நடிகர் பிரதாப் போத்தன் காலமானார்..

நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தன் சென்னையில் உள்ள வீட்டில் உடல்நலக்குறைவால் காலமானார். நடிகரும் இயக்குனருமான பிரதாப் போத்தன் சென்னையில் உள்ள வீட்டில் உடல்நலக்குறைவால் காலமானார்.

பிரதாப் போத்தன் 1952ம் ஆண்டு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்த இவர் படிப்பிற்காக தமிழ்நாட்டிற்கு வந்தார். மும்பை விளம்பர நிறுவனத்தில் நகல் எழுத்தாளராக தனது வாழ்வை தொடங்கிய அவர், 1978ம் ஆண்டு மலையாள திரை உலகில் பரதனின் ஆரவம் திரைப்படம் மூலம் அறிமுகமானார்.

அழியாத கோலங்கள் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த பிரதாப் போத்தனின் வாழ்வில் அது முதல் திருப்புமுனையாக அமைகிறது. அழியாத கோலங்களுக்கு பிரதாப் போத்தனை அழைத்து வந்த பாலு மகேந்திரா, மூடு பனியின் மூலம் பிரதாப் போத்தன் எனும் கலைஞனை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.

ஹாலிவுட் படங்களில் கையாளப்படும் மன பிறழ்வு கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்து தமிழ் திரை வரலாற்றில் அழுத்தமான காலடி தடங்களை பதித்தார். வறுமையின் நிறம் சிகப்பு, குடும்பம் ஒரு கதம்பம், பன்னீர் புஷ்பங்கள் என காலத்தால் அழியாத படங்களில் பங்களிப்பை அளித்துள்ளார். நடிகராக மட்டுமின்றி இயக்குநராகவும் குறிப்பிடத்தக்க படைப்புகளைத் தந்துள்ளார்.

மீண்டும் ஒரு காதல் கதை மூலம் இயக்குநராக அறிமுகமானவர், தாம் இயக்கிய முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மைடியர் மார்த்தாண்டன், ஜீவா, வெற்றி விழா,சீவலப்பேரி பாண்டி போன்ற படங்களையும் இயக்கி உள்ளார். இவ்வாறு நடிப்பு, இயக்கம் என பல்துறை வித்தகராக திகழ்ந்தவர்.

இயக்குநர் பணியை நிறுத்திய அவர் தொடர்ந்து பல்வேறு மொழி படங்களிலும் நடித்து வந்தார். கடைசியாக மம்முட்டி நடித்த ‘சிபிஐ5: தி பிரைன்’ படத்தில் நடித்திருந்தார். 40 ஆண்டுகளாக திரை உலகின் ஒரு அங்கமாக திகழ்ந்த பிரதாப் போத்தன் தனது 69வது வயதில் காலமானார்.

Related posts