சட்டப்படி நடவடிக்கை: மந்திரி எச்சரிக்கை!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் தற்போது இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் நடித்துள்ள படம் ‘ஆதிபுருஷ்’.

ராமாயணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடித்துள்ளார்.இந்த படத்தின் போஸ்டர் மற்றும் டீசர்-டிரெய்லரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.

இது குறித்து மத்திய பிரதேச உள்துறை மந்திரி நரோட்டம் மிஸ்ரா கூறியிருப்பதாவது, “ஆதிபுருஷ் படத்தின் டிரெய்லரை நான் பார்த்தேன்.அதில் ஆட்சேபகரமான காட்சிகள் உள்ளன.

டிரெய்லரில் அனுமன் தோலால் செய்யப்பட்ட ஆடைகளை அணிந்திருக்கிறார். டிரெய்லரில் காணப்பட்ட இந்து தெய்வங்களின் உடைகள் மற்றும் தோற்றம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.

மத உணர்வுகளை புண்படுத்தும் காட்சிகள் இவை. இதுபோன்ற காட்சிகளை படத்தில் இருந்து நீக்குமாறு ஓம் ரவுத்துக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
இந்து மத அடையாளங்களை தவறான முறையில் காட்டும் காட்சிகள் நீக்கப்படவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக லீலா மணிமேகலை இயக்கிய காளி பட போஸ்டர் குறித்து, உடனடியாக வழக்குப்பதிவு செய்யுமாறு மந்திரி நரோட்டம் மிஸ்ரா போலீசிடம் அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது. இப்போது அதே போன்றதொரு சிக்கல் ஆதிபுருஷ் படத்திற்கும் வந்துள்ளது.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:- “எங்கள் மத நூல்களில், அனுமனின் உடை குறித்து தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. எங்களுடைய மத நூல்களில் எழுதப்பட்டவை சரியானது என்று நாங்கள் நம்புகிறோம். ஆனால் டீசரில் அதற்குப் பதிலாக அவர் தோல் ஆடை அணிந்திருப்பதாக காட்டப்பட்டுள்ளது. அவரது தோல் சிவப்புக்கு பதிலாக கருமையாகக் காட்டப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் அவர்கள் மாற்றம் செய்துள்ளனர். சீதையின் கதாபாத்திரம் மற்றும் அவர் உடை அணியும் விதம் கூட சிதைக்கப்பட்டுள்ளது. திரைப்படங்களை பொறுத்தவரை மற்ற மதங்கள் என்று வரும்போது, படைப்பாளிகள் படைப்பு சுதந்திரத்தை எடுத்துக்கொள்வதைத் தவிர்க்கிறார்கள்.

பாபா மகாகலில் சொமேட்டோ விளம்பரம், சன்னி லியோனின் ராதா பாடல், சப்யசாச்சியின் மங்களசூத்ரா விளம்பரம், காளி படத்தின் போஸ்டர், ஓ மை காட் திரைப்படம், ஆஷ்ரம் வெப் சீரிஸ் என ஏன் ஒரு மதம் மட்டும் குறிவைக்கப்படுகிறது? ஏன் நாங்கள் (இந்துக்கள்) மட்டும் குறியாக உள்ளோம்? பெரும்பான்மை சமூகத்தின் உணர்வுகளை மீண்டும் மீண்டும் அவமதிக்கும் இந்த முறை தவறானது.

இந்த படைப்பு சுதந்திரத்தை மற்ற மதங்கள் மீதும் எடுத்துக் கொள்ளுமாறு அவர்களை கேட்டுக்கொள்கிறேன். ‘ஆதிபுருஷ்’ படத்தின் இயக்குனர் ஓம் ராவத்துக்கு படத்தில் இருந்து ஆட்சேபனைக்குரிய காட்சிகளை நீக்குமாறு கடிதம் அனுப்பியுள்ளேன்” என்று கூறியுள்ளார்.

Related posts