங்கிருக்கும் விலங்குகளிடம் ஃப்ரண்ட்ஷிப் வைத்துக்கொள்ளும் அதிதி பாலன், அவர்களையே கூகுள் மேப்பாக்கி ‘சாகுந்தலாவை நீ பார்த்தாயா?’ என அட்ரஸ் கேட்கிறார். இது என்னடா அதிதி பாலனுக்கு வந்த சோதனை என காத்திருந்தால் அழகான இன்ட்ரோவுடன் 3டி காட்சிகளில் அறிமுகமாகிறார் சமந்தா.

‘காதல் காவியம்’ என தொடக்கத்திலேயே அடைமொழியிடப்பட்ட படத்தில் சமந்தாவுக்கும் நாயகன் தேவ் மோகனுக்கும் இடையிலான காட்சியில் துளியும் சுவாரஸ்யமில்லை. கண்டதும் காதல். அடுத்து காதல் கடிதம், உடனே பாடல் என இன்ஸ்டா ரீல்ஸைவிட குறைவான நேரத்தில் காதல் மலர்ந்து திருமணம் அரங்கேறிவிடுகிறது. இயக்குநர் 3 பாடல்களின் வழியே மொத்த படத்தையும் கடத்திவிடலாம் என நினைத்திருப்பது அவரின் நம்பிக்கையை காட்டுகிறது. முதல் பாடலில் காதல் மலர, இரண்டாம் பாடலில் சமந்தா கர்ப்பம் தரிக்க, மூன்றாம் பாடலில் பிரிவு நேர்கிறது. இறுதிப்பாடலில் பிரிந்த உள்ளங்களின் இணைவு. இறுதியில் சுபம்!

ஈர்ப்பில்லாத வசனங்களும், தமிழ் டப்பிங்கில் மோலோங்கிய சமஸ்கிருத வார்த்தைகளும் புராண கதைகளை புரியாமல் பார்ப்பது போன்ற உணர்வை தருகிறது. சம்பந்தமேயில்லாமல் திடீரென காட்டப்படும் தேவலோகம், நீண்டு சோதிக்கும் புராண பின்கதைகள் பலவீனம். தப்பித் தவறியும் பார்வையாளர்களுக்கு படம் பார்க்கும் உணர்வு வந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்த மணிசர்மா வீணையை மீட்டும் இடங்களில் மெகா சீரியல் அனுபவம் பேரானந்தம். சமந்தாவின் அழுகையும், பின்னணியில் வீணையின் நரம்பில் எழும் ஓசையும் காட்சியை கச்சிதமாக சீரியல் தன்மைக்கு மாற்றிவிடுகிறது. இறுதிக்காட்சியில் வீடியோகேம் வடிவிலான சண்டைக்காட்சிகள் திணிப்பு.

படத்தின் ஆறுதலா சமந்தா. அழகு நிறைந்த அப்பாவி பெண் கதாபாத்திரத்தை நேர்த்தியாக கையாண்டிருக்கிறார். இரண்டாம் பாதியில் அரசவையில் அவர் பேசும் வசனங்கள் ஓகே என்றாலும், அவருக்கான கதாபாத்திரத்தில் பெரிய அளவில் எங்கும் அழுத்தமில்லாதது ஏமாற்றம். சொல்லப்போனால் ஊரார் அவரை திட்டி வெளியேற்றும் சீரியஸ் காட்சிகளிலும் சீரியல் டோன் வெளிப்படுவது பெரும் சிக்கல். தேவ் மோகன் தேவையானதை வழங்குகிறார்.

அதிதி பாலனை வெறும் புராணக்கதையை சொல்வதற்கும், முனிவருக்கு பில்டப் ஏற்றுவதற்கும் மட்டுமே பயன்படுத்திருப்பது அவரது ரசிகர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி! கவுதமி கதாபாத்திரத்துக்கான தேவையை கூகுளில் தேடியும் புரிந்துகொள்ள முடியவில்லை. ஹரீஷ் உத்தமன், மோகன் பாபு மற்றும் அல்லு அர்ஜூனின் மகள் அல்லு அர்ஹா ஆகியோர் குறைசொல்ல முடியாத நடிப்பை வெளிப்படுத்தியிருந்தனர். சேகர் ஜோசப் ஒளிப்பதிவு 3டி தொழில்நுட்பத்துக்கு பலம் சேர்க்கிறது. மொத்தத்தில் சமந்தா கரியரில் சீரியலாக வந்திருக்கும் ‘சாகுந்தலம்’ படத்தை திரையரங்குகளில் பார்த்தவர்களுக்கும், ஓடிடியில் ஓட்டி ஓட்டி பார்க்கலாம் என நினைப்பவர்களுக்கும் வாழ்த்துகள்!

Related posts