பாராளுமன்றம் நாளை கூடுகிறது

▪️ ஜனாதிபதி பதவியில் ஏற்பட்டுள்ள வெற்றிடம் குறித்து நாளை பாராளுமன்றத்தில் அறிவிக்கப்படும்

▪️ முன்னர் தீர்மானித்தபடி 19ஆம் திகதி வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு, 20ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்படும் – இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தி சபாநாயகர் தெரிவிப்பு

அரசியலமைப்பு மற்றும் 1981ஆம் ஆண்டு 02ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 04வது சரத்துக்கு அமைய பாராளுமன்றம் நாளை (16) முற்பகல் 10.00 மணிக்குக் கூடவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவித்துள்ளார்.

1981ஆம் ஆண்டு 02ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 04வது சரத்துக்கு அமைய ஜனாதிபதி பதவியில் வெற்றிடம் ஏற்பட்டு மூன்று நாட்களுக்குள் பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும்.

இதற்கமைய குறித்த சட்டத்தின் 05வது சரத்துக்கு அமைய ஜனாதிபதியின் பதவியில் ஏற்பட்டிருக்கும் வெற்றிடம் குறித்து செயலாளர் நாயகம் நாளை (16) பாராளுமன்றத்தில் அறிவிக்கவுள்ளார்.

அதேநேரம், கட்சித் தலைவர்களால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய எதிர்வரும் 20ஆம் திகதி புதிய ஜனாதிபதி பாராளுமன்றத்தின் ஊடாகத் தெரிவுசெய்வது இடம்பெறும் என இன்று முற்பகல் 10.00 மணிக்கு நடைபெற்ற கட்சித் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

இதன்படி எதிர்வரும் 19ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வேட்புமனுக்கள் கோரப்படும் எனவும், அதன் பின்னர் 20ஆம் திகதி புதன்கிழமை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு ஜனாதிபதி தெரிவுசெய்யப்படுவார் என்றும் சபாநாயகர் குறிப்பிட்டார்.

ஜனநாயகக் கட்டமைப்பிற்குள் சட்ட விதிகளுக்கு அமைவாக எந்தவொரு தடையுமின்றி இந்த நடவடிக்கைகளைத் துரிதமாக முன்னெடுப்பதற்கு அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பையும் எதிர்பார்ப்பதாக சபாநாயகர் இங்கு தெரிவித்தார்.

Related posts