வசந்த முதலிகேவுக்கு யாழ்.பல்கலை மாணவர்கள் தகுந்த பதிலடி!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை எதிர்க்க யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களும் இணைய வேண்டுமெனத் தெரிவித்த வசந்த முதலிகேவுக்கு, தக்க பதிலடி வழங்கிய யாழ். மாணவர்களை பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் பாராட்டியுள்ளார்.

( இந்த செய்தியை சிறிலங்கா அரச ஊடகம் முக்கியப்படுத்தியிருப்பது ஏன்.. மனோ புரிய வேண்டும்.)

தமிழர்களின் சுமார் 44 வருடப் போராட்டத்தை கண்டுகொள்ளாது உறக்கத்திலிருந்த வசந்த முதலிகேவுக்கு, யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் பதிலடி உறைக்க வைத்திருப்பதுடன், யதார்த்தத்தையும் உணர்த்தியிருக்கும் என்றும் மனோகணேசன் எம்.பி தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தெரிவித்துள்ளதாவது,

“பயங்கரவாத தடை சட்டத்தை எதிர்க்க யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் இணைய வேண்டுமென, அனைத்து பல்கலைக்கழக ஒன்றிய அழைப்பாளர் வசந்த முதலிகே முதலானோர் கோரியமை நகைப்புக்கு இடமானது.

இத்தகையை கோரிக்கைகளுடன் இணைகிறோம், ஆனால், எமது பிரச்சினைகளையும் உள்வாங்குங்களென யாழ். பல்கலை மாணவர் ஒன்றியம் பதில் அளித்துள்ளமையும் பாராட்டுக்குரியது.

பயங்கரவாத தடை சட்டம் தமிழருக்கு எதிராக 1979 இல் உருவாகிய சட்டமாகும். ஏறக்குறைய 44 வருடங்களாக எத்தனையோ பேர் மாண்டு போய்விட்டனர். இன்னும் எத்தனையோ பேர் சிறையில் வாழ்வை இழந்தனர். இன்னும் இழந்தப்படி இருக்கிறோம். எத்தனையோ குடும்பங்கள் அனாதரவாக வாடுகின்றன.

தமிழர்கள் 40வருடங்களுக்கு மேல் தேசிய, சர்வதேசிய ரீதியாக இந்த இச்சட்டத்தை எதிர்த்து போராடியதால், ஐநா மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் கவனத்துக்கும் வந்துள்ளது.

இப்போது, கடந்த சில மாதங்களில், வசந்த முதலிகே, சிறி தம்ம தேரர் போன்றோரை இச்சட்டம் பதம் பார்க்கிறது.இதனால்,திடீரென தூக்கத்திலிருந்து எழுந்து, வாகனம் பிடித்து, யாழ்ப்பாணத்துக்குச் சென்று, “பயங்கரவாத தடை சட்டத்தை எதிர்த்து போராட கை கோர்க்குமாறு கோருவது, 2023இன் மிக சிறந்த நகைச்சுவையாக தோன்றுகிறது.

வடக்கு கிழக்கு தமிழ், முஸ்லிம் மக்கள், மலையக தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் துன்பங்களையும் புரிந்துகொண்டு அவற்றையும் பொதுப் போராட்டத்தில் இணைத்துக்கொள்ள சிங்கள அரசியல் கட்சிகள், சிங்கள மாணவர், இளைஞர் அமைப்புகள் தயாராகாதவரை இந்நாடு விடிவு பெறாதென்றும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

Related posts