தமிழ் சினிமாவை மறக்க முடியாது! – நீது சந்திரா

தமிழில், ‘யாவரும் நலம்’, ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’, ‘ஆதிபகவன்’, ‘வைகை எக்ஸ்பிரஸ்’ உட்படபல படங்களில் நடித்தவர், இந்தி நடிகை நீது சந்திரா.மிஷ்கினின் ‘யுத்தம் செய்’ படத்தில் இவர் ஆடிய ‘கன்னித் தீவு பெண்ணா’, குத்துப்பாடல்களின் ‘பிளேலிஸ்ட்’டில், ஒன்ஸ்மோர் பாடல். இப்போது , ஹாலிவுட்டுக்கும் சென்றிருக்கிற நீது சந்திராவிடம் பேசினோம்.

ஹாலிவுட் வாய்ப்பு கிடைச்சது எப்படி? – ஹாலிவுட்ல நடிக்கணுங்கறது என் கனவு. அது நனவாகி இருக்கு. அடுத்தக் கட்டத்துக்கு நம்மை நகர்த்தி, நமக்கான வாய்ப்புகளே நாமே உருவாக்கிக்கணும்னு நினைப்பேன். அப்படி வாய்ப்புகளைத் தேடும்போது, வில் ஸ்மித் நடிச்ச ‘பேட்பாய்ஸ்’ பட திரையிடல் அமெரிக்காவுல சோனி பிக்சர்ஸ் ஸ்டூடியோவில் நடந்தது. அதுல கலந்துக்க அழைப்பு வந்துச்சு.

அங்கதான், ‘நெவர் பேக் டவுன்’ தயாரிப்பாளர், டேவின் ஜெலோனைச் சந்திச்சேன். அவர், என் தற்காப்புத் திறமைகளைப் பார்த்தார். ஆக்‌ஷன் படம்ங்கறதால ‘நெவர் பேக் டவுன் : ரிவோல்ட்’ படத்துல வாய்ப்புக் கொடுத்தார்.

அடுத்தும் ஹாலிவுட் படங்கள்ல நடிக்கிறீங்களாமே? – இன்னும் 2 படங்கள்ல ஒப்பந்தமாகி இருக்கேன். நெவர் பேக் டவுன் படத்துல என் நடிப்பைப் பார்த்துட்டு, இந்த வாய்ப்புகள் கிடைச்சிருக்கு. அந்தப் படங்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வரும். அதுக்காக, என் முதல் ஹாலிவுட் பட இயக்குநர் கெல்லி மேடிசனுக்கு நன்றி.

தமிழ்ல பார்க்க முடியலையே? – தமிழ்ல நடிக்கிறது எனக்கு ரொம்ப பிடிக்கும். தமிழ் சினிமா எனக்கு நிறைய கொடுத்திருக்கு. திறந்த மனதோடு என்னை வரவேற்று அரவணைச்சது தமிழ் சினிமாதான். எனக்கு ஏராளமான தமிழ் ரசிகர்கள் இருக்காங்க. ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, மாதவன்னு தமிழ் சினிமாவுல இருந்து பல சூப்பர் ஸ்டார் நடிகர்கள் வந்திருக்காங்க. அந்த மொழியில நடிக்கிறதுக்கு ரொம்ப ஆர்வமா இருக்கேன். அதுக்காக நல்ல கதைகளை எதிர்பார்க்கிறேன்.

2 படங்கள் தயாரிச்சீங்களே… – ‘தேஸ்வா’ன்னு போஜ்புரி படத்தையும் தேசிய விருது கிடைச்ச, ‘மிதிலா மக்கான்’ங்கற மைதிலி மொழிப் படத்தையும் தயாரிச்சேன். இந்த மொழிகள் என்னோட வேர். பிஹார்ல பேசப்படற மொழிகள். மைதிலி மொழியில படங்கள் தயாரிக்க யாருமே இல்லை. அதனால, தயாரிக்க வேண்டிய தேவை இருந்தது. கமர்சியலுக்காக தயாரிக்கலை. என் மாநில கலச்சாரத்தை, பண்பாட்டை தெரியப்படுத்தணுங்கறதுக்காக தயாரிச்சேன். இப்போதைக்கு படம் தயாரிக்கும் எண்ணமில்லை.

ஓடிடி தளங்களின் வளர்ச்சியை எப்படி பார்க்கிறீங்க? – கரோனாவுக்கு பிறகு மக்கள் ஓடிடி தளங்கள்ல படங்களைப் பார்க்கிறாங்க. அதோட வளர்ச்சியால, நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்களுக்கும் அதிக வாய்ப்பு கிடைக்குது. அது நல்ல விஷயம்தானே.

Related posts