இலங்கைக்கு ஈச்சம்பழங்கள் அன்பளிப்பு

சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் மனிதாபிமான உதவிகள் மற்றும் நிவாரணங்களுக்கான மையம் ஐம்பது தொன் பேரீச்சம் பழங்களை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

இப்பேரீச்சம் பழத்தொகுதியை இலங்கைக்கு உத்தியோகபூர்வமாகக் கையளிக்கும் வைபவம் சவூதி அரேபியாவின் இலங்கைக்கான தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானி தலைமையில் கொழும்பிலுள்ள சவூதி அரேபியத் தூதரக வளாகத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்றது.

இவ்வைபவத்தின் போது இலங்கைக்கான 50 தொன் பேரீச்சம் பழங்களை தூதுவர் கஹ்தானி புத்த சாசனம் மற்றும் சமய, கலாசார

விவகார அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவிடம் கையளித்தார். இவ்வைபவத்தில் கிராமிய பொருளாதார விவகார அமைச்சர் காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌஸி, முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எஸ்.ஏ.எம் பைஸல், வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் ஒ.எல். அமீர் அஜ்வார்ட் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இவ்வைபவத்தில் உரையாற்றிய சவூதி அரேபியாவுக்கான இலங்கைக்கான தூதுவர் அல் கஹ்தானி, மன்னர் சல்மான் நிவாரணங்களுக்கான மையம் உலகெங்கிலும் மேற்கொண்டுவரும் பெரும் மனிதாபிமான முயற்சிகளை பாராட்டியதோடு, இரு புனித ஸ்தலங்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத், பட்டத்து இளவரசர், பிரதமர் முஹம்மத் பின் சல்மான் போன்றோர் தலைமையில் சவூதி அரேபிய அரசாங்கம் பல்வேறு சூழல்நிலைகளிலும் இன்னல்களை எதிர்கொள்ளும் சகோதர மற்றும் நட்பு நாடுகளுக்கும் அந்நாடுகளது மக்களுக்கும் உதவுவதில் காட்டும் ஆர்வத்தை எடுத்துக்காட்டுகின்றது.

இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையில் நீண்ட கால வலுவான நட்புறவு நிலவி வருவதாகக் குறிப்பிட்டார். இவ்வைபவத்தில் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க உரையாற்றுகையில், இலங்கை மக்களுக்காக வழங்கிய அனைத்து உதவிகளுக்காகவும் சவூதி அரசுக்கும் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸுக்கும் பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் சல்மானுக்கும் தமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாகக் குறிப்பிட்டதோடு உலகின் அனைத்து பகுதிகளிலும் சவூதி நன்கொடைகளை தாராளமாக வழங்கி வருவதென்பது ஆச்சரியப்படத்தக்க விடயமல்ல’ என்று கூறினார்.

Related posts