வெறிச்சோடி, முடங்கிய மலையகம்

40 க்கு மேற்பட்ட தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து ஆரம்பித்துள்ள ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் காரணமாக மலையக பகுதியில் உள்ள பல தொழில் மற்றும் பொது நிறுவனங்கள் முடங்கி போயுள்ளன.

பொருட்களின் விலை அதிகரிப்பு மின்சார கட்டண உயர்வு, வங்கி கடன் வட்டி அதிகரிப்பு, சம்பளத்திக்கான வரி விதிப்பு, ஆசிரியர் அதிபர்களின் சம்பள உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பல தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து ஆரம்பித்துள்ள தொழிற்சங்க வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக பொது மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

கல்விதுறைச்சார்ந்த தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து சுபோதனி ஆணைக்குழுவின் எஞ்சிய சம்பளத்தினை வழங்க கோரியும், அல்லது அது வரை வாழ்க்கைச் செலவுக்கேற்ப இருபதாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்க கோரியும் ஆரம்பிக்கப்பட்ட ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் காரணமாக மலையகத்தில் உள்ள பாடசாலைகள் முற்றாக ஸ்தம்பிதம் அடைந்தன.

பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள், அதிபர்கள், மாணவர்கள் எவரும் சமுகம் தரவில்லை இதனால் பாடசாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

மத்திய மாகாணத்தினால் நடத்தப்பட்டு வந்த ஆண்டிறுதிப் பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளன.

இதேநேரம் மின்சார துறை, தபால், வங்கி உள்ளிட்ட துறைகள் இந்த தொழிற்சங்க போராட்டத்தில் இணைந்துள்ளதனால் பல தபால் அலுவலகங்கள், மின்சார பொது அலுவல்கள் அலுவலகங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன.

குறித்த சேவைகளை பெற்றுக்கொள்ள முடியாததால் பொது மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்தனர்.

தேவேளை, புகையிரத சேவைகளும் நேற்று இரவு முதல் இடை நிறுத்தப்பட்டுள்ளன இதனால் புகையிரத பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

பொது போக்குவரத்து வேலை நிறுத்தம் நடைபெறுவதாக தெரிவித்திருந்த போதிலும் மலையக பகுதியில் பொது போக்குவரத்து வழமை போல் இடம்பெற்றதனை காணக்கூடியதாக இருந்தன.

எது எவ்வாறான போதிலும் நாடு முகம் கொடுத்துள்ள நிலையினை கருத்தில் கொண்டு தொழிற்சங்கங்கள் செயற்பட வேண்டும் என அரசியல் பிரமுகர்கள் கேட்டுக்கொண்ட போதிலும் அதிகமான துறைகள் போராட்டம் காரணமாக செயலிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts