பொன்னியின் செல்வன் கதை-கதாபாத்திரங்கள்

இன்றளவும் கொண்டாடப்படும் பொன்னியின் செல்வன் சரித்திர நாவலை படமாக்க வேண்டும் என்ற தமிழக ரசிகர்களின் நீண்ட நாள் கனவை மணிரத்னம் பெரிய நட்சத்திர பட்டாளம், காடு மலைகளில் படப்பிடிப்பு, அதிக பொருட் செலவு போன்ற பல சவால்களுக்கு மத்தியில் நிறைவேற்றி முடித்து இருக்கிறார்.

பொன்னியின் செல்வன் கதையானது திருப்பங்கள், சதி, துரோகங்கள், சாகசங்கள் என்று பல விறுவிறுப்பு சம்பவங்கள் நிறைந்தது. அதை படித்தவர்கள் கதை நடந்த காலத்துக்கே சென்றது போன்ற உணர்வை பெற்றனர்.

பொன்னியின் செல்வன் படமும் அந்த உணர்வை ஏற்படுத்துமா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது. பொன்னியின் செல்வன் மொத்த கதைக்கும் மையப்புள்ளியாக இருப்பது படுத்த படுக்கையாக இருக்கும் சுந்தரசோழ மகாராஜாவும் அவரது சிம்மாசனமும்தான். இந்த கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் வருகிறார். இவர் தஞ்சையில் இருந்து நாட்டை ஆண்டு கொண்டு இருக்கிறார்.

சுந்தர சோழருக்கு ஆதித்த கரிகாலன், அருள் மொழி வர்மன் என்ற மகன்களும், குந்தவை என்ற மகளும் உள்ளனர். ஆதித்த கரிகாலன் காஞ்சிபுரத்தில் இருக்கிறார். அருள்மொழி வர்மன் இலங்கைக்கு போர் தொடுத்து சென்று இருக்கிறார். இவர்கள் கதாபாத்திரத்தில் முறையே விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா நடித்துள்ளனர். இன்னொரு அழுத்தமான கதாபாத்திரம் பெரிய பழுவேட்டரையராக வரும் சரத்குமார்.

சோழநாட்டில் வரிவிதிக்கும் அதிகாரத்தை பெற்றுள்ள இவர் வயதான நிலையில் இளம்பெண் நந்தினியை திருமணம் செய்து தஞ்சைக்கு அழைத்து வருவதுடன் சுந்தரசோழரின் அண்ணன் மகன் மதுராந்தக சோழருக்கு முடிசூட்ட சதி செய்கிறார்.

நந்தினியாக வரும் ஐஸ்வர்யாராய் கதாபாத்திரமும் வில்லத்தனமானது. தனது காதலர் வீரபாண்டியன் தலையை விக்ரம் கொய்ததால் பெரிய பழுவேட்டரையரை பயன்படுத்தி ஒட்டுமொத்த சோழ பேரரசையும் அழிக்க துடிக்கிறார். இதற்காகவே பழுவேட்டரையரை மணக்கிறார்.

விக்ரமும் இளம் வயதில் ஐஸ்வர்யாராயை காதலித்தவர். தஞ்சை கோட்டையை பாதுகாக்கும் சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன் வருகிறார். இவர் அனுமதி இல்லாமல் கோட்டைக்குள் யாரும் நுழைய முடியாது.

பெரும்போர்களை நடத்தி வென்று வீரபாண்டியனை வெட்டி கொன்ற ஆதித்த கரிகாலனுக்கு எதிராக சூழும் பகையால் அவர் கொல்லப்படுவதோடு முதல் பாகம் முடியும் என்று தெரிகிறது. சோழ அரசுக்கு எதிராக சதி செய்யும் ஐஸ்வர்யாராய்க்கும், சுந்தர சோழருக்கும் உள்ள உறவு கதையின் திருப்பமாக வரும். பொன்னியின் செல்வன் கதையின் கதாநாயகனே வந்தியத்தேவன்தான்.

இந்த கதாபாத்திரத்தில் கார்த்தி வருகிறார். இவர் சுந்தர சோழருக்கும், குந்தவைக்கும், ஆதித்த கரிகாலனான விக்ரம் கொடுத்து அனுப்பும் ஓலைகளுடன் சோழ நாட்டுக்கு பயணப்படுவதில் இருந்துதான் கதையே விரிகிறது. வந்தியத்தேவன் வரலாற்றில் வேங்கி நாட்டை சேர்ந்த கீழ சாளுக்கிய மரபினன். ஆதித்த கரிகாலனின் நண்பன். சோழ அரசுக்கு எதிரான சூழ்ச்சிகளை முறியடிக்கும் சூத்திரதாரி.

முழு கதையிலும் இவரது கதாபாத்திரம் விரிந்து இருக்கும். கார்த்தியை கைது செய்ய பழுவேட்டரையர்கள் முயற்சிக்கும்போது அதில் இருந்து தப்புகிறார். குந்தவையை காதலிக்கிறார். நாட்டுக்கு பேராபத்து சூழ்ந்துள்ளது உடனே புறப்பட்டுவா என்று அருள்மொழி வர்மனுக்கு குந்தவை அனுப்பும் ஓலையுடன் ஆபத்துக்களை எதிர்கொண்டு இலங்கையில் இருக்கும் அருள்மொழி வர்மனை அழைத்து வர வந்தியத்தேவன் புறப்பட்டுச் செல்வது பரபரப்பானவை.

இடையில் சோழ அரசை கவிழ்க்க ஐஸ்வர்யாராய் நகர்த்தும் காய்களை அசாத்திய நிர்வாகத் திறன் கொண்ட திரிஷா புத்திசாலித்தமாக தடுத்து நிறுத்துவது கதையின் சுவாரஸ்யம்.

இலங்கைக்கு வந்தியத்தேவனை அழைத்து செல்லும் படகோட்டி பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். இவர் யானையில் வரும் காட்சிகள் ரசிகர்களை கைதட்ட வைக்கும்.

சோழ அரசின் ரகசிய ஒற்றனான ஆழ்வார்க்கடியான் கதாபாத்திரத்தில் ஜெயராம் வருகிறார். இவரது கதாபாத்திரம் நகைச்சுவையானது. அதற்கேற்றாற் போல் தலையில் குடுமியும் தொந்தியுமாக இருக்கிறார்.

இறுதியில் நாடு திரும்பும் அருள்மொழி வர்மன் மன்னராக முடிசூட்டிக்கொள்வார் என்று எதிர்பார்க்கும் நிலையில் உத்தம சோழனுக்கு முடி சூட்டுகிறார். உத்தம சோழன் யார் என்ற முடிச்சு கதையின் திருப்பமாக இருக்கும்.

வானதியாக நடிகை சோபிதா துலிபாலா, பெரிய வேளாளராக பிரபு, பார்த்திபேந்திர பல்லவனாக விக்ரம் பிரபு, சேந்தன் அமுதனாக அஸ்வின், ரவிதாசனாக கிஷோர், வீரபாண்டியனாக நாசர், சோமன் சாம்பவனாக ரியாஸ் கான், மதுராந்தகனாக ரகுமான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Related posts