‘திராவிட மாடல்’, ‘தமிழ்நாடு’ போன்ற வார்த்தைகள் தவிர்ப்பு

திராவிட மாடல், தமிழ்நாடு என்ற வார்த்தைகளை ஆளுநர் தவிர்த்து விட்டதாக திமுக கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சட்டப்பேரவையில் வழக்கமாக ஆண்டு முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கும். அந்த வகையில், இந்தாண்டுக்கான முதல் கூட்டம் இன்று (ஜன.9) காலை 10 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது.

சட்டப்பேரவை முதல் கூட்டத்துக்காக, ஆளுநர் மாளிகையில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, தலைமை செயலகத்துக்கு 9.50 மணிக்கு வந்தார். ஆளுநரை, பேரவைத் தலைவர் மு.அப்பாவு, செயலர் கி.சீனிவாசன் ஆகியோர் வரவேற்றனர். அதன்பின், காலை 10 மணிக்கு கூட்ட அரங்கில் ஆளுநர் தனது உரையை வாசிக்க தொடங்கினார்.

உரையைத் தொடங்கியவுடன் “தமிழக சகோதர – சகோதரிகளுக்கு வணக்கம்” என்று ஆளுநர் தமிழில் தெரிவித்தார். மேலும் முதல்வர், சட்டமன்ற உறுப்பினர்கள் என்று அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள் என்று தமிழில் கூறி தனது உரையை தொடங்கினார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. இந்நிலையில் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

இதன்படி காங்கிரஸ், மதிமுக, விசிக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

இந்நிலையில் ‘திராவிட மாடல்’, ‘தமிழ்நாடு’ போன்ற வார்த்தைகளை ஆளுநர் தவிர்த்து விட்டதாக திமுக கூட்டணி கட்சிகள் குற்றஞ் சாட்டியுள்ளனர். இது குறித்து காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில்,”ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளுநர் உரையை படித்துக் கொண்டு உள்ளார்.

தமிழகத்தின் மாண்பு, தமிழகத்தின் மரபு எல்லாம் தமிழக அரசு எழுதிக் கொடுக்கின்ற உரையை படிக்க வேண்டும். ஆனால் ஆளுநர் விட்டுவிட்டு படிக்கிறார்.

தமிழ்நாடு என்று வரும் போது தமிழ்நாடு என்று சொல்லவில்லை. திராவிட மாடல் என்று வரும் போது திராவிட மாடல் என்று சொல்லவில்லை. இவ்வாறு விட்டு விட்டு படிக்கிறார். இது தான் ஆளுநரின் போக்கு.

ஆளுநரின் சர்வாதிகாரம்.

ஆளுநரின் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம். ஆளுநர் மரபை மீறி, அரசியல் அமைப்பு சட்டத்தை மீறி, ஜனநாயகப் படுகொலையை வரலாற்று சிறப்பு மிக்க சட்டப்பேரவையில் செய்து கொண்டுள்ளார்.” என்று கூறினார்.

Related posts